LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, February 14, 2026

மூன்றாவது நதிகளுக்கு *********************************** ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மூன்றாவது நதிகளுக்கு

***********************************
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

(அலைமுகம் என்ற தலைப்பிலான என் முதல் தொகுப்பில் இடம்பெறுவது)
..........................................................................................................................
கல்லூரி நாட்களில் ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரம் ஹாம்லெட் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. நடிகர்களில் மம்முட்டி. அவர் அனந்தேட்டன் என்ற பெயரில் ஒரு சரித்திரக் கதாபாத்திரமேற்று நடித்த படத்தைப் பார்த்த தாக்கத்தில் எழுதப்பட்ட கவிதை இது. படம் பெயர் நினைவில்லை. (எனது முதல் கவிதைத் தொகுப்பில் - அலைமுகம்- இடம்பெறுகிறது)
கால வரையறைக்குட்படாத, நெடுந்தொலைவுப் பிரியம், வாழ்வியல் பலன் எதிர்பாரா அன்பு உண்டுதானே!
......................................................................................................................................
மூன்றாவது நதிகளுக்கு
***********************************
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
**********************************
ஒவ்வொரு அசைவிற்கும்
உள்ளலை கொள்ளும் வைரப்பளீரிடலாய்,
காற்றை வாரியணைக்கக் கரங்களில் பெருகும்
காட்டாற்றுத்தினவாய்,
உடைந்து விடாதபடி குமிழ்களை
அடைகாத்துக் கொள்ளக்
கடுந்தவமியற்றும் மனதின் காலாதீதமாய்
அசந்த நேரத்தில் வசப்படுத்தி விட்ட இந்த
உயிர்ப்பின் ரஸவாதத்தை
ஊமையாய் சுமந்து கொண்டிருக்க முடியவில்லை
உரக்கப் பாட வேண்டும்
கண்டம் கானாமிர்தமாய்
காடுமலை மேடெல்லாம் கரைந்துருகப்
பாடிப் பரவ வேண்டும்
அண்டசராசரமும் காண
ஆனந்தக் கூத்தாட வேண்டும்
வரவேற்பிற்கும் பிரிவுபச்சாரத்திற்கும்
இடைநிரம்பியது வாழ்க்கை
வழியில் - ஆறாவதிலோ, அடுத்த மரத்திலோ
எனக்கான அம்பு
அழியு முன்
என் உயிர்க்கோலப் புள்ளிகள்
கோடுகளையெல்லாம்
கொண்டாடி விட வேண்டும்
உன்னையும்
அனந்தேட்டா!
அறிய மாட்டா யென்னை
அதனாலென்ன?
ஹாம்லெட்டுக்கும் தெரியாது!
(*மம்முட்டிக்கு)

கவி பிரம்மராஜனின் கவிதை

 கவி பிரம்மராஜனின் கவிதை

காதல் வழியே கவித்துவம் குறையாமல் வாழ்வின், உறவின் நிலையாமையை, புதிர்த் தன்மையை, அவற்றில் மனித மனம் உணரும் அலைக்கழிப்புகளை, அவற்றை மீறி மனம் அன்பில் கொள்ளும் நம்பிக்கையை என பலப்பலவற்றை அன்பின் நெகிழ்ச்சியும் எதிர்பார்ப்புமாய் பேசும் வரிகள்.

எத்தனை நுட்பமான படிமங்கள், குறியீடுகள், காட்சிகள்!

இவையும் நல்ல கவிதையின் அடிப்படை அம்சங்களா கத் தோன்றுகிறது.

துளிஞானம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 துளிஞானம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குறையென்றால் குறைக்கவும்
கூட்டென்றால் கூட்டவும்
கைவசப்படவில்லை
காலமும்
கவிதையும்.

இல்லாதிருக்கும்….. - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இல்லாதிருக்கும்…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பாழுங்கிணறின் ஆழம்
புலிவாய்ப் பெரும்பிளவு
ஆயிரங்குளவிக்கொட்டு
பலிபீடம்
உருள்தலை
பசித்தவயிறு
பிரார்த்தனையின்
எட்டாத் தொலைவு
சுட்ட சட்டியை விட்டுவிடாக் கை
மைபோட்ட வெற்றிலை காட்டும்
முகம்
கொடூரப் பேயாட்டம்
கூர்தீட்டிய வாள்
முனைக் குரல்வளை
காணாமல் போன குழந்தையின்
விசும்பல்தடம்
உள்ளிழுக்கும் நச்சுப்புதர்க்காடு
ஓடுடைந்த வீட்டிலிறங்கும் கருநாகம்
காகத்தின் எச்சம் மண்டையை எரிக்கும்
கண்கிழித்துருவாகுமொரு கனவு
எனக்கென வந்த நிலவு
தேய்வழிச்செலவு
உண்ண உணவு அருந்த நீர்
சுவாசிக்கக் காற்று சிறகடிக்க வானம்
செரிமானமாகா அவமானம்
இருந்தும்
அதிரூபம்
அருமருந்து
அன்றாடம்
ஆயினும்
அதிசயம்
ரகசியம்
சொல்லும் கிளிப்பிள்ளை
சொக்கத்தங்கம்
சூக்குமக்கவிதை
சிதம்பரம்.

DR. AMBEDKAR ON DEMOCRACY

 DR. AMBEDKAR ON DEMOCRACY

INDIAN COSTITUTION



படைப்பும் படைப்பாளியும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 படைப்பும் படைப்பாளியும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
நான் - நான் - நான் - நான் -நான்
என் றான பெருங்குரலில்
கண்ணில் பட்ட கூரை மேலெல்லாம்
கண்றாவியாய்த் தாவி யேறி நின்று
கூவிக்கொண்டேயிருந்தார் அவர்.
மானே தேனே என்று எழுதினால் மட்டுமே
இலக்கிய விமர்சனமாகக் கொண்டவர்.
'போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே
என்று துதித்தாலோ
அதி பரவசத்தில் அதையே உலகத்தரமான திறனாய்வு
என்று உணர்வுபொங்கப் பதிவிடுவார்.
அப்படி எழுதப்பட்ட ஓரிரண்டை
தன் அடையாள அட்டைகளாக
அச்சிட்டுக்கொண்டார்.
அவரவர் வேலையிலாழ்ந்து
அவசர அவசரமாகச்
சென்றுகொண்டிருந்தவர்களை
நிறுத்தி
’என்னைப் படிக்காத வாசகர்கள்
என்ன வாசகர்கள்
எச்சக்கலைகள்’ என்றார்.
’என் எழுத்தின் எடையே எல்லோரைக்
காட்டிலும் அதிகம்
என்று
எடுத்துச்சொல்லாத விமர்சனமும்
அடித்துச்சொல்லாத திறனாய்வும்
என்ன எழவுக்கு எழுதப்படுகின்றன
அப்படி எழுதுகிறவர்களைக் கழுவேற்றுவேன்’
என்று
நடுத்தெருவில் நின்று
நாராசக் கூப்பாடு போட்டார்.
என்னமோ சொல்லிவிட்டுப்போகட்டும்
பாவம் - அவர் வருத்தம் அவருக்கு
என்று
அனுதாபத்துடன் சிலரும்
அவர் என்ன சொல்கிறார் என்பதே புரியாதவர்களாய்
சிலரும்
அவர் என்னமும் சொல்லிவிட்டுப்போகிறார்
நம் வேலையை நாம் பார்ப்போம் என்று
சிலரும்
ஏன் தானோ இவர் இப்படித்தானோ
வென
திரும்பித்திரும்பிப் வேடிக்கை பார்த்தவாறே
சிலரும்
கடந்துபோய்க்கொண்டிருக்க ¬_
காலமும்
காவியமும்
அவ்வண்ணமே
கடந்துபோய்க்கொண்டிருக்க_
இன்னமும் காட்டுக்கத்தலாய்
கூவிக்கொண்டிருப்பவருக்கு
முன்னும் பின்னும்
ஏற்றமிகு எழுத்தாக்கங்களும்
படைப்பாளிகளும்
இன்றும் என்றும்
வந்துபோனவாறே.....

விதைப்பும் அறுப்பும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விதைப்பும் அறுப்பும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒவ்வொரு நகர்விலும்
ஒருவகை ‘method in madness’ இரண்டறக் கலந்திருக்க
தனக்கு மிகவும் பிடித்த வெட்டாட்டத்தை
இடையறாது விளையாடிக்கொண்டிருக்கிறார் விமர்சகர்.
சுழற்றப்படுவது கிழிந்த காகிதவாள் என்று
புரிந்துகொள்ளாமல்
எளியோர் சரிந்துவிட
இறந்துபட
வி்ழுந்து விழுந்து சிரிக்கிறார்.
பெருங்குரலெடுத்து.
இல்லாத அரியணையில் பொருந்தியமர்ந்தபடி
கையிலிருக்கும் பட்டியலில் அவ்வப்போது
சில பெயர்களை சேர்த்தும் நீக்கியும்
பொழுதுபோக்கிக்கொண்டிருக்கும்
அவருக்குப் பிடிபடுமோ
தயாராகிக்கொண்டிருக்கும் இன்னொரு பட்டியலின்
வடிவமும்……
அதில் அவருடைய இடமும்?

உண்மை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உண்மை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
உண்மையெனும் ரோஜாவின் மணம்
ஊர்முழுக்கப் பரவும் என்றபடியே
இதழிதழாய்ப் பிய்த்துக்கொண்டார்கள்.
ஆளுக்கொரு பிடி யள்ளிக்கொண்டார்கள்.
சிலர் வாயில் போட்டு மென்றார்கள்
சிலர் மூடிய உள்ளங்கையில் முனைப்பாகக் கசக்கியெறிந்தார்கள்.
சுருங்கிக்கிடந்த இதழொன்றை யெடுத்து
இதுதான் முழு ரோஜா என்றார் ஒருவர்.
பின்னோடு வந்தவர்கள் ’அதேதான், அதேதான்’
என்றார்கள்.
வழியெங்கும் காலையில் இறைந்துகிடந்த
இதழ்களின் வண்ணம்
அந்தியில் வெளிறிப்போயிருந்தது.
இதுதான் அசல் ரோஜா நிறம் என்றார் ஒருவர்.
‘அதேதான் அதேதான்’ என்றார்கள்
அருகே நின்றிருந்தவர்கள்.
நூற்றுக்கு நூறு உண்மை
சில பத்திருபதுகள் குறைந்து திரிந்து
அரைகுறை உண்மையாகி
கரைகடந்து நகர்வலம் போய்க்கொண்டிருப்பதைக்
கண்ணால் பார்த்ததாய் யாரோ சொல்ல
யாரோ கேட்க..........

நீள அகல வரையறைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நீள அகல வரையறைகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

பந்திப்பாயை விரித்துப்போட்டால்
நான் முந்தி நீ முந்தி என்று
பெரியவர் சின்னவர் பக்கத்துவீட்டுக்காரர்
உற்றமித்ர பந்துக்கள் ஊர்ப்பெருந்தனக்காரர்கள்
படித்தவர் படிக்காதவர்
பிடித்தவர் பிடிக்காதவரெல்லாம்
பாயாசம் சாப்பிட,
பப்படம் சாப்பிட
பிரியாணி லட்டு பாசந்தி பிஸிபேளாபாத்
வறுவல் பொரியல் வச்சதெல்லாமே
பிரமாதம் பிரமாதம் அருமையோ அருமையென
உருகிக்கிறங்கி
திரும்பத்திரும்ப கடைவாயில் எச்சிலொழுகியவாறு
உறங்கும்போதும் உச்சாடனம் செய்ய
விழுந்தடித்துக்கொண்டு வருவார்களெனக்
கச்சிதமாய்ப் போட்ட கணக்கெல்லாம்
பொய்யாக_
வந்தவர்கள் அன்போடு மாப்பிள்ளை – பெண்ணை
வாழ்த்திவிட்டு
வழக்கம்போல் சுந்தரத் தமிழினில் உரையாடியவாறே
சமோஸாவையும் சிங்கிள்-டீயையும் ருசிக்க
தெருவோர தேனீர்க்கடைக்காய் காலெட்டிப்
போடக்கண்டு
பட்டுவேட்டி ஜரிகை அங்கவஸ்திரக்காரர்
பத்துநூறு பவுன் தங்கச்சங்கிலிக்காரர்
காலிக் கூடத்தில்
ஓலமிட்டபடியே…….

மெய்த்தோற்றங்கள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மெய்த்தோற்றங்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
பிறவி நடிகர் திலகங்களும்
நடிகையர் திலகங்களும்
தருவித்துக்கொண்ட நவரச முகபாவங்கள்
புகைப்படங்களை ஒரு திரைப்படத்தின் காட்சித்துணுக்குகளாக நம் முன் வைத்தவாறே.
அழும்போதும் ஆத்திரப்படும்போதும்
அழகாகக் காட்சியளிக்கவேண்டும் என்ற கவனமாகவே யிருக்கும் நடிகையர் திலகங்கள்
இயல்பாக நடப்பதாய்
இடுப்புவளைவை எடுப்பாக்கிக் காட்டியவாறே
ஒயிலாக நடந்துகொண்டிருக்கிறார்கள்
இணையப்பக்கங்களில்.
அவர்கள் வெட்டியொட்டும் வாசகங்களை
யெல்லாம்
அவர்களுடையதாக மாற்றிவிடும் வித்தையை
வெகு இயல்பாகக் கைக்கொண்டவர்கள்
இருகைகளிலுமான இருபதுவிரல்களால் எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள்.
இருக்கையை விட்டு இம்மியும் நகராமல்
வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பவர்கள்
இந்தத் திரைப்படம் ‘ஆர்ட்’ படமா ‘மசாலா’ப் படமா
என்று தங்களைத்தாங்களே கேட்டுக்கொள்ளும் நாள்
தொலைவிலோ அருகிலோ
இருக்கிறதோ இல்லையோ….

மாஜிக்கல் ரியலிஸமும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மதிப்புரைகளும்

மாஜிக்கல் ரியலிஸமும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


‘மிகவும் அருமையான கதை யிது
இருக்கும் எட்டு பக்கங்களில் ஏழிலுள்ளவை
ஏற்கெனவே எழுதப்பட்டிருப்பதே யென்றாலும்’
என்கிறார் ஒரு விமர்சகர் _
‘ரேட்டிங்’குக்கான ஐந்து வட்டங்களை யடுத்து
இன்னும் ஐந்து வட்டங்களை யிட்டு
பத்தாவதில் ’டிக்’ கொடுத்து.
’பார்த்துக்கொண்டிருக்கும்போதே முளைத்த பரு
புதுமையான கதைக்கரு’
’முளைத்த’ என்பதற்கு பதில்
’இளைத்த’ என்று எழுதியிருக்கலாம்.
மற்றபடியெந்தக் குறையுமில்லை’
என்று இன்னும் ஐந்து வட்டங்களை யிட்டபடியே
வலிக்காமல் குட்டுகிறார் ஒரு திறனாய்வாளர்.
வலித்தாலும் பரவாயில்லை யென்று
எல்லா விரல்களிலும் வகைவகையாய்
மோதிரங்களை அணிந்தபடி.
ஒரு கதையை யொருவர் எழுதினால்
அது அருமையாவதும் புதுமையாவதும்
அதை யின்னொருவர் எழுதினால்
கழுதையின் பின்னங்காலால்
உதைக்கப்படவேண்டியதாவதும்
மதிப்புரைகளின் மாஜிக்கல் ரியலிஸமாக…..

அறிவாளி – அறிவீலி - அரசியல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அறிவாளி – அறிவீலி - அரசியல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)




தன்னை யறிவாளி யென்று சொல்கிறவரின் சொல்கேட்டு
சொல்லமுடியாத ஆனந்தத்தில் சொக்கிநிற்கிறார்கள்;
சுற்றிச் சுழல்கிறார்கள்; சுடரொளி வீசுகிறார்கள்;
சுநாதமிசைக்கிறார்கள்….
சொல்பவர் அந்தச் சொல்லைச்
சொல்லத் தகுதியானவராவென்றெண்ணத்
தலைப்படாமல்
சொல்பவரின் சொல்படி தானே அறிவாளி யென்று சுற்றுமுற்றுமுள்ளவர்க்கெலாம் தன்னைச்
சுட்டிக்காட்டும் முனைப்பில்
காரணகாரியங்களோடு மறுத்துப்பேசுவோரை
கோமாளிகளாகச் சித்தரித்து
சொந்த சகோதரர்களுக்கு முட்டாள் பட்டம்
கட்டப்படுவதை கைதட்டி ரசித்து _
சிறகசைத்துப் பறக்காத குறையாய்
சீக்கிரசீக்கிரமாய் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து
வரிசையில் நின்று
வாழ்நிலத்தைத் தன் வம்சாவளிச் சொத்தாக பாவிக்கும்
வெள்ளி ஸ்பூனோடு பிறந்தவர்க்கே
வாக்களித்துவிட்டு வந்தார்கள்
வெற்றிப்புன்னகையோடு.
அந்த வாக்காளர்களேே அறிவாளிகள் என்று அறைகூவலிட்டவாறே
அறிவாளிக்கெல்லாம் அறிவாளி
அரியணையில் அமர்ந்துகொள்ளுமோர் நாளில்
அவருடைய தன்னலத்தால் அறிவாளிகளாக
போற்றிப் பாடப்பட்டு
அடுத்தவர்களை முட்டாள்களாய் மட்டுமே
அடையாளங்காணப் பயிற்றுவிக்கப்பட்ட
பரிதாபத்துக்குரிய உண்மையான அறிவீலிகள்
அடிமையாய் அந்த வேலியிட்ட திறந்தவெளியில்
அம்மணமாய்
ஒருவர் பின் ஒருவராய் அனுப்பிவைக்கப்பட
காட்டெருமை சிங்க வகையறாக்கள் எங்கிருந்தோ சீறிப்பாய்ந்து
அவர்களைக் குதறத் தொடங்கும்.
சக்கரவர்த்திகளின் அட்டகாசச் சிரிப்பைக் கேட்டவாறே விழுந்துகிடக்கும் குற்றுயிர்கள்.