LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, December 31, 2024

கையறுநிலைக் கவிதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கையறுநிலைக் கவிதை

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
காதல் அரும்பும் பருவம்
காமம் வாழ்வியல்திறம்....

சிறு முத்தம் பகிரவும்
புதர்மறைவைத் நாடிச்சென்று
மனம் நிறைந்தவரோடு
தனித்திருக்கும் மரபில் வந்த
நாம்.....

சங்க காலந் தொடங்கி
யெத்தனையெத்தனையோ நாள்
ஒத்திகைபார்த்துக்கொண்டிருப்பார்கள்
உண்மைக்காதலர்கள்....

மறைவிலிருந்து உற்றுப்பார்த்துக்
கொண்டிருப்பார்கள்
பெண்ணை வன்புணர்வதே ஆண்மையென்றும், வண்டிவண்டியாகப் பணம் சம்பாதித்து வாழ்வாங்குவாழ்வதற்கான வழியென்றும்
பழிதீர்க்க மிக எளிய மார்க்கம் என்றும்
அதிகாரமுணர்த்தும் நோக்கத்தோடும்
துகிலுரியும் நாதாரிகள்
நரகமென்றொன்றிருந்தால் அதில்
தள்ளப்படவேண்டிய மாபாவிகள்....

மனம் பிடித்தவனுக்குத் தரும் ஒரு
சின்ன முத்தத்திற்கு,
அணுக்கமான தொடலுக்கு
விலையாய்
என்னவெல்லாம் கொடுமை இழைக்கப்படுகிறது
பெண்ணுக்கு....

பெண்ணுக்கு மட்டுமா...

இருளின் போர்வைக்குள் இருவரிடையே
என்ன நடந்திருக்குமென்று
போலி அக்கறையோடு விலாவரியாகப்
பேசிப்பேசியே
வருமானமீட்டும் யூட்யூபர்கள்...

யூட்யூபர்கள் மட்டுமா....

நடுநிலையாளர்களெனும் பதாகையின்
கீழிருந்து
ஒரு கட்சி சார்பாகவே செய்திகளைத் தரும்
பலப்பல 24 X 7 செய்திச் சேனல்கள்....

சேனல்கள் மட்டுமா .....

மண்ணோடு மண்ணாகாமல்
அந்த மாபாதகர்கள்
அன்றாடமிங்கே வலம்வந்து
கொண்டிருக்கக் கண்டு
வெட்கித்தலைகுனிந்து
வழியறியாது கலங்கிநிற்கும்
அன்புடை நெஞ்சம்தாம் கலந்த
அந்தச்
சின்னதொரு முத்தத்திலிருந்து
சிதறியவாறு கண்ணீர்த்துளிகளும்
குருதித்துளிகளும்
இன்னும் வேறும்
ஆறாது ஊறும்;
நாறும்...


No comments:

Post a Comment