வரியிடை வரிகளில் சிந்தச்செய்து கொண்டேயிருக்கவேண்டும்
சூடாக அருவத் தம்பலர்களில் தன்முனைப்புச் சக்கரையிட்டு
செத்துப்போய்விட்ட சகமனிதர்களை சீரான தொனியில்
சகட்டுமேனிக்கு வசைபாடுவதே சிறப்பான இலக்கியத்துவமாக
பரபரவென்று தயாரித்து ஆவிபறக்கத் தரவேண்டும் – தளும்பத்தளும்ப.
மறவாமல் ஒருபக்க நியாயத்தை மறுபக்க நியாயமாகவும் மாற்றிக்காட்டப் பழகவேண்டும்.
மறுதலிப்போரை மானங்கெட்ட கூலிப்படையினராகக் கேலிசெய்யும்
ஞானமார்க்கந் தெரிந்து நடக்கப் பயிலவேண்டும்.
நான் அந்தத் தெருவில் அன்று நடந்தேன்
இந்தத் தெருவில் என்று நடந்தேன்
என்று முந்தி பிந்தி நடந்ததையெல்லாம்
சொந்தக்கால்களுக்குட்பட்ட பரப்பாக்கிக்கொள்ளவேண்டும்-
சௌகரியமானவற்றை மட்டுமே என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.
இருபது பேரிலோ அறுபது பேரிலோ ஒருவராக இடம்பெற்றிருந்ததை
இவரேயெல்லாமாய்த் திரித்துத் தன்னைப் பெரிதுபடுத்திக்கொள்ளத்
தெரியவேண்டும்.
மனதின் ஆழத்தில் மண்டிக்கிடக்கலாகும் மகா கண்றாவி
போர்னொகிராஃபிக் காட்சிகளை
திருத்தமாய் வெட்டியொட்டித் தகவமைத்துத் தந்து
தணிக்கைக்குத் தப்பத்தெரிந்த தரமான திரைப்பட வர்த்தகராய்
தன்னைத் தயாரித்துக்கொள்ளும் வித்தகத்தில் தேர்ச்சிவேண்டும்.
கிசுகிசுப்பாய் புறம்பேசித் திரிந்து அதையே
இலக்கிய ரசனை விகசிப்பாய்
அளந்துதரத் தெரியவேண்டும்.
புகழுக்கான தன் அலைச்சல் இலக்கியத் தேடல்
இன்னொருவருடையதோ நக்கிப் பிழைத்தல்
1, 2, 3, 4, 5, 6, 7, 8....... என்று வேறொருவர் 100 வரை எழுதிக்கொண்டேபோனால் அது பிரதியை இட்டுநிரப்பல்
அதையே 100, 99, 98, 97, 96, 95, 94.......
என்று பின்னோக்கி ஒன்று வரை தான் எழுதினால் அது
இலக்கியமாகிவிடுதல்
என்ற பிரிகோட்டுப் பார்வையைப் பெற்ற முக்கண்ணராயிருக்கவேண்டும்.
பதிலளிக்கும் பொழுதில்லாதவரை, வழியில்லாதவரை கதியில்லாதவரை
கும்மாங்குத்துக் குத்திக்கொண்டேயிருக்கவேண்டும்.
தெம்மாங்குப் பாட்டோ, திரைப்பாலட் மெட்டோ
பின்னணியிசையுமிருந்தால் பெரிதும் உகந்ததுதானே.
எதிர்வினையாற்ரும் நிலையிலில்லாதவரை குதித்துக் குதித்துப் பிடரியில் ஓங்கியடிக்கும்
மனிதநேயவாதியாகத் தன் தலை பெருத்து வீங்கவேண்டும்.
தனதாமெனில் தன்முனைப்பு அறமென்றும்
பிறருடையதெனில் அது அசிங்கம் அராஜகம் ஆணவமென்றும்
பிரதிக்கு உள்ளேயும் வெளியேயுமாய்
பொருள்பெயர்த்துக்காட்ட வேண்டும்.
கொலையே செய்திருந்தாலுமதைக் கலையாக்குவதோடு நில்லாமல்
கனகச்சிதமாய் நியாயப்படுத்திக் காட்டுவதே நிலைப்பாடாகக் கடவது.
உன்னிப்பாய்
பன்னிப்பன்னி யுரைத்தொரு
வன் கருத்தை
வெளிப்படையாகவோ உட்குறிப்பாகவோ பதிவுசெய்தல்
இன்றியமையாதது.
கொசு கடித்ததை பசுவின் பாலில் கொஞ்சம்போல் தண்ணீர்விட்டுக் காய்ச்சியதையெல்லாம்
உள்ளதை உள்ளபடிச் சொல்வதுமொரு பாவனையாக
சுயசரிதையாவதும் சொத்தைக்கதையாவதும் அவரவர் திறமாக
அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்க
ஒரு தன்வரலாற்றுப்பிரதியில் தனக்கென்ன கிடைக்குமென்று
பார்க்கும் வாசிப்போர்
யாசிப்போராய்
நிரம்பாத பிச்சைப்பாத்திரத்தோடு
வருந்தி நிற்பதே அவர் தலைவிதி
அல்லது எழுத்தூக்கலையின் நிர்க்கதி.
பிரதியின் முதலிலோ இறுதியிலோ
இந்த வரிகளுக்குத் தலைப்பாகவுள்ள
வரியை இடம்பெறச்செய்யவேண்டும்
மறவாமல் _
பொறுப்புத்துறப்பாக.