LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 21, 2018

கண்காட்சி - ரிஷி(latha Ramakrishnan)


ரிஷி(latha Ramakrishnan)



ஒருவிதத்தில் அதுவுமோர் அருவவெளிதான்….
அந்த விரிபரப்பெங்கும் அங்கிங்கெனாதபடி அலைபாய்ந்துகொண்டிருக்கின்றன
ஆட்கொல்லிப் புகைப்படக்கருவிகள்,
அனுமதியின்றியே ஸெல்ஃபியெடுக்கும் கைபேசிகள்,
வாயைக் கிழித்துப் பிளப்பதாய் நீட்டப்படும் ஒலிவாங்கிகள்…..
போர்க்கால நடவடிக்கையாய்,
பேசு பேசு பேசு….’ என்று அவசரப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன
அத்தனை காலமும் பொதுவெளியில்
பரஸ்பரம் கடித்துக்குதறிக்கொண்டிருந்தவர்கள்
ஆறாக்காய ரணமாய் அவமதித்துக்கொண்டிருந்தவர்கள்
ஆயத்த ஆடையாய் நேச அரிதாரம் பூசி
போஸ்கொடுப்பதைப் பார்க்க பிரமிப்பாயிருக்கிறது.
ஒரு நொடியில் வெறுப்பை விருப்பாக்கிக்கொள்ள முடிந்தவர்கள்
பித்துக்குளி போலா? புத்தனுக்கும் மேலா? பெரும்
வித்தக வேடதாரிகளா….?
ஆடலரங்கை யாருமற்ற வனாந்திரமாக பாவித்து நான் ஆசைதீர
ஓடிக்கொண்டிருந்தால் எப்படி?
வாள்வீச்சாய் ஆரவாரமாய் அழைத்தபடி துரத்திவந்து
தோள்மீது கையிடாத குறையாய் இறுக்கி
யென்னை நெருக்கித் தள்ளுகிறார்கள் ஸெல்ஃபிக்குள்….
சொல்லிவைத்தாற்போல்கொல்லென்று எல்லோரும் சிரிக்க
சிரிக்கிறது என் முகமும்.
ஊரோடு ஒத்து வாழ் எனக் கேட்குமோர் அசரீரி உள்ளிருந்து
பரிகாசமா, அறிவுரையா? வெனப் புரியாத் தொனியில்.
யூ-ட்யூபில் நாளை காணக்கிடைக்கலாம் இந்த அன்புப்பிணைப்பு.
அதில் விகசித்துநிற்பது நானல்ல என்பதென் நியாயக்கணிப்பு.


No comments:

Post a Comment