LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, October 18, 2016

ஒரு நாளின் முடிவில் ரிஷி

ஒரு நாளின் முடிவில்

உறக்கத்தின் நுழைவாயிலில் நான்;
அல்லது அடிப்படியில் என்றும் வைத்துக்கொள்ளலாம்.
சறுக்குமரத்தில் மேலிருந்து கீழே
வழுக்குவதை விரும்புவது போலவே
கீழிருந்து மேலாக மலையேற்றம் மேற்கொள்வதையும்
விரும்புகிறார்கள் பிள்ளைகள்.
விண்மீன்களெல்லாம் கண்ணுக்குள்ளாக
வசப்பட்டுக்கொண்டேயிருக்கிறது
அவரவர் வானம் அவரவருக்கு

Ø

ஒரே வானில் ஓராயிரம் நிலாக்கள்
ஓராயிரம் நிலாக்களா ஒரு கோடி நட்சத்திரங்களா??
கைவசமிருக்கும் தூரிகையால் உருவாக்கப்படமாட்டா ஓவியமாய்
சுற்றுமுற்றும் திரிந்துகொண்டிருக்கும் சொற்களை
பொதிந்துவைத்துக்கொள்கிறேன்.
தலை முதல் கால வரை பரவும் உறக்கத்தின் அரவணைப்புக்கு
எப்போதும்போல் என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.

Ø

ஸெல்ஃபிக்கு பிடிபடாத உன் ஸெலக்டிவ் அம்னீசியாவைப் பேச
சில வாரங்களேனும் தேவை.
கையிருப்போ வெறும் பதினைந்து நிமிடங்கள்
என்று கணக்குச் சொல்கிறது _
இந்த நாளை என்றைக்குமாய் இழுத்துப் பூட்டச் சொல்லி
என்னை விரட்டிக்கொண்டேயிருக்கும் தூக்கம்.
கடந்துசெல்ல முடியாதது.
ஒருவகையில் காக்கும்தெய்வமும்.
விறுவிறுவென உன்னைக் கடந்துசென்று
இதோ இறங்கிக்கொண்டிருக்கிறேன் உறக்கத்துள்.

Ø

சொல்லி மாளாது என் சொப்பனங்களை…….
என்று சொன்னால் அது பொய்……..
என்றால் அதுவும் உண்மையில்லை…….
இருப்பன போலும் சொப்பனங்கள்
இங்கே கற்பனைக்கும் விற்பனைக்கும்.
கட்டுப்படியாகாத விலையும்
காலாவதியாகும் காலமும்
இருகைகளையும் இருபுறமுமாய் பிடித்திழுக்கையிலும்
எப்படியோ என் உள்ளங்கைகளில்
ஒட்டிக்கொண்டுவிடும் சொப்பனங்களை
என்ன செய்ய.?
உதிர்க்கவா உரிக்கவா
உண்ணவா எண்ணவா.
எதுவும் செய்யவேண்டாம், நாளை பார்த்துக்கொள்ளலாம்
என்று சொல்லியபடி என்னைப் போர்த்துகிறது உறக்கம்.

Ø

நீட்டிப்படுத்து உறங்க முற்படுகையில்
அந்தத் தெருவெங்கும் குறுகலான ப்ளாஸ்டிக் நாற்காலிகளில்
காலை முதல் மாலை வரை, நீளும் இரவு முடிய,
களைப்பும் உறக்கமும் படர்ந்த கண்களோடு
அமர்ந்திருக்கும் வாயிற்காவலர்கள்
சிறிதுநேரம் கண்ணிமைகளை மூடவொட்டாமல்
இழுத்துப்பிடிக்கிறார்கள்.
வலிக்கிறது.
பின், அயர்வு மிகுதியில் அவர்கள் கைப்பிடி நழுவ
பத்திரமாய் என்னை மீட்டெடுக்கிறது உறக்கம்.

Ø

இது கூடத் தெரியாதா என்று காலையில் இரைந்த மேலதிகாரியை
என் உறக்கத்தின் அபாயகரமான சரிவில் நிறுத்தி
எனக்குத் தெரிந்த எழுநூறு உலகங்களிலும் ஒரே சமயத்தில் நான் உலாவந்துகொண்டிருக்கிறேன் தெரியுமா
என்று திருப்பிக்கேட்டு
அதிர்ந்துநிற்கும் அவரை ஒரு தள்ளு தள்ளி
பள்ளத்தாக்கில் உருட்டிவிடுகிறேன்.
மரணபயம் என்னவென்று மனிதர்களுக்குத் தெரியவேண்டும்..
மற்றபடி
அவர் உடல் தரையைத்தொடுமிடம்
பூப்படுக்கையாகி மேலெழும்பி வரச் சிறகுகளும்
அவர் முதுகில் முளைக்க
வரம் தந்து அருள்பாலிக்கிறேன்.


No comments:

Post a Comment

comments: