LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, September 16, 2014

இப்போது...... கவிதை

கவிதை

இப்போது

‘ரிஷி’
  

1
எழுதியெழுதிக் கிழிக்கும் என்னைப் பார்த்துப்
பழிப்பதுபோல் வாலசைக்கிறது நாய்க்குட்டி
என்னமாய் எழுதுகிறது தன் சின்ன வாலில்!

எதிர்வீட்டிலிருந்தொரு குழந்தை
அத்தனை அன்பாய் சிரிக்கிறது.
பதறி அப்பால் திரும்பிக்கொள்கிறேன்.
உலக உருண்டை கண்டுவிடுமோ அதன் வாய்க்குள்!

2.
தொலைக்காட்சிப்பெட்டிக்குள்
அனல்பறக்கும் விவாதம்.
ஒரு குரலின் தோளில்
தொத்தியேறுகிறது இன்னொரு குரல்.
தன் சக்தியையெல்லாம் திரட்டிக்கொண்டு
உதறிவிடப்பார்த்தும்
முடியவில்லை முதற் குரலால்.
அதற்குள் மூன்றாவது
இரண்டாவதன் கால்களைக் கீழிருந்து
இழுக்கத் தொடங்குகிறது.
எங்கிருந்தோ கொசு விளம்பரம் வந்துவிட
மூன்று குரல்களும் விளையாடத் தொடங்குகின்றன _
“ரிங்கா ரிங்கா ரோஸஸ்…”

3.
பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
ஆயத்த ஆடைகளாய் ஆயிரக்கணக்கில்.
ஆத்திகரோ நாத்திகரோ, அருள் வந்து ஆடும் பாங்கில்
சில பெயர்களைக் கைகளில் கசக்கித் திருகி
தலையைச் சுற்றித் தூக்கியெறிகிறார்கள்
பேயோட்டுவதாய்
இன்னும் சிலவற்றை எலும்புகள் பொடிப்பொடியாக
உலுக்கியெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பின், நிலவைக் கடத்திக்கொண்டுவந்து
பட்டியலை உலகெங்கும் காணும்படியாய்
விரித்துப் பிடித்தவாறு தன் பயணத்தைத் தொடரும்படி
எழுதுகோலைத் துப்பாக்கியாக்கி அச்சுறுத்துகிறார்கள்
எப்பொழுதும்போல் சரி யென்று உறுதியளித்து
உயரே சென்றுவிட்ட நிலா
அந்தப் பட்டியல் தாளை குறும்பாய் ஒரு பந்தாகச் சுருட்டி
கீழே விட்டெறிகிறது!

4.
திருமணமே கலவியின் மர்மத் திறவுகோல் ஆன அவலம்
’சொல்வதெல்லாம் உண்மையாகி’விட,
அண்மை சேய்மையாகி
இல்லாமலாகும்
இல்லறத்தில்
குழலும் யாழும் துருப்பிடித்தவாறு…..

5.
நான் எழுதும் ஒவ்வொரு வரிக்கும் அப்பால்
அந்தரத்தில் அலைந்துகொண்டிருக்கும்
அப்பாவுடைய,
அம்மாவுடைய,
அறிவுசால் தம்பியுடைய,
அன்புத் தாத்தாவுடைய,.
தேவதைகள் கண்டுமகிழும் என்று
கருக்கலிலேயே கோலம் போட வந்துவிடும்
அந்த உழைப்பாளி மூதாட்டியுடைய,
ஆயிரமாயிரம்
அரூபத் தடங்கள்….

6.
கழுத்தை நெரித்துக் கொன்றுவிடும் கொலைவெறியோடு
திரும்பத் திரும்ப உரத்துக் கூறிக்கொண்டிருக்கிறார்:
“செத்துவிட்ட மொழி”.
சுற்றிலும்
சான்றோர் சிலைகள்
பழுத்துதிரும் இலைகள்
நினைவாலயங்கள்
அமாவாசைத் தர்ப்பணங்கள்
நீத்தார் பிரார்த்தனைக் கூட்டங்கள்
நனவோடை இலக்கியங்கள்
என……

7.
கரைபுரண்டோடிக்கொண்டிருக்கிறது ஜம்மு-கஷ்மீர் வெள்ளம்
தொலைக்காட்சிப்பெட்டிக்குள்ளிருந்து காப்பாற்றச் சொல்லி
இறைஞ்சும் கண்கள்.
உயிர்காப்பான் ‘ரிமோட்’ ஐ அவசர அவசரமாய் அழுத்தி
மூடிக்கொண்டுவிட்ட பூனைக்கண்களின்
கையறுநிலை
குத்தீட்டிகளாய் உள்ளத்தைப் பொத்தலிட்டபடி….

 8.
இவர் ஆனந்தமாய் மேளம் வாசித்ததைக் கண்டு
காணப் பொறாமல்
விலையேற்றம் மின்வெட்டு
என சொல்லத் தொடங்குகிறார் அவர்
அறுபதுவருட கால ‘செலக்டிவ் அம்னீஷியா’வின்
அதலபாதாளத்திலிருந்து.





0

(*செப்டம்பர் 2014 முதல் வார திண்ணை இணைய தள இதழில் வெளியாகியுள்ளது)








No comments:

Post a Comment