LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, September 5, 2014

போகவேண்டிய தூரம் - சிறுகதை

சிறுகதை
போகவேண்டிய தூரம்.
’அநாமிகா’
(லதா ராமகிருஷ்ணன்)

* கணையாழி, ஜூன் 1999 இதழில் வெளியான சிறுகதை.
’நினைப்புக்கும் நடப்புக்கும் நடுவே’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது



கத்திப்பாரா ஜங்க்‌ஷன் தாண்டும்போதே இரவு ஒன்பதரை மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. கிண்டி வந்துவிட்டது என்ற நினைப்பே நிம்மதியளித்தது.  ‘இன்னும் பத்து நிமிடங்களில் சைதாப்பேட்டை வளைவு வந்துவிடும்… முடிந்தால் நடந்துபோய் விடலாம். இல்லை, ஏதாவது ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு…. இல்லை, அது முடியாது. கைப்பையில் ஐந்து ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. ‘ரயில் பாஸ் இருக்கிறதே’ என்ற நினைப்பில் இன்னும் இரண்டு மூன்று ரூபாய் திரட்டிக்கொள்ளாமல் தாம்பரத்திற்குப் போனது இன்றைய நிலவரத்தின்படி அசட்டுத் துணிச்சல் தான். என்ன செய்வது….? எப்படியோ, கிண்டி வரை வந்தாகிவிட்டது….

ஆனால், வண்டி நேராகப் போகாமல் கிண்டி எஸ்டேட் புறமாய் திரும்பிவிட்டது. மறியல் ஊர்வலமெல்லாம் முடிந்து ஆளுநர் மாளிகையிலிருந்து  அண்ணாசாலை யெல்லாம் ஒரே போக்குவரத்து நெரிசலாம். வண்டிகளெல்லாம் மனிக்கணக்காக ஆங்காங்கே காத்துக்கொண்டிருக்கின்றனவாம்.

யோசிக்க நேரமின்றி வண்டி வேறு தடத்தில் விரைந்துகொண்டிருந்தது. கே.கே.நகர் கண்டது. உதயம் திரையரங்கைப் பார்த்ததும் இதைவிட ஜெயராஜ் பக்கமாய் இறங்க வழியில்லை என்ற கணக்கில் இறங்கியாகிவிட்டது. கூட இறங்கியவர்கள் சௌதியில் காணாமல் போய்விட்டார்கள். அவர்களில் பெண்கள் இறந்ததாக ஞாபகமில்லை.

வகை தெரியாமல்  சற்று நேரம் தியேட்டர் பக்கமாய் இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தாள். கடந்துசென்ற கார், சைக்கிள்கள் சிலவற்றிலிருந்து ஓரிருவர் திரும்பிப் பார்த்தார்கள். 5E வந்தால் ஏறி மேட்டுப்பாளையத்தில் இறங்கி எப்படியாவது மூச்சைப் பிடித்து நடந்துவிடலாம் என்று மனதில் ஒரு நப்பாசை.

“இங்கே எந்த வண்டியும் வராதும்மா. எதுக்கு வீணா நின்னுகிட்டிருக்கே?” போகும் வழியில் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றார் ஒரு ரிக்‌ஷா ஓட்டுநர். ஆட்டோ ஒன்றும் கண்ணில் படவில்லை. இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. வனாந்திரத்தில்  நின்றுகொண்டிருப்பது போல் அசாதாரண அமைதியில் மஞ்சள் ஒளியில் நீண்டகன்ற வீதிகள் ஓய்ந்து கிடந்தன.

இனி இங்கே நின்று பலனில்லை. கிடுகிடுவென்று நடக்க ஆரம்பித்தாள். அடிவயிறு குலுங்கியது. மூன்று மணிக்கு, சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன் சிறுநீர் கழித்தது. பேருந்தில் அழுந்த அமர்ந்திருந்ததால் அதன் கனத்தை ஓரளவு மறக்க முடிந்திருந்தது. இப்பொழுது குடல் சரிந்து தொங்குவதுபோல் ஒவ்வொரு அடிக்கும் முள்ளாய் குத்திற்று.

’பொதுக் கழிப்பறை எதுவும் பார்வையில் படவில்லை. பட்டால் மட்டும் துணிந்து உள்ளே போய்விட முடியுமா என்ன? அதுவும் இந்த அகாலநேரத்தில்…’ அடிக்கொரு தடவை பின்னால் யாரேனும் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டாள். ரயில் நிலையத்தில் ஸ்டேஷனுக்கும், மேம்பாலப் படிகளுக்கும் இடையேயான வெட்டவெளியில் அடிக்கொன்றாய் ஆண்கள் நின்றுகொண்டு சர்வசகஜமாய் சிறுநீர் கழிப்பது தினசரிக் காட்சி. பெண்கள் தலையைக் குனிந்துகொண்டோ, அல்லது, அந்தப்புறமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டோ செல்வார்கள். ‘இந்தத் தருணத்தில் ஆணாய் மாற முடிந்தால் எத்தனை நன்றாயிருக்கும்,’ என்று சிறுநீரின் பாரத்தில் மனம் ஏங்கியது. இந்த ஏகாந்த இரவில், வெறிச்சோடிய வீதியில் எந்த ஒரு மூலையில் வேண்டுமானாலும் அடிவயிற்றின் பாரத்தை இறக்கிவைத்துவிட முடியும்.  பின், இந்த அகாலவேளையில் நடப்பதைக்கூட சற்று லேசான மனத்துடன் செய்ய முடியும் என்று தோன்றியது. பயத்தின் பாரத்தோடு சிறுநீரின் பாரமும் சேர்ந்ததில் மனம் மிகவும் பலவீனமாகியிருப்பதை உணர முடிகிறது.

நல்லவேளை, தலைக்குமேல் கொஞ்சம்போல் நிலா இருந்தது. மஞ்சள் விளக்குகள் எரியாத பிரதேசங்களிலும் நிலா மங்கலாக ஒளியேற்றிக்கொண்டிருந்தது. நிலாவை, நட்சத்திரங்களையெல்லாம் மனதாரப் பார்த்து மாமாங்கமாகிவிட்டது.

‘நோ டைம் டு ஸ்டாப் அண்ட் ஸ்டேர்’ என்பதோடு ‘நோ ப்ளேஸ்’ என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் எந்த இடத்திலும் காற்று மட்டும் தன்னைப் புறக்கணித்துவிட முடியாதபடிக்கு தடவிக்கொடுத்துக்கொண்டேயிருக்கிறது! காற்றின் வருடலை இந்த ஆளரவமற்ற இரவில் துல்லியமாக உணரமுடிகிறது. ஆனால் முழுமையாக அனுபவிக்க முடியாதபடி மனதிலும் அடிவயிற்றிலுமாய் நிறைந்து தளும்பும் பயமும் சிறுநீரும்….

ரயில்பாதை வழியாகச் செல்லும்போது சில கூலிப்பெண்கள் நின்றபடியே சிறுநீர் கழிப்பதைப் பார்த்ததுண்டு. இவர்கள் இதை இயல்பாகச் செய்கிறார்களா, வேறு வழியில்லாமல் செய்கிறார்களா என்ற கேள்வி எழும். காலைவேளைகளில் ரயிலில் வரும்போது நுங்கம்பாக்கம் சுடுகாட்டுப்பக்கமெல்லாம் அங்கங்கே ஆண்களும், பெண்களுமாய் மலம் கழித்துக்கொண்டிருப்பார்கள். அப்போதைக்குத் தங்கள் அடையாளம் அழித்துக்கொள்ளும் முயற்சியாய் ரயில் வரும்போது முகங்களைக் குனிந்துகொண்டோ, அல்லது லுங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டோ காலைக்கடன் கழித்துக்கொண்டிருப்பார்கள். குடிசைப்பகுதி மனிதர்களோ, ஒண்டுக்குடித்தனக்காரர்களோ…. இதை மட்டும் இறக்கிவிட்டால் பின் நாள் முழுவதையும் இவர்களால் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.

மத்தியதர வர்க்கத்துப் பெண் அப்படியெல்லாம் ரயிலடியிலோ, வீதியிலோ ‘ஒண்ணு’க்கிருந்துவிட முடியாது. கூட யாரேனும் பெண் துணை இருந்தாலாவது தெருவோரம் ஒரு நிமிடத்தில் போய் முடித்துவிடலாம். ஒரு எதிர்பார்ப்போடு நிமிர்ந்தவள் கண்களில்பத்துப் பதினைந்து அடிகள் முன்னால் சென்றுகொண்டிருந்த ஒருவன் தென்பட்டான். பார்வைக்குக் கண்ணியமானவனாய்த் தெரிந்தான். சற்றே காலை எட்டிப் போட்டாள்.

அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவன் நடையை துரிதப்படுத்தினான். இவளுக்கு அவமானமாயிருந்தது. சமாதானப்படுத்திக்கொண்டாள். ‘நாம் அவனைப் பற்றி சந்தேகப்படுவதைப் போல் அவனுக்கும் நம்மை சந்தேகப்பட உரிமையிருக்கிறது. இந்த நேரத்தில் தற்காப்புணர்ச்சியில் ஏற்படும் அவன் சந்தேகம் இயல்பானதும், நியாயமானதும் கூட….’

ஒரு கணம், பத்தடி தூரத்தில் நடந்துகொண்டிருந்த அந்த மனிதன் ஒரு பெண்ணாக இருக்கக்கூடாதா என்று ஏக்கமாயிருந்தது. ’இல்லை, சினிமாவில் வருவதுபோல், அந்த மனிதன் ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தும் மனதிற்கு அத்தனை நெருக்கமாக உள்ள ஆனந்தரூபனாக இருக்கக்கூடாதா’ என்ற தாபம் இருந்தாற்போலிருந்து  மனதிற்குள் பரவியது.

“அதென்ன, ஆனந்தரூபன் என்ற பெயர்?”

“என்னைப் பார்த்தாலே எல்லோர் மனங்களிலும் ஆனந்தம் பொங்குமாம்!”

‘மீதிப்பேர் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், என்னை உன் நினைப்பே பொங்கவைக்கிறது!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

நாட்கணக்கில் ஒரு வரி கூட எழுத மாட்டான். ரணமாகித் தவிக்கும் மனதில் ‘இனி இவன் சங்காத்தமே கூடாது’ என்ற தீர்மானம் பிறக்கும். ஆனால், தான் முன்மொழியும் தீர்மானத்திற்கு வழிமொழிய அவளால் என்றுமே இயன்றதில்லை.! அத்திபூத்தாற்போல் வரும் கடிதமும், அதையடுத்து நேரும் சந்திப்பும் தீர்மானங்களையெல்லாம் அடித்துக்கொண்டுபோய்விடும்! ஆறு மாதமோ, முக்கால் வருடமோ கழித்துநேரக்கூடிய அடுத்த சந்திப்பிற்காக மனம் அன்றிலிருந்தே கால்கடுக்க நிற்கத் தொடங்கும்!

‘இது என் மனதின் பலமா, பலவீனமா?’ என்று எத்தனையோ முறை தன்னைத்தானே கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

‘மனம் நிறைக்கும் அன்பில் கவசகுண்டலங்கள் கரைந்தோடிப் போய்விடுகின்றன. வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் காத்திருப்பில் கோபத்திற்கு இடமில்லை,’ என்பதாகத் தானென்றுமே விடை கிடைக்கும்!

‘இந்த ஏகாந்த இரவில் ரூபனோடு இழைந்து நடக்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டும்!’ என்ற நினைப்பில் முகம் கனிந்து உள்ளுக்குள் சூடு பரவியது. அடிவயிற் றின் கனம் கூடியது. அவசரமாய் ரூபன் நினைப்பை அகற்றிக்கொண்டு முன்னே சென்றுகொண்டிருக்கும் மனிதனை வேகவேகமாக நெருங்கி, கண்ணியமான குரலில், “ஸார், நீங்களும் ஜெயராஜ் தியேட்டர் பக்கம் தான் போகிறீர்களா?” என்றாள்.

அவளைப் பார்த்ததும் அவன் கலவரமும் சற்றே அகன்றிருக்க வேண்டும். “ஆமாம்”, என்றான்.

“இன்றைக்குப் பார்த்து தாம்பரம் போகவேண்டியதாகிவிட்டது. இப்போ, இப்படி…”

“பரவாயில்லை, என்னோடு வாருங்கள்.”

“நன்றி”, என்று அவன் பின்னே நடக்கத் தொடங்கினாள்.

அவன் எச்சரிக்கையாக இரண்டடி இடைவெளியில் முன்னால் நடக்க, தானும் அதே எச்சரிக்கையோடு இரண்டடி பின்னாலேயே, அதே சமயம், ‘அவனோடு வருபவள்’, என்பதாகவும் பிறருக்குப் புரிபடும் விதத்தில் நடந்துசெல்வதைப் பார்க்க அவளுக்கே வேடிக்கையாக இருந்தது. ’போகும் வரை எதுவும் ஏடாகூடமாக நேராது’ என்ற நம்பிக்கையும், கூடவே, ‘வழியில் ஏதாவது நேர்ந்துவிடலாம்’ என்ற பயமும் தொடர்ந்துவந்தன.

ரொம்பத் தெரிந்த ஆண்களிடம் கூட, “சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன்” என்று சகஜமாகக் கூறிவிட முடிவதில்லை.

‘சே, தேவையில்லாமல் எதெதற்கெல்லாம் அவமானமாக உணரவேண்டியிருக்கிறது’ என்று சலிப்பாக இருந்தது. ‘ரூபனாக இருந்தால் ஒரு ஓரத்தில் மறைப்பாகக் கால்களை அகற்றிவைத்தபடி அந்தப்புறம் பார்த்து திரும்பிநிற்கச் சொல்லி ஒரு நொடியில் பாரத்தை இறக்கிவைத்துவிடலாம்…..’ ஆனால், யோசித்துப் பார்த்ததில் அவனோடு கழித்த நேரங்களில் கூட இப்படிப்பட்ட இக்கட்டான சந்தர்ப்பங்கள் வாய்த்ததாக நினைவுக்கு வரவில்லை.

அக்கம்பக்கத்தில் தெரிந்தவர்கள் வீடு ஏதேனும் உண்டா என்று யோசித்துப் பார்த்தாள். எதுவும் நினைவுக்கு வரவில்லை. அப்படியே இருந்தாலும் இரவு பத்தரை பதினோறு மணிக்குக் கதவைத் தட்டி, குசலம் விசாரித்து, கையோடு “டாய்லெட் எங்கே?” என்று கேட்டால் எத்தனை அபத்தமாக இருக்கும்….

விரைந்து விரைந்து நடப்பதில் முழங்கால்களும், முழங்கால்களுக்குக் கீழுள்ள ஆடுசதையும், பாதங்களும், விரல்நுனிகளும் வலிக்க ஆரம்பித்திருந்தன. போதாததற்கு அடிவயிறு வேறு பாறாங்கல்லாய், வெடித்துவிடும்போல் இருந்தது. ‘போகிற போக்கில் மூத்திரம் பெய்துகொண்டே போனால் என்ன’ என்பதாக மனதில் தோன்றிய எண்ணத்தைத் தள்ளிவிட்டாள். முன்பு மருத்துவமனையில் பெரியம்மா கால் எலும்பு முறிந்துகிடக்க, இரண்டு மாதங்களுக்கும் மேல் ‘மூத்திரக் குடுவை’ வைத்ததுண்டு. ’சிறுநீர் கழிப்பதற்கும், மலம் கழிப்பதற்கும் மற்றவர்களைத் தொந்தரவுபடுத்தவேண்டி யிருக்கிறதே ‘ என்று முடிந்த மட்டும் அடக்கிக்கொண்டிருந்துவிட்டு, பின், தாங்க முடி யாத கட்டத்தில் கண்கலங்க இவளை அழைப்பாள் பெரியம்மா. பிரியும் சிறுநீரின் அளவு ஒரு ஹார்லிக்ஸ் புட்டிக்கு மேல் இருக்கும் என்று இவள் குத்துமதிப்பாகக் கணக்கிட்டதுண்டு.

’இவனுக்கும் ஒருவேளை சிறுநீர் பாரமாக அழுத்திக்கொண்டிருக்கலாம்… ஏதாவது ஓரமாய் சிறுநீர் கழிக்கலாம் என்று இவன் யோசித்துக்கொண்டிருக்கும்போது நான் வந்து சேர்ந்துகொண்டுவிட்டேனோ என்னவோ….!’

அபூர்வமாக ஓரிருவர் இவர்களை சைக்கிள், அல்லது, மோட்டார் சைக்கிளில் கடந்துசென்றார்கள். ‘நல்லவேளை, அவனிடம் விலையுயர்ந்த பொருள் அல்லது அணிகலன் எதுவுமில்லை. தன்னிடமும் எதுவுமில்லை’ என்ற நினைப்பு நிம்மதியளித்தது. ‘பார்ப்பவர்கள் தங்கள் இருவரையும் என்னவாய்க் கணித்துச்செல்கிறார்களோ…. சகோதரன் – சகோதரி…? கணவன் - மனைவி…? கள்ளக்காதலர்கள்…? எவரும் என்னவோ நினைத்துக்கொள்ளட்டும்! எக்கேடோ கெட்டுப்போகட்டும். இந்த இருண்ட கால்வாய்க் கரையோரத்தைக் கடந்துமுடிந்தால் போதும், ஜெயராஜ் தியேட்டர் வந்துவிடும்….’

ஏறத்தாழ முக்கால்மணிநேரமாக நடந்துகொண்டிருந்தார்கள். “நீங்கள் எந்தத் தெருவைச் சேர்ந்தவர்?” என்று கேட்க வாயெடுத்து அடக்கிக்கொண்டாள். அவனுக்கு அந்தக் கேள்வி விகல்பமாகப் படக்கூடும். அவனும் அவ்வண்ணமே நினைத்திருக்கலாம். வாய் மூடி நடந்தான்.

ஒருவர் பின் ஒருவராய் கால்வாய்க் கரையோரம் நடந்துசெல்கையில் பீடி குடித்த வண்ணம் இருவர் எதிரில் வந்தனர். ஒரு கணம் மூச்சு நின்றது இவளுக்கு. தங்களுக்குள் மெல்லிய குரலில் என்னவோ கூறிய வண்ணம் அவர்கள் இருவரும் இவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்று, பின், தங்கள் வழியே நடந்தனர்.

“மேடம், ஜெயராஜ் தியேட்டர் வந்தாகிவிட்டது.”

’வீட்டிற்குத் துணையாக வரவேண்டுமா? என்று கேட்க நினைத்து கேட்டால் தப்பாகிவிடுமோ என்று தயங்குகிறானா? அல்லது, ’இனிமேல் நாம் ஒன்றாகப் போவது சரியில்லை என்று சொல்ல விரும்பி, சொல்லத் தயங்குகிறானா….? பாவம், அவன் வீட்டில் அவனுக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள்…. இளம் மனைவி பயந்துபோய் தவித்து நிற்கலாம்…’

இருளில் அவன் முகத்தைக் கூடச் சரியாகப் பார்க்க முடியவில்லை. “இனிமேல் நான் போய்க்கொள்கிறேன். ரொம்ப தேங்க்ஸ்” – மனப்பூர்வமாக நன்றி கூறினாள்.

சற்றே தயங்கினான். பிறகு, ‘விட்டால் போதும் என்பதாய் பொடிநடையாய் சடுதியில் காணாமல் போனான்.

அடிவயிற்றின் வலி மேர்புறமும் பரவிவிட்டது. வாயிலெடுக்கவரும்போல் இருந்தது. பெருமாள் கோயில் சந்தில் திரும்பியதும் மீண்டும் இருளும், வெறுமையும், வழியைக் கவ்வியது. ஒவ்வொரு மூடிய வீட்டிலிருந்தும் கண்கள் தன்னைக் கவனிப்பதாய் பிரமையேற்பட்டது. கோயிலைத் தாண்டிச் செல்லும்போது இரண்டு இளவட்டங்கள் கொச்சையான தமிழ்த் திரைப்படப் பாடல் ஒன்றை சீழ்க்கையடித்துக்கொண்டெரெ சைக்கிளில் அசுரவேகத்தில் வந்தார்கள்.

’இருளில் இவர்களுக்கு என் முன் நரை தெரிய வழியில்லையே’ என்று மனம் பதைத்துப் போயிற்று.

’வயதை எடுத்துக்காட்டும் நரை பின் தலையில் வந்திருந்தாலாவது அடிக்கடி பார்க்கவேண்டியிருக்காது. ஆனால், கொத்தாக முன் தலையில் படர்ந்திருக்கிறதே’ என்று கண்ணாடியில் முகம் பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள் வருத்தம் சேரும். இன்று அந்த நரையே பாதுகாப்புக் கவசமாக மனதிற்குப் படுகிறது….!’

”பாவம்டா… இந்த நேரத்தில் நடந்துவரவேண்டியதாகிவிட்டது இவர்களுக்கு. மறியல் செய்கிறவர்கள் இதையெல்லாம் யோசித்துப்பார்க்கக் கூடாதா?” என்று விர்ரென்று அவளைக் கடந்துசென்ற சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவன் தன் சகாவிடம் சொல்வது அவளுக்குக் கேட்டது.

அழத் தோன்றியது.

இன்னும் ஓரிரு நிமிடங்களில் வீடு வந்துவிடும் என்ற நினைப்பின் நிம்மதியில் வயிற்றின் வலி கூட அப்பால் அகன்றுவிட்டதான பிரமையில், பாராட்டுகளும் பரிசுகளும் அற்ற ஒரு பந்தயத்தின் இறுதிக்கட்டமாய் இன்னும் வேகமாய் நடந்தாள்.





0

No comments:

Post a Comment