தகப்பன்சாமி
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
(*ஆகஸ்ட் 1,2021 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)
அழுதுகொண்டே வந்தாள் சிறுமி:
“அப்பா நானும் ராணியும் டூ”.
“அவ்வளவுதானே, விடு;
அவள் பெயர் தான் ராணி
ஆனால் நீ தான் அரசி.”.
“இல்லை, அவள் தான் அரசி,
நான் இளவரசி”.
”அட, பெயரில் என்ன இருக்கிறது?
உன்னைபோல் அவளால் பாட முடியுமா
அவளுக்குக் கழுதைக்குரல்".
“அப்படியெல்லாம் பொய் பேசாதே அப்பா.
அவள் எத்தனை நன்றாகப் பாடுவாள்!”
“காலு விந்தி நடப்பாளே – உன்னைப்போல்
எப்படி ஆட முடியும்?”
“அப்படிப்பார்த்தால் பறவையைப்போல்
என்னால் பறக்கமுடியாதே அப்பா”
“என்னதான் சொல்லவருகிறாய் நீ?”
“தப்பாகப் பேசாதே அப்பா,
தயவுசெய்து பொய் பேசாதே”.
”டூ விட்டவளுக்காக இப்படிப்
பரிந்துபேசுகிறாயே
எச்சக்கலை நாய் அவள்”
”அச்சச்சோ என்ன அப்பா இது?
டூ விட்டோம் தான். அதற்காக
ராணியை இப்படியெல்லாம்
அசிங்கப்படுத்துவது கோணபுத்தி”.
”வாயைப் பொத்து பாதகத்தி.”
”நல்லவேளை உன்னைப்போல்
இல்லை _
ராணியே மேல்.”
No comments:
Post a Comment