LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, February 13, 2025

வல்லமை தாராயோ…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 2019, FEBRUARY 9 - மீள்பதிவு//

வல்லமை தாராயோ….
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’கல்லடி பட்டாலும் சொல்லடி பட்டாலும்
நல்லபிள்ளைக்கழகு சிரித்துக்கொண்டேயிருப்பது’
என்று திரும்பத்திரும்பப் பரிந்துரைத்துக்கொண்டிருக்கிறார்கள்
நல்லவர்கள் சிலர்; நாலும் தெரிந்தவர்கள்…

ஏலாதய்யா எம்குலச் சாமிகளே……
என்ன செய்ய…
வாலைக் குழைக்கத் தெரியாத ஏழைக் கவிக்கு
வாய்த்த முதுகெலும்பு வளையாதது.

சூடு இருக்கிறது
சுரணையிருக்கிறது.

அரணையைப் பாம்பென்றால் ஆமாம்சாமி போட
’கீ’ கொடுத்தால் கைதட்டும் பொம்மையில்லையே கவி.

கருணைக்கொலை யென்ற பெயரில் காலங்காலமாய் பல கவிகளைக்
கைபோன போக்கில் கழுவிலேற்றிவருபவரின்
அருங்காட்சியகச் சுவர்கள் அரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
அறம்பாடலால்.

பாதகஞ் செய்பவரைக் கண்டா லவர் முகத்திலுமிழ்ந்துவிடச் சொன்ன
பாரதி காற்றுபோல்;
யாரொருவரும் கக்கத்திலிடுக்கிக்கொண்டுவிட முடியாது.

அம்மையப்பனாய் அறிவார்ந்த நண்பனாய்
அன்பே உருவான வாழ்க்கைத்துணையாய்
மொழி யிருக்கிறது.

இம்மை மறுமைக்கு இதுபோதும் –
வேறெந்த ஆசானும் தேவையில்லை.

பொந்தில் வைத்த அக்கினிக்குஞ்சுகளும்
வெந்து தணியும் காடுகளும்
வளர்கதையாக _

விரியும் பாதை. செல்வழி தொலைவு
சொற்பநேரமே இருப்பு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சாமி கவிதை.
சரணம் கவிதை.

வணக்கம் சொல்லி விடைபெறுகிறோம்
ஒரு சிறு பிரார்த்தனையோடு:
உம்மைப் பெண்டாளனென்றும் புல்லுருவியென்றும்
அம்பலத்தில் நாக்குமேல பல்லுபோட்டுப் பேசும்
நீசத்தனம்
யார்க்கும் வாய்க்காதிருக்கட்டும்.

No comments:

Post a Comment