LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, December 30, 2014

மற்றும் சில திறவாக் கதவுகள் _ கவிதைகள் 19 - 24

மற்றும் சில திறவாக் கதவுகள்

ரிஷியின் 3வது கவிதைத் தொகுப்பிலிருந்து
கவிதைகள்  19 - 24


19. சமாதிகள்

எண்ணிறந்த ஆறடிகளைக் கொண்ட அந்த சமாதியில்
தண்சலவைக்கல் விரிப்பில் சென்றிருந்தான் மெல்ல.
தன் கட்சியா ளென்றெதிர் வரும் சிலர் புன்சிரிக்க
தரங்கெட்டவ என்றெதிர் கட்சியினர் கண்ணெரிக்க
என்பாட்டில் காலார நடக்கக் கிட்டிய
இன்வெளி யிது என் றவன் எப்படிச் சொல்ல.



20. பிரக்ஞையும் பிரதிக்ஞையும்

இன்னொரு நாளில் இந்நேரச் சற்று முன் நான்
இடம் பெயர ஆரம்பித்தேன்.
இதுகாறும் வேராழ்ந்திருந்ததன் அடையாளமாய்க்
கொண்டிருந்த மேகத்திரள்
உடைந்து உருக்குலைந்தது ஒரு நூறு சில்லுகளாய்.
மடையரே கதைப்பார் மண்ணில் ஏதும் நிலைக்குமென்று.
முக்கண்கள் முழுவிழிப்பில்
ஒன்றில் நீரும் ஒன்றுல் நெருப்பும் ஒன்றில்
பெருவிருப்பும்
ஒவ்வொன்றாய்க் களையறுத்தேன் எனதேயான கைகளினால்.
நீருடை நயனம் அற இறுகியது உள் இரும்பாய்.
நெருப்புறை கண் சுழலக் கனன்றது அவிந்தது.
பெருவிருப்பின் கண்டம் நெரிபட நேயம் விடுபடப்
புறப்பட்டது.
நெடுநாள் தீங்கனவொன்றன் நிறைவேற்றமாய்
கழுமேடையில் என் தலை.
தெறித்து விழு முன் அறுந்த சிறகுகளோடு
பறந்து போகிறேன் என் அத்துவானத்திற்காய்.
நான் கேட்க என் கானம், ஆங்காலம் போங்காலம்.
பழுதுறும் பஞ்சரத்தினங்களுக்கும் தஞ்சம்
குப்பைத்தொட்டியே ஆகட்டும்.
கற்றை வலி முற்றிய மனதின் கருநாகப் புற்றுக்குள்
கை யிட்டுத்
திருகியெறிந்தேன் நச்சு மாணிக்கங்களை.
பெறக் கிடைக்கலாம் இனி யென் பத்திரத்திற்கான
உத்தரவாதம் _
வறுமைக்கோட்டின் வெகு கீழே இறங்கிவிட்ட போதும்.





21. தகிப்பு

வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.
எட்டாய் மடித்த உடலுடன் கிடத்தப்பட்டிருந்தான்.
குரல் மட்டும் விட்டு விட்டுப் பிச்சை யெடுத்தவாறு.
தொடுவான மெட்டாப்பயணத்தில் எதையோ
பிடிமானமாக்கித் தொட்டுச் செல்வதாய்
காலனேகம் எட்டிப்போகும்.
வற்ற மாட்டாது மிச்ச மிருக்கும் துளி மனிதாபிமானம்
ஒரு கணம் நம்மைப் பற்றிக் கிடத்தும் அவ்விடத்தில்
கொளுத்திக் கொண்டிருக்கிறது வெய்யில்.




22. தரம் தரா தரம்

லோகாயுத வாழ்வைச் சப்புக் கொட்டி முடித்த பின்
ஆகாயச் சுவையறியும் பேராசை யப்பிக் கொள்ளும்.
வேதாளத்தைப் பிடிக்க விதை சட்டென விருட்சமாகும்.
மடு மலையாகும் நொடியில் மாணிக்கமாகும் வெறுங்கல்லும்.
சொல்லாச் சொல் சொல்லியதாக்கும் காக்கும் பூதத்தைக்
காரியச் செல்லமாய்த் தூக்கிக் குடத்திலிட்டு வாகாய்
இடுப்பிலேந்திச் சென்றால் ஆகா சிறப்பு வந்து மோதும்.
கவிதைக் குணம் நிறம் மணம் யாவும் கமர்ஷியல்
த்ரீரோஸஸாய் சரிந்தாலும் தெரிந்தால் போதும்_
பரிச்சயத்தைப் புதுப்பிக்கத் தோதான நேரம். நாளும்
தோளேறி யெம்பிக் குதித்துத் தன்னை யெப்போதும்
அடையாளங் காட்டப் படித்தால் போதும் ஏகக்
கடைநிலை யெழுத்திற்கும் வழிபாடு நடக்கும் ஆம்
படைக்கஞ்சத் தேவையில்லை காசு பணம் பதவியும்
காவல் தெய்வங்களும் குடைபிடிக்கலாக ஆக
இடையறாது எழுதிப் பொழுது போக்காதே வெட்டியாய்.
இன்று தொடங்கினாலும் கூட சிட்டாய்க் கடந்திடலாம்
இருபதாண்டு இலக்கியத் திருகு பாதையை.
தரமெல்லாம் உனதாகிவிடும் எளிதாய், சில
திருவாய்மலர்ந் தருளல்களில், அறிவாய். அட
யாருக்கு வேண்டும் மடமாதே அறநெறிக ளெல்லாம்
பேருக்குக் கட்டத் தெரிந்தால் போதும் வரிகளை.
மோதிரக் கையுண்டு ஏராளம். கெட்டியாய்
பிடித்துக் கொள் இன்றே இப்போதே.
கட கடா குடு குடூ நடுவிலே பாதாளம் _
உட்டாலக்கடி கிரி கிரி யதை நீ திரிக்கக் கவிதை யடி.




23. அறவியல்

எலும்புகள் முறிய வன்புணர்ச்சிக்காளான தொரு
ஒன்பது வயதுக் குழந்தை.
குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பதினான்கு வருடங்கள்.
உற்ற மித்ர பந்துக்கள் சூழக் கைப்பிடித்த
ஒன்பது வயதுக் குழந்தையைக் கூடினான் ஒருவன்.
குழந்தைக்கு ஆயுள் தண்டனை _ வாழ்நாள் முச்சூடும்.


24. இகம்

வராத ரயிலுக்காய் உள்ளே யொரு பச்சைக்கொடி
வீசிக்கொண்டே யிருக்கிறது. எனில்,
தண்டவாளங்கள் தடமழிந்து போனதாய்க் காண
வண்டி எங்கிருந்து வரும்? வானிருந்து
செங்குத்தா யிறங்கும் விமானத்தில் நானிரண்டாய்
பிளந்து நொறுங்கிச் சரிகிறேன் பொல பொல வென்று _
உலகத்தொழிற்மையமாய்.
பிடி விடாத கொடியோடு கிடக்கிறது கை,
உடலிலிருந்து கழன்று.
சடாரெனச் சின்னாபின்னமாகும் கனவுகளும் இன்னமும்
நாறும் பிணங்களுக்குள் நினைவுச்சின்னங்களாகும்.
இடிபாடுகளில் துடித்துக்கொண்டிருக்கும் சில
உயிர்களும்
அடங்கிவிடும் ஒன்றிரண்டு தினங்களில்.
பின், காலக் காரிருள் கனமாய் மூட
மறக்கத் தலைப்படும் மனம்.




















No comments:

Post a Comment