LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 21, 2018

புனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்




 (நன்றி: திண்ணை)











பள்ளிப்பருவத்தில் பாடங்களை உரக்க வாசித்து உள்வாங்கிக் கொள்ளும் வழக்கம் நம்மில் பலருக்கு இருந்ததுண்டு. இலக்கியக் கூட்டங்களில் உரையாற்றுபவர் பலரின் சிந்தனையோட்டங்களை சரிவர பின் தொடரமுடியாமல் போவதுண்டு.

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் சமீபத்திய ’புனைவு என்னும் புதிர் என்ற தலைப்பிட்ட நூலில் இடம்பெறும் கதைகளையும் அவை எப்படி இலக்கியப் படைப்புகளாகின்றன என்று எழுத்தாளர் அடர்செறிவாக முன்வைக்கும் கருத்துகளையும் என் தோழி பத்மினி கோபாலனுக்காக படித்துக்காட்டும்போது என்னாலும் சிந்தனையைச் சிதறவிடாமல் நூலில் ஒன்றிவிட முடிந்தது.

அதற்கு முக்கியக் காரணம் எழுத்தாளர் மாமல்லன் தேர்ந்தெடுத்துள்ள கதைகளும். அவற்றின் சிறப்பம்சங்களை அவர் எடுத்துரைக்கும் முறையும். அருமையான கதைகள். அவற்றை அத்தனை ரசித்து முழுக்க முழுக்க ஒரு வாசகராய் அவற்றைப் பற்றிக் கூறுகிறார் ஆசிரியர்.

ஓரிடத்திலும் கூட ’நான் எழுதியிருக்கிறேன், இப்படி எழுதியிருக் கிறேன்’ என்று தன்னை ஒரு படைப்பாளியாகக் காட்டிக்கொள்ள, முன்னிறுத்திக்கொள்ள (blowing one’s own trumpet என்று சொல்வார்களே – நிறைய படைப்பாளிகள் இதை more often than not செய்வதைப் பரவலாகப் பார்க்க முடிகிறது) கொஞ்சமும் முனையாமல் தான் பெற்ற வாசிப்பின்பம் பெறுக இவ்வையகம் என்பதே நோக்கமாய் இந்த நூலிலுள்ள கதைகளின் தேர்வும் அவை குறித்த ஆசிரியரின் கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன.

கட்டுரைகள் கனகச்சித அளவில், ரத்தினச்சுருக்கமாக, அதேசமயம் பேச எடுத்துக்கொள்ளப்பட்ட கதையின் சிறப்பை ஒன்றுவிடாமல் எடுத்துக்காட்டிவிடுகின்றன.

கதைகளைவிட அவை குறித்த ஆசிரியரின் கட்டுரைகள் அதிக சுவாரசியமாக இருக்கின்றன. இதுதான் கதை, இதுமட்டுமே கதை என்றெல்லாம் அவர் முடிந்த முடிவாக கதை குறித்த தன் கருத்தை நம்மீது திணிப்பதில்லை. ஒரு கதையை வாசிக்கும் வழியை, ஒரு தேர்ந்த வாசகனாக திரு.விமலாதித்த மாமல்லன் கோடிட்டுக் காட்டுகிறார்.

அவருடைய கட்டுரைகள் நூலில் இடம்பெற்றிருக்கும் தமிழின் சிறந்த படைப்பாளிகளுக்கு, அவர்களுடைய இலக்கியப் பங்களிப்புக்குச் சொல்லப்படும் மனமார்ந்த நன்றி; செய்யப்படும் சிறந்த பதில் மரியாதை.

இப்போது அச்சு வடிவில் காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கும் இந்நூலில் கதைகள் குறித்த ஆசிரியரின் கட்டுரைகள் அந்தந்தக் கதைக்குப் பிறகு இடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமே, கதைக்கு முன்பாக வெளியிடப்பட்டிருப்பது கதை குறித்த ஆசிரியரின் பார்வையை ஒட்டியே கதையை நாம் உள்வாங்கிக்கொள்ளச் செய்வதாகிவிடுமே என்று எண்ணினேன். எழுத்தாளர் மாமல்லன் கதைக்குப் பிறகுதான் அது தொடர்பான தன் கட்டுரை இடம்பெற வேண்டும் என்று விரும்பினார் என்று தெரிகிறது. அதுதான் சரியாக இருக்கும்.

அச்சுப்பிழைகளும் கணிசமாக உள்ளன. ஆசிரியர் கொண்டுவரவுள்ள பதிப்பிலும், Kindle பதிப்பிலும் அவை இருக்காது என்று நம்புகிறேன்.

எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் இடையேயான உறவு நெகிழ்தன்மைகூடியது; பரஸ்பர நட்பு, நம்பிக்கையின் அடிப்படையில் அமைவது. ஆனால், எழுத்தாளரைப் பதிப்பாளர் சுரண்டுவதையோ, மதிப்பழிப்பதாக நடத்துவதோ எவ்வகையிலும் ஏற்கமுடியாது. எழுத்தாளர்களின் e-book உரிமைக்காகப் போராடிவரும் திரு. விமலாதித்த மாமல்லனுக்கு சக-படைப்பாளிகளி ஆதரவு துணையும் அவசியம் இருக்கவேண்டும்.

சினிமா ரசனை என்பதுபோல் இலக்கிய ரசனைக்கான பாடநூலாக அமையத்தக்க நூல் விமலாதித்த மாமல்லனின் ‘புனைவு என்னும் புதிர்’.

இந்த நூலின் மூலம் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த சிறந்த படைப்பாளிகளின் தேர்ந்த படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பும் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைக்கிறது.

இந்த நூலைப் போல் சமீபகாலம் வரையான சிறந்த தமிழ்ப் படைப்பாளிகளின் கதைகளையும் அவை குறித்த கட்டுரைகளையும் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் எழுதுவார் என்ற எதிர்பார்ப்பை இந்த நூல் ஏற்படுத்துகிறது.

”புனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி. தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்க ளையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்கிறது.” என்று நூல் குறித்த blurb வாசகம் முற்றிலும் உண்மை.


No comments:

Post a Comment