எழுத்தின் உயிர்
தலைவரின் கடைக்கண் பார்வை நம்மீது படுமா என்று நாம் தவித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை.
அத்தனை எளிமையாய் நம் புத்தக அடுக்கில் ஓர் ஓரமாய் ஒதுங்கியிருக்கும்.
அல்லது ஒரு முக்காலியில் கிடக்கும்
அல்லது ஒரு கை உணவு உண்டுகொண்டிருக்க
மறுகையில் அலட்சியமாய் ஏந்தப்பட்டிருக்கும்.
ஆசானாய் காதலியாய் நண்பனாய் குழந்தையாய் அன்பளிப்பாய் அந்திப்பொழுதாய் அகிலாண்டகோடியாய்
அடைக்கலம் தந்திருக்கும்.
நம்மை சிறு பறவைகளாய் பாவித்து
அது பாட்டுக்குப் புதுப்புது அர்த்தங்களை
வழியெங்கும் இறைத்துக்கொண்டே போகும்.
சூரியனில் இறைமை தன்அடையாளமற்றுக்
கலந்திருப்பதுபோல் புத்தக ஆசிரியர்.
வாசிக்கும் நேரம் வலது கை கொடுப்பதை
இடது கை யறியாத திறம் நூலாசிரியம்.
காலம் மீறி வாழ்வது நல்லெழுத்தின் அடையாளம்
எல்லாமறிந்தும் புத்தகங்களைப் புதைகுழியிலிட்டுப் பார்ப்பவர்
பிரசவிக்கக்கூடும் இறந்த குழந்தைகளை.
No comments:
Post a Comment