LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, December 30, 2014

மற்றும் சில திறவாக் கதவுகள் : கவிதைகள் 7-12

மற்றும் சில திறவாக் கதவுகள்

ரிஷியின் 3வது கவிதைத் தொகுப்பிலிருந்து
கவிதைகள் 7-12

7. இரவல் நானின் இதயம்

அன்பு கனிந்த மனதில் இன்னுமின்னும் ஆற்றாமை கனக்கச்
சேரும் அதிபாரத்தில் மூளைக்கு இதயத்திலிருந்து பிரியும்
நரம்பிழைகள் வேரறுந்து எக்குத்தப்பாய் சுருண்டு கொள்ளும்.
தகவல்கள் தந்து பெறும் இயக்கம் நியமம் தவற,
நினைவடுக்குகளில் பத்திரமாயிருக்கும்
தர்க்கங்களும் தார்மீகங்களும்
தேடக் கிடைக்காத வண்ணம் தொலைந்து போக,
இத்தருணம் எதிர்ப்படும் பருத்த முலைகளை யெட்டிச்
சட்டெனப் பறித்துப் பொருத்திக் கொள்கிறேன்.
அப்படியே முகமும் இதழும் கை கால் கருங்கூந்தலும்
இடுப்பு முதுகு குதம் நிதம்பம் மேலும்
வியர்வைத் தனிமணமு மெல்லாம் தவறாமல் அயராமல்
ஆகச் சிறந்தன கவர்ந்தென்னை யலங்கரித்துக் கொண்டு
ஓடோடி வருகிறேன் உன்னில் மறுபடி யரியணை யேற.
அருகேக ஏகப் பன்மடங்காகும் அங்கலாவண்யங்களோடு
ஆக்டோபஸ் டினோசரின் வினோதச் சேர்க்கையாய்
காணும் எனைக் காணும் நீ
விகசித்துப் போவாயோ? வீறிட்டலறுவாயோ?8.  தன்மை

அனல் படர்ந்து ரணமாக்கியும்
அவிந்துவிடலாகா தென்று
இருகை குவித் தொளிரச் செய்திருந்தாள்
சுடரை….
அடர் இருளில் தன் விடியலைத்
தேடிச் செல்வோன்
தடுக்கி விழலாகாது.
கல் குத்தலாகாது;
கருநாகம் கொத்தக் கூடாது.
வழுக்கலாகாது குழைசேற்றில்.
காற்றுள நுண்ணுயிரிகள்
கடித்துவிடக் கூடாது.
நிலா மறைந்துவிடும்;
நரி ஊளையிடும்.
நல்லபடியாய்ச் செல்ல வேண்டும் _
முள் துளைக்காது,
கள்வர் கை கொளாது….

சாலையோரத் திருப்பம் ஆளை
விழுங்கு முன்னம்
அரைக்கணம் திரும்பிய
அந்தத் தலை சிரித்தது
நிறைவில் விளைந்த நன்றியுடன்.

ஏராளமாய் கொண்ட பிரியத்தின் பேரில் பரத்தைக்
காதலியிடம் அன்பாய்
தன் மகனின் நண்பர்களுக்குக் கட்டில் சுகம்
கற்றுத்தரக் கோரியவன்
மற்றுமொரு முறை
ஏறி மிதித்துச் சென்றான் மனதை.
9.  ஊர்ஜிதம்


நீலார்ப்பணமாயிருந்தது வானம்.
சூர்யனின் நேர்ப்பார்வையில்
காய்ந்துகொண்டிருந்தன துணிமணிகள்.
கதிரோன் கைவண்ணத்தில் கந்தலும் பெறும்
தனிமணம்.
நீவித் தடவி மடித்துவைக்கும்
தீண்டலின் மாண்பு
மேவிய பூஞ்சிறகாய்ப்
புரிவதற்குள் இருண்ட மேகம்
பொழி மழையில்
வதங்கிச் சுருங்கிய ஆடைகளில்
வரியோடியிருந்தன
வாழ்வின் சங்கேதங்கள்

10. அஜீரணம்

முதல் சில நாட்கள் மௌனம் விழுங்கவொண்ணா
தொண்டைப் புண்ணாய்,
குனியவும் முடியாமல் நிமிரவும் இயலாமல்
குடையும் வாயுப்பிடிப்பாய்,
மாதவிடாய் நாளின் அடிவயிற்றில் கிளரும்
அடையாளப்படுத்தலாகா மொண்ணை வலியாய்,
ஆழ்ந்துறங்க மாட்டாத கண்ணெரிச்சலாய்,
பின்னங்கால் பித்தவெடிப்புகளின் கத்திக்கீறலாய்,
முன்மண்டை யோரங்களின் இடிச் சீறலாய்,
மூக்கைப் பிய்த்தெறியத் தூண்டும் ஜலதோஷமாய்,
முக்கி முக்கி ரணமாகும் மலச் சிக்கலாய்,
நம் நலன் நம் கையிலற்ற நிராதரவு தாக்க
நெஞ்சமெலாம் ஜன்னிகண் டுற்ற
அங்கங்க ளெல்லாம் கதிகெட்டு விட்ட பின்
கடைசிச் சொட்டு மூச்சைக் காக்கத் தவித்து
காலத்திற்குமான துக்கம் கவிய மனம்
மீறிய க்ஷீணத்தில் உறைந்துகிடக்கும் இன்று
சவமாய் விறைத்துப்போன கைகளி லொன்றை
சற்றே மேலுயர்த்தி யென்னை நானே
தலைவருடித் தந்துவிட முடிந்தால் போதும் _
தேறிவிடுவேன் நாளை தீர்மானமாய்.

11. பாதரஸத்தாமரையிலைப் பாதயாத்திரை


தெருவிரு மருங்கின் வீடுகளில் தெரிந்தாரில்லை யாக
வரவாகும் விடுதலையுணர்வில் சிட்டுக்குருவியாகும் உள்
கவலை யற அரவங்கள் பற்பல கவியிருளில் கால்தொட்டு
நடைபழகு மென் அந்தரங்கம் அதிசுந்தரம்
ஆனந்தம் கடைவிரியக்காத்து நிற்கும் இந்த
இல்லங்களின் லாபநட்டங்களில் எனதாம்
பாப புண்ணியமில்லை யில்லை யிவற்றின்
கள்ளங்களில் என் அடிமனக் குறுகுறுப்பேதும்
இல்லை யென் அழுகை இங்குறும் மரணங்களில் இல்லை
உறவுத் திரிபுகளில் இழப்பெனக்கு இல்லை யிதன்
வரவின் செலவுகளி லென் கணக்குப் பிசகில்லை யில்லை
யிதன் பற்றாக்குறைகளில் என் பங்கு இங்கான
கிழக்கு மேற்குகளில் என் திசைகள் புழங்கவில்லை
யில்லை வழக்கும் வலியும் வம்புதும் பேதும்
வழங்கவில்லை நானிவர்க்கும் இவரெனக்கும் இது போதும்
உடனேகும் தனிமை யொரு தவப்பயனா யெனை
வழிநடத்திப் போம் இனிமை யெனதாகு மெப்போதும்.  12.வரிகளின் கருணை

மயிலிறகோ மலைப்பாறையோ _
உறுபாரமெதையும் இறக்கி வைக்க
திரும்பத் திரும்ப இங்கேயே வருகிறேன்.
மறுப்பேதுமின்றி தோள் தரும் பரிவுக்கு
தந்து தீராது வந்தனம்.
எத்தனை பருவங்கள் பிரதேசங்கள் இங்கே
நித்தம் அறிமுகமாகிய வண்ணம்….
கத்துங் கடல் மேல் நடக்கக் கற்றதும்
இங்குதான்.
அழுகையில் மனம் வெளுக்கப் பழகியதும்
இங்குதான்.
உற்ற சிறகனைத்தும் இங்கு பெற்ற வரங்கள்.
நிறங்கள் நெஞ்சுக்குழியில் மணம் பரப்ப
 வருடுங் காற்றை வழிமறித்து உள்நிரப்பி
கருப்பைக் குழந்தையாய் பராமரிக்கப்படுகிறேன்.
திருட்டுக் காலம் சுருட்டிக் கொள்ளாமல்
அருள்பாலிக்கப் பட்டிருக்கிறேன்.
பொருள் மீறிய உலகம்
இருவிரல்களுக் கிடையில்.
உள்வெளியாய் கொண்டுள தொங்குபாலத்தில்
அல்பகலாய் பயணம் தொடர
மறுபடி மறுபடி உங்களிடமே வருகிறேன்.
வழிச்செலவுக்கு.
ஒருபோதும் இல்லையெனாமல் தரும் பரிவுக்கு
தந்து தீராது வந்தனம்
அந்த நிலவைக் கையிட்ட நேயத்திற்கு,
குமிழைக் கல்லாக்கிய மாயத்திற்கு,
அருவத்திற்கு உருவளித்த மகிமைக்கு,
அன்பிற்குத் தாழ்திறந்த கனிமைக்கு…
இன்னும் தர வேண்டும்
இன்றும்
சென்று சேருமிடம் அறிந்ததாய்
ஒற்றையடிச் சுரங்கப்பாதை யொன்று
மட்டும்
இருளற்றும்
மற்றும்.No comments:

Post a Comment

comments: