LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, December 31, 2024

’ஷெர்லாக் ஹோம்ஸு’ம்(நானே!) ’வாட்ஸனு’ம்(நானே!) - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 //2016, DECEMBER 26 - மீள்பதிவு

’ஷெர்லாக் ஹோம்ஸு’ம்(நானே!) ’வாட்ஸனு’ம்(நானே!)

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

நகசமும் நகரசமும் 'தும்பிக்கை-தந்த'ப் பிராணியின்
ஒருபொருட்பன்மொழியாக, பல்பொருளொருமொழியாகும்
நகாயுதம் குறிக்கும் பறவைகளிலும் விலங்குகளிலு முள
கொம்பும் வாலும் கடைவாய்க் கூர்பல்லும், வளைநகமும்,
வண்ணச்சிறகும் இன்னென்னவும் பதிலியாகுமோ உன் என் ஒரு சொல்லுக்கு?
நகுலன் சிவனும் அறிஞனும் பஞ்சபாண்டவர்களில் ஒருவனும் மட்டும்தானா? நல்ல கவியும்தானே!
நகிலம் நக்கிதம் நசலுண்டாக்க,
நிழல்யுத்தம் செய்தவன் மன நகுலம் மூச்சுத்திணறும் நாகமின்றியே.
நகதியன்ன நல்வார்த்தைகள் சொல்பித்து நசைநர்
நகுதத்தினடியில் வழிநடத்திக் கிடத்த,
அந்த நக்கவாரப் பக்கவாட்டுகளி லுள்ள நீர்நிலைகளில்
நக்கரமுண்டா வென்றறியும் நகுதாவும் உண்டோ?
நகேசனின் உள்ளாழத்தில் நடுங்கத்தொடங்கிவிட்டதோ நிலம்?
என் நகரூடத்திற்கும் நகாசிக்கு மிடையே உள்ளோடும் நரம்புகளின் சிக்குகளை சிடுக்குகளை நானே நேரிடையாய் காணமுடியுமோ?
நக்கிரை, நக்குடம் என்றே நாசியைச் சுட்டும் நகாசுவேலை
நவீனமா? புராதனமா?

............................................................................................
(பி.கு: தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றின் பக்கங்களைப் புரட்டிப்பார்க்க நேர்ந்தபோது ‘ந’ என்ற எழுத்தின் பக்கங்களில் கீழ்க்கண்ட பல வார்த்தைகளையும், அவற்றிற்கான அர்த்தங்களையும் படித்தேன். மலைப்பாக இருந்தது! அதன் விளைவே இக்கவிதை! – ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)
நகரூடன் – மூக்கு
நக்கிரை – மூக்கு
நக்குடம் - மூக்கு
நகாசி – நெற்றி
நகதி – பொன்கட்டி, கருவூலம்
நகரசம் – யானை
நகசம் – யானை
நகாசுவேலை – பொற்கொல்லர்களால் செய்யப்படும் நுணுக்கமான பொன்நகை வேலைப்பாடு
நகாயுதம் – சேவல், சிங்கம், புலி, கருடன், கழுகு
நகிலம் – பெண்ணின் மார்பகம்
நகுலம் – கீரி
நகுதா – மாலுமி
நகுத்தம் – புங்கமரம்
நகுலன் – சிவபெருமான், அறிஞன், பஞ்சபாண்டவருள் ஒருவன்
நகேசன் – மலைகட்குத் தலைவனாகிய இமயமலை.
நக்கரம் – முதலை
நக்கவாரம் – ஒரு தீவு, வறுமை
நக்கிதம் – இரண்டு
நசலாளி – நோயாளி
நசல் – நோய்
நசைநர் - நண்பர்கள்




No comments:

Post a Comment