LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, January 7, 2025

மனிதமும் மனிதர்களும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மனிதமும் மனிதர்களும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


கவனமாக குறைந்தபட்சம் பத்துபேரையாவது வரவழைத்திருந்தார் கூடவே -
அந்த முதியவர் சுருண்டு படுத்திருக்கும் அழுக்குத் தெருவோரத்திற்கு.

அலைபேசியில் பிறர் எடுக்கும் படம் தோதாக அமையவில்லையென்றால்
செல்ஃபி எடுத்துவிடவேண்டும் என்று தீர்மானித்திருந்தார்.....

அதிகம் செலவு வைப்பவராகத் தெரியவில்லை யந்த முதியவர்
நாலு இட்டிலி ஒரு ஜோடி வேட்டி சட்டையில் நல்ல விளம்பரம் கிடைத்துவிடும்....

என்னதான் சமத்துவம் பேசினாலும் தனக்கு வாங்கும் (உயர்) தரத்திலேயே
தர்மம் செய்யவும் வாங்கமுடியுமா என்ன?

ஃபேஸ்புக்கிலும் செய்தித்தாள்களிலும்பளிச்சென்று தெரியும்படி
ஒப்பனை செய்துகொண்டபின் புறப்பட்டவரின்
பரிவாரங்கள் முன்னமே சென்றடைந்திருந்தார்கள்
அந்த சின்னத் தெருவோரத்திற்கு.

ஏழை முதியவருக்குப் பொட்டலங்களை யளிக்கும்போது
தன்னைப் படமெடுத்துவிடும்படி முன்னமே சொல்லிவைத்திருந்தவர்
வந்திருந்ததை உறுதிப்படுத்திக்கொண்ட பின்
அவர் அளித்ததை
நடுங்கும் கைகளோடு வாங்கிக்கொண்ட முதியவர்
நன்றி தெரிவித்தார் கம்மிய குரலில்.

எல்லோரும் போன பின் தன்னிடமிருந்த இட்டிலிகளில் இரண்டை
தன்னோடு சுருண்டு கிடந்த நாய்க்கும்
எதிர்ச்சுவரின் காத்துக்கொண்டிருந்த காக்காய்களுக்கும்
பகிர்ந்தளித்த பின்
மீதியிருந்த இரண்டை உண்ணத்தொடங்கினார்.

அந்தப்புறமாய் வந்த அரசுப்பள்ளி ஐந்தாம் வகுப்பு
'ஆ' பிரிவு மாணவன் அன்புச்சாமி
எப்பொழுதும்போல் கையோடு கொண்டுவந்திருந்த
வாழைப்பழங்கள் இரண்டை யந்தத் தாத்தாவிடம் புன்சிரிப்போடு தந்து
சாப்பிடுங்க தாத்தா, குண்டாயிடுவீங்க!” என்று அவரைப்
பரிவோடு பார்த்தபடி குறும்பாகச் சொல்லி
யவர் பிரியத்தோடு கையசைத்ததற்கு பதில் கையசைத்தவாறே
சற்றுத் தொலைவில் தெரிந்த பள்ளியை நோக்கித்
துள்ளல் நடை நடந்துசென்றான்.

A POEM BY KA.NAA.SU on REVIEWERES / CRITICS

 A POEM BY

KA.NAA.SU

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
















அழகென்ப….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அழகென்ப…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பார்க்கும் கண்களில் பாய்ந்திறங்கிப்
பதுங்கிக்கொள்ளும் அழகு
போகப்போக அசிங்கமாக
அதிசயமாக
ஆனந்தமாக
ஆக்கங்கெட்டதாக
ஆயிரமாயிரம் PERMUTATIONS AND COMBINATIONS இல்
அன்றாடம்
கலங்கித் தெளிந்துகொண்டிருக்கும்
காணும் கண்கள்
காலத்தின் கைகளாக......

விளம்பர யுகம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விளம்பர யுகம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அரதப்பழசுக் கதையை
அசல் புதுக்கதையைப்போலவே
ஆனமட்டும் எழுதப்பார்த்தும்
முடியாமல் போனதில்
மனமொடிந்துபோன ‘மகாமெகா’ எழுத்தாளரிடம்
ஒரு சகாவாய்
கனிவாய் பார்த்து
கண்சிமிட்டிச் சிரித்தபடி சொன்னதொரு
அசரீரி:
அட, அழலாமா இதற்கெல்லாம்?
அன்றுமில்லை என்றுமில்லை
அதிபுதிய கதை இங்கே இன்று
என்று
ஆறு ஆள் உயர அல்லது அறுபது ஆள் உயர
AD ஒன்று கொடுத்துவிட்டால் போதுமே
அதன்பின் உன் கதையே புத்தம்புதி
தெப்போதுமே….
அது சரி அது சரி
ஆ சிரி சிரி சிரி சிரி....



இருண்மை பாதி - எளிமை பாதி ....... ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இருண்மை பாதி - எளிமை பாதி .......

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
நான் இருண்மையாக எளிமையாக
நானாவித தருணங்கள் நிகழ்ந்தும் நிகழாமலுமாக
ஆனபடியால் நான் நானாகியது
உண்மையாக பாவனையாக
ஆகுமாம் பாவனை யுண்மையாகவும் உண்மை பாவனையாகவும்
ஒரு கை தட்டினால் கேட்கும் கேட்காத ஓசை
கைதட்டல் என்பதே ஓருடம்பின் இருகைகளாகத்
தானிருக்கவேண்டுமா வெனுங் கேள்வி
விதண்டாவாதமென்பாரும்
வாழ்வியல் தர்க்கமென்பாரும்
நமக்கு வெளியேயும்
இடையேயும்
ஆக
நான் நீயாக நீ நானாக
அவனாக இவளாக எதுவாகவுமாகத்
தானோ ஏனோ வானம் வசப்படாதொழிய
துளிகணத்தின் தொலைவு எளிமையா
இருண்மையா வென்றொரு
விடையறியாக் கேள்வியெழுதுங் கவிதை
கடைவிரித்துக்காத்திருக்கும் இருண்மையெளிமை
வழியில்
காலாற நடைபழகியவாறிருக்கும் பொழுதெலாம்
கூட வரும் மொழிபுழங்கும் சொற்களெல்லாம்
சொர்க்கமாக
சொப்பனார்த்தங்களாக
தெய்வம் என்ற சொல் எளிமையா இருண்மையா
என்ற கேள்வியென்றும் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்க
உண்டென்பார் பக்தர்
இல்லையென்பார் பகுத்தறிவாளர்
அவ்வாறேயாவார்களா அன்றுமின்றும்
எனக் கேட்டுச் சிரிக்கும் சொல்லும் சொல்லும்
சொல்லாச் சொல்லும்
எல்லாக் காலமும் எளிமையிருண்மை
யிரண்டறக் கலந்ததாய் துள்ளிக்கொண்டிருக்கும்
மனதின் கண்களுக்குக் காட்சிப்பிழைகளும்
காணருந் தரிசனமாக.....
கழிந்தோடிய வருடங்களில் ஒரு நாளின் ஒரு கணத்தில் நான் படிக்கக் கிடைத்த பறவையின் பெயர்
எனக்குப் பழகியதாக
இன்னொருவருக்குப் பிடிபடாததாக
அட, அப்படித்தான் இருக்கட்டுமே
அதனாலென்ன....?

SELECTIVE AMNESIAவும் STRATEGIC விழிப்பும்

 'படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்'

_ பாரதியார்.
.................................................................................................................................
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த அவலத்தைப் பேசத் தவிர்ப்பவர்களும்,
பூசி மெழுகிப் பேசுபவர்களும்,
இது அரசியல் சதி என்று கூறவும் தயாராக இருப்ப வர்களும்,
இந்த அவலத்தைப் பேசாமல் பெண்ணுக்கு ஒரு விருது கூட இல்லையா என்று கண்டனம் தெரிவிப்பவர்களுமாய் -
இங்கே பெண்ணியவாதம்
’SELECTIVE AMNESIAவிலும்,
STRATEGIC விழிப்பிலுமாய்
சீரழிந்துகொண்டிருக்கிறது.

மலைமுழுங்கிகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 //2022, JANUARY 7 - மீள்பதிவு//

மலைமுழுங்கிகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

மலையை மறுபடியும் மறுபடியும்
மறுபடியும் மறுபடியும்
மழுங்கிய சிறு கற்துண்டமென்றே
கூறிக்கொண்டிருந்தார்கள்
மாமா அப்பா மாடி வீட்டு அங்க்கிள்
மோகனா அத்தை
மார்க்கெட்டை ஒட்டியுள்ள தெருவில்
குடியிருக்கும் மாத்ஸ் டீச்சர்
இன்னும் சில பேர்
அவனுக்குத் தெரிந்தவர்கள் இவ்வளவுதான்
தெரியாதவர்களில் எத்தனை பேரோ
திரும்பத்திரும்பச்சொல்லிச்
சொல்லிச்சொல்லி
மெல்லமெல்ல அம்மியையே நகர்த்த
முடியாதபோதும்
சொல்லித்தீராத கதையாய் அதையே
சொல்லிக்கொண்டிருக்கும்
பெரியவர்களைப் பார்த்து
என்றேனும் அந்தக் கற்துண்டத்தைக்
கையி லெடுத்துக்
கிட்டத்தில் பார்த்திருக்கிறீர்களா
என்று பட்டென்று கேட்டுவிட்டதில்
கிடைத்த பதில் குட்டு மட்டுமே
மொட்டைத்தலைக்குட்டிப்பையனுக்கும்
தட்டை முறுக்கு தின்ன மிகவும் பிடித்த
சுட்டிப் பெண்ணுக்கும்.