LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 21, 2018

கேள்வி – பதில் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்


(லதா ராமகிருஷ்ணன்


ஊரெல்லாம் ஒலிபெருக்கிகள் விதவிதமாய்

உள்ளங்கைகளிலெல்லாம் தாயக்கட்டைகள்

உருட்டத்தோதாய்

வெட்டாட்டம் கனஜோராய் நடைபெறும்

விடையறியாக் கேள்விகளோடு….


சுமையதிகமாக  உணரும் கேள்வியே

தாங்கிக்கல்லுமாகும்!

சிறிதே வாகாய்ப் பிரித்துப்போட்டால் போதும்

ஸோஃபாவாகி அமரச் சொல்லும்!


சரிந்தமர்ந்தால் தரையில்

முதுகுபதித்து இளைப்பாற முடியும்!


கேள்வியின் மேல்வளைவு குடையோ கிரீடமோ….?


மேற்பகுதி சறுக்குமரமாகும் வண்ணம்

ஒரு கேள்வியைக் குப்புறப் போட்டு

அதன் புள்ளிமீதமர்ந்து ஒரு

பிரத்யேக பைனாகுலரில் பார்த்தால்

பதிலின் முப்பரிமாணமும் பிடிபடலாம்!


கேள்வியின் நிழலில் நிற்பவரின் ஒரு கை

தலையிலிருந்தால்

கண்டிப்பாக அவருக்கு மூளையிருக்கிறது,

என்று பொருள்!


ஒருக்கால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கலாம்

தற்காலிகமாய்!


மடிக்கணிணியோடு கேள்வியின் மடியிலமர்ந்திருக்கும் மிதப்பில்

ஒரு கணம் வரவாகும்

இன்னும் கேட்கப்படாதிருக்கும் கேள்விகளுக்கும்

பதில்கள் தெரிந்துவிட்ட கதகதப்பின் பரவசம்!


சரிந்துவிழுந்தாலும் பரவாயில்லை

கேள்விமீது ஏறியமரத் தெரியவேண்டும்.


கேள்வியொருபோதும் நம்மைக் குப்புறத்தள்ளிவிட்டு 

ஏறிமிதித்துவிடலாகாது.

கவனம் தேவை.


கேள்விக்கான பதிலை கேள்வியிடமே கலந்தாலோசித்தால்

குடிமுழுகிவிடுமா என்ன?


கிடைக்கோடாயும் செங்குத்தாயும்

கிடந்தும் நடந்தும் நம் நீள்பயணமெங்கும்

நிழலாய்த் தொடரும்

கேள்விக்குள் கேள்வியுண்டு.


கேட்டபோது இருந்த அதே கேள்விதானா

கேட்டுமுடிக்கும்போதும் இருப்பது?

கேள்வியிடம் கேட்டால் கிடைக்குமோ பதிலும்


ஒவ்வொரு கேள்விக்குள்ளும் இருக்கும் பதில்

அந்தக் கேள்விக்கானதுதான்

என்றில்லை யென்பதிலாம்

என் பதில் உன் பதில் எல்லாம்.......


No comments:

Post a Comment