LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, December 30, 2014

மற்றும் சில திறவாக் கதவுகள் _ :கவிதைகள் 1- 6

மற்றும் சிலதிறவாக் கதவுகள் 

’ரிஷி’யின் 3ம் கவிதைத் தொகுப்பு _ கவிதைகள் 1 - 6
                                                                                                       

* இந்த என் கவிதைத் தொகுப்பை மனமுவந்து வெளியிட்ட
தோழர் ராயன் அவர்களை
இத்தருணத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்
_ லதா ராமகிருஷ்ணன்  (ரிஷி)நூலில் இடம்பெறும்

என்னுரை 
என்னைப் பொறுத்தவரை எளியார், வலியார் என்ற
இரு பிரதா னமான பிரிவுகளே உலகில் உள்ளன.
         
இதில் பெண்கள் எல்லோரையும் அடக்கப்பட்டவர்கள்,
ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாய் ஒற்றை மொந்தை யாக்கி, ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து வைப்பது
நிறைய நேரங்களில்அவர்களது 
தனி மனித அடையாளம்அழிப்பதாகி விடுகிறது.
         
தன்னைப் பற்றிய கழிவிரக்கத்தை அவர்களுக்குள் திணிப்பதோடு தன்னுடைய பொறுப்பேற்பையும்  பலநேரங்களில் தட்டிக்கழிக்கச் செய்துவிடுகிறது.

கவித்துவரீதியாய் இத்தகைய பகுப்பு சாதாரணமானவர் களுக்கும் சலுகை கூடிய வகையில் ஒரு அடையாளத்தை யும்,அங்கீகாரத்தையும் அளிப்பதாகி விடுகிறது.
         
 இன்னொருவகையில்,மறுபடியும் பெண்ணை 
பிரதான நீரோட்டத்திலிருந்து விலக்கி 
விளிம்படுத்த மனிதர்க ளாக்குகிறது.
         
 அதுபோக, பெண் புரவலர்களாகத் தங்களை முன்னி லைப்படுத்திக்கொள்ள முயல்வோருக்கு ஒரு மேடை அமைத்துக்கொடுக்கிறது.
         
பெண் எழுதும் கவிதைகளில் பால்பேதம் சார் புலம்ப லும், பிரசவவாடையும், பாலுணர்வுப் பீறிடலும்,அன்ன பிற கருப் பொருட்களே இடம்பெற வேண்டும் எனவும், அவற்றை எழுதக் கூடாது பெண்கள் எனவும்பல்வேறு வரையறைகளைப் பிறர் வகுத்துத் தரவழி அமைக்கிறது.
         
கவிஞரின் மனப்பண்பு ‘அர்த்தநாரீஸ்வரமா’ய் அல்லது  ‘அரவாணியமா’க  இருக்கவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பும்,அப்படித்தான்இருக்கும் என்பது  என் நம்பிக்கையுமாக இருந்த காரணத்தால்  என் கவிதைகளுக் கான இடமும், அங்கீகாரமும் அவற்றின் தரத்தின் அடிப் படையில்எனக்குக்கிடைக்க வேண்டும் என்ற நோக்கத் தில், ‘ரிஷி’ என்ற புனைப்பெயரில் எழுத ஆரம்பித்தேன்.

பாலுணர்வையும், பாலுறவையும் பற்றி கவிதை எழுது வது கூட சுலபம்.ஆனால், மனதின்அழுக்காறுகளை, பகைமையுணர்வை, நபும்சகத்தனங்களை அம்பலமாக் குவது தான் அசாத்தியம் என்று தோன்றுகிறது.”        


__ எனது முதல்தொகுப்பில் (அலைமுகம்)நான் எழுதி யுள்ள இவ்வரிகளே இன்றளவும் என் நிலைப்பாடாய் இருந்துவருகிறது.

பார்வைகள் வேறுபட்டிருக்கக்கூடும் எனினும்  பரஸ்பர மரியாதை, தோழமை காரணமாக இந்த எனது கவிதைத் தொகுப்பை திரு.இராயன் வெளியிடுவது  நிகழ்ந்திருக் கிறது.
         
அவருக்கு என் நன்றிகள்.

தோழமையுடன்
ரிஷி
1.   பரிபாலனம்

மயிரிழைக்கு அப்பாலே இருப்பு.
இரவுபகல் இம்மிபிசகாக் காவல்.
அப்படியே போலும் அவ்விடமும்
இச்சையா? நிச்சயமா?
எதை வைத்தறிய எதற்கறிய?
இருந்தும்.இருந்தும்.
இல்லாததை இழந்ததற்கே
இந்த அழுகை என்றால்
இருந்திருந்தால்.? இருந்திறந்தால்?
_மருளில் மூடிக்கொள்ளும் மனதில்
மற்றும் சில திறவாக் கதவுகள்.
2.   கவிதைச் சன்னிதானங்களுக்கு

என் தேவகணங்களுக்கும் அசுரகணங்களுக்குமான
நேர்த்திக்கடன் என் கவிதைகள்.
காலற்ற அவற்றின் கால்களை யும்
கோல் கொண்டு அளக்க மாட்டாது.
காட்டாற்று வெள்ளம் சீருடை கொள்ளுமோ?
இக்கண சிக்கனம் அக்கண செலவினம்.
வாமனாவதாரமும், விசுவரூபமும் வாழ்வின் இலக்கணம்.
வெற்றுச் சப்தமும் வேய்ங்குழ லோசையும்
வாய்த்த செவித்திறம். இதில்
ஆம் ஆம் என்றுமது அபத்தப் பார்வைகளுக்கென் தலையாட
பூம் பூம் மாடல்லவே யாம் பூதலிங்க சாமிகளே!3.   விளைச்சலும் அரசியலும்

நிலத்தடி நீராய் வேராய் பரவியிருந்தது.
பதியும் மண்வெட்டிகளில் எதுவாகிலும்
வேரறுக்கப் புகாது வளங்களை
வாரிவரலாகாதா வென
காத்துச் சோர்ந்திருக்கும்
பாத்திற மறிந்த மனம்.
கைவாரினாலும் கால்வாரினாலும்
நீரும் வேரும் நாளும் நிலைத்தவாறு.
காற்றேகும் தன் போக்கில் களைப்பாற்றியவாறு.
ஊறுங்கேணி ஊறும் ஊற்றுக்கண் நூறு.
மண்ணடிப் பரப்பு பொன்னுடைத்து.
தன்மையறிந்தார்க்கு உண்மை புரியும்.
மண்ணாந்தைகளுக்கு மண்ணே தெரியும்.
மாமன்னர்க்கோ களராகும் தளிரும்.
மூக்கில்லா ராஜ்யத்தில் முறுமூக்கன் ராஜன்.
இரவல் மூக்கன் ஏகாதிபத்தியன்.
பகலிரவாய் ஊர்வலம். பெரும் படைபலம்.
பயிரழித்தலே தேர்க்காலின் நோக்கமாய்.
தாக்கித் தாக்கி உளைச்சலுறும்.
தன்னைத் தாண்டி விளைச்சல்
கண்டுவிட்டால்? உம்_
கண்ணறுத்தா லாயிற்று
புண்ணறுப்பதாய் பறைசாற்றி
தாளாது வாளெடுப்பான் தகைமை போற்றி போற்றி.
4.   கவிதைக் குறிசொல்லிகளுக்கு.

சூழப் பசுந்தளிர்கள் ஏராளம் துளிர்த்திருக்க
பாழும் சருகுகளைத் துருவிப் பொறுக்கி யெடுத்து
செத்துவிட்டது இயற்கை யென்றே கத்தித் தீர்த்திடுவார்.
தண்மர இன்கனிகளை யெல்லாம் எத்தித் தள்ளி
சின்னதாய் கசக்குமொரு பழத்தைக் கையில் அள்ளி
இற்றைக்கும்  இனியும் யாவும் புளிக்குதென்றே கதைப்பார்.
வட்டமும் வளைகோடுகளுமாய் திட்டமாய் வரைந்து
விஞ்ஞானமாக்கப் பார்ப்பார் விவரங்கெட்ட தனத்தையும்.
பாடை தூக்கவென்றே பரபரக்கும் கையர்க்கு
பிறப்பின் நல்வாடை, அந்தோ, ஒருநாளும் வசப்படாது.
5.   சுடர்மணிப்பூண்

ஞாயிறைப் பார்த்துக் குலைக்கும் நாய்களின் ஊளை
காலை மாலை திங்கள் வெள்ளியும் கேட்கும்.
வாரண தோரண காரணம் நாமறிந்தால் போதும்.
குரோதமே குறியாய்த் தாக்கும் கற்களின் காயங்கள்
கசியு முன்பே தழும்பாகிடும் மாயம் கைகூடிட வேண்டும்.
அந்தரத்தில் சுழலுகின்ற மூன்றாங் கண்விழிப்பில்
அன்றாடம் எழுநூறு வர்ண வானவில் வசப்பட
கழியுங் காலத்தே விரலிடை வழி மழைப்பொழிவாய்
கந்தகம் குளிர மந்திரமாகட்டும் சொல். மொழிவாய்.
6.   யுத்தகாண்டம்


திரும்பத் திரும்பப் பொருதிக்கொண்டிருக்கிறேன்
குருதி பெருக. என் கணைகளெல்லாம்
குறிதவறாது துளைக்கின்றன எறியாளையும்.
இருமருங்கும் தெறித்துச் சிதறும் உதிரத்தில்
பேதுறும் மனம் பதறும் அதிகம் _
சேதம் தனதாகட்டு மென.
வாள்வீசும் போதெல்லாம் கையொடிகிறது.
வேலெறிகை யிலெல்லாம் விழியழிகிறது.
குதிரை யானை காலாட்படைகளி லெல்லாம்
முதுகமர்ந்தாரும் மிதிபடுவாரும் நானேயாக
நஞ்சூட்டித்  தீட்டிய கூர்முனை ஈட்டி கத்தி
அம்பேகும் வேகத்தினும் அன்பேகி யழுதரற்றும்
அடிபட்டாரை மடிகடத்தி.
பாண்டவர் கௌரவர் பாஞ்சாலி பீமன்
பார்த்தன் தேரோட்டி கர்ணன் சகுனி
சூதாட்டம் வரும் தாயம் வரவல்ல;
வெட்டாட்டம்  விரோதியுடனல்ல; விருந்தோடும்
உறவோடுமல்ல. புறநானூறு நான்களோடு.
அகநானூ றொருபொருட்பன்மொழி யாழ்வார் நாயன்மார்
ஆண்டாள் மீரா க்ளியோபாத் ராதிசங்கரா
த்த்வைத அத்வைதம் தீரா த்வந்தயுத்தம்.
அந்தி சாய சங்கு ஊதி சண்டை நிறுத்தி
அன்று கொன்றாரை அசைபோட்டு சிந்தை வெறுத்து
அடுத்த காலை மறுபடி முரசறைந்து வியூகங்க
ளமைத்து விழவைத்து விழுந்து வைத்தது தைத்து
அன்றாடம் நடத்திவரும் நேர்தலைகீழ்ப் போரிதில்
என் உயிரைப் பணயமாக்கிப் பெறுவது
என்() வாகை யது? சாகாவரம் யார் தருவது?
பூஜ்யராஜ்யங் கொளும் பிரம்மாஸ்திரம் எங்குளது?
No comments:

Post a Comment

comments: