LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, March 8, 2015

சத்யஜித் ரே திரைமொழியும் _ கதைக்களமும்

 சத்யஜித் ரே
திரைமொழியும் _ கதைக்களமும்

பிரக்ஞை வெளியீடு
(எண் 105, மணி ராஜம் தெரு, ஜானகி நகர், வளசரவாக்கம்,
சென்னை – 600 087.
தொலைபேசி: 9940044042 / 98946 60669

 மொழிபெயர்ப்பாளர் உரை : லதா ராமகிருஷ்ணன்

வணக்கம். ஏறத்தாழ 30 வருடங்களுக்கு முன், குறுகிய கால அவகாசத்தில் நான் மொழிபெயர்த்த, உலகப் புகழ் பெற்ற இந்தியத் திரைப்படக் கலைஞர் சத்யஜித் ரே அவர்களைப் பற்றிய, அவருடைய ‘கலை நுட்பங்கள்’ குறித்த கட்டுரைகள் அடங்கிய நூல் இது. புதிதாகச் சில கட்டுரைகளும் மொழி பெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன.

சத்யஜித் ரே திரைப்பட விழாவொன்று சென்னையில் ‘தரமான சினிமா’வுக்கான ரசனை மிக்கவர்களால், அதற்கான ஒரு அமைப்பின் முயற்சியில் நடத்தப்பட்ட சமயம் அது. அந்த ஆர்வலர்கள் அமைப்பில் என் தம்பி சேகரின் நண்பரும் இடம்பெற்றிருந்தார். குறுகிய கால அவகாசத்தில் இந்தக் கட்டுரைகளை மொழிபெயர்க்க இயலாது என்று வேறு சில மொழிபெயர்ப்பாளர்கள் மறுத்துவிட்ட காரணத்தால் இந்த நூலை மொழிபெயர்க் கச் சொல்லி என்னிடம் கேட்கப்பட்டது. நானும் செய்து கொடுத்தேன். அந்த சமயத்தில் இதுதான் என்னுடைய முதல் மொழிபெயர்ப்பு நூலாக அமைந் தது என்று நினைக்கிறேன். இல்லை, எழுத்தாளர் க.நா.சு அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அவரே கேட்டுக்கொண்டதற் கிணங்க நான் தமிழாக்கம் செய்த அவருடைய புதினம் அவதூதராக இருக்கலாம். (அவர் அதை அப்படியே அட்சரம் பிசகாமல் என் பெயரில் வெளியிட்டது நான் எதிர்பாராதது!).

எனக்குத் திரைப்படம் குறித்த ரசனையோ அறிவோ பெரிதாகக் கிடையாது. மொழிபெயர்ப்பு என்பது bi-Lingual; bi –Cultural என்பார்கள். Translation is Approximation என்று கூறப்படுகிறது. ஒரு எழுத்தாளரின் படைப்புகளை அல்லது ஒரு துறை சார்ந்த அறிவை முழுமையாகப் படித்து உள்வாங்கிக் கொண்டால் தான் அவருடைய, அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்த மொழி யாக்கங்கள் செம்மையாக அமையும் என்று கூறப்படுகிறது. இந்தப் பார்வை உண்மையானது, அர்த்தம் செறிந்தது தான் என்றாலும் ஒரு மொழிபெயர் ப்பாளர் தொடர்புடைய இரு மொழிகளிலும் தேர்ச்சியுடையவராய், கையி லுள்ள மூலப்பிரதிக்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு உழைத்தாலே உரிய பயன் கிடைக்கும் என்றும் சொல்லத் தோன்றுகிறது.

சத்யஜித் ரே குறித்த கட்டுரைகளில் இடம்பெற்றிருந்த திரைப்படத்துறை சார், கலை சார் தொழில்நுட்ப விவரங்களைப் பேசும் கலைச்சொற்களை மொழிபெயர்ப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. தமிழ் _ ஆங்கில அகராதி உண்டு என்பதே தெரியாதிருந்த காலம் அது! படைப்பாக்கக் கலையை விட மொழிபெயர்ப்புக் கலை கீழானது என்ற எண்ணம் மனதில் வேரூன்றியிருந்தது. இன்றும் ஐந்து வரிக் கவிதை எழுதும்போது கிடைக்கும் மனநிறைவு 100 பக்கப் படைப்பை மொழிபெயர்ப்பதில் கிடைப்பதில்லை என்பது உண்மைதான். எனில், மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது. உலகத் தரமான படைப்பை மொழிபெயர்க்கும்போது மனம் விரிவடைகிறது; நிறைவுறுகிறது; தன்னடக்கம் கூடுகிறது.

மொழிபெயர்ப்பதில் யாருடைய ஆலோசனைகளையும் கேட்கும் வழக்கம் அன்றும் இல்லை; இன்றும் இல்லை. படைப்பாக்கமோ, மொழிபெயர்ப்போ – அதன் முழு முயற்சியும், உழைப்பும் என்னுடையதாகவே அமைய வேண்டும் என்ற அவா காரணமாய், ஒரு வாசகராய் எனக்குத் திருப்தியளிக்கும்படியாக மொழிபெயர்ப்பு அமையவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த சத்யஜித் ரே கட்டுரைகளை முடிந்தவரை நேர்த்தியாக மொழிபெயர்த்துக் கொடுத்தேன்.

சென்னையிலுள்ள சோவியத் கலை-கலாச்சார மையத்தில் ஒரு வாரம் சத்யஜித் ரேயின் திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. எனக்கு இலவச அனுமதிச்சீட்டு வழங்கப்ட்டது. தனியாகப் போய்ப் பார்த்தேன். அதற்கு முன்பே சாருலதா திரைப்படத்தைப் பார்த்திருக்கிறேன். அந்த சமயத்தில், அதைப் போல் நிறைய சிறுகதைகளை நிறையப் படித்தாயிற்று என்ற உணர்வே மேலோங்கியது. ஆனால், இம்முறை அப்படத்தைப் பார்க்கக் கிடைத்தபோது படம் முடிந்து திரும்பும் வழியெல்லாம் அழுதுகொண்டே வந்தேன். முதல் முறை பார்த்தபோது ‘எல்லோரும் ஓஹோவென்று புகழும் படத்தைப் பார்ப்பதில்’ ஏதேனும் மனத்தடையிருந்ததா’ , தெரியவில்லை. இரண்டாம் முறை பார்த்தபோது அடைந்த உருகுநிலைக்கான வாழ்நிலை மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டதாக நினைவில்லை.

90களில் கவிஞர் ப்ரம்மராஜன், நேரிடையாகவும், நண்பர்கள் மூலமும் என்னை மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபடச் செய்யும்போதெல்லாம் ’‘நான் என்ன இரண்டாந்தர எழுத்தாளரா?” என்று அவரிடம் கோபப்பட்டிருக் கிறேன். இன்று, இத்தருணத்தில் அவரை நன்றியோடு நினைத்துக்கொள் கிறேன். சக எழுத்தாளர்களும் தோழர்களுமான  கோபிகிருஷ்ணன், முகமது ஸஃபியின் மூலம்  உளவியல் சார்  ஆக்கங்கள், உலக சினிமா பற்றிய சில மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. உளவியல் சார்ந்த புரிதல் அதிகரித்தது. ஸி.மோகன், கோணங்கி, கௌதம சித்தார்த்தன், சா.தேவதாஸ், அமரந்த்தா, அ.ஜா.கான் இன்னும் சிலர்  எனக்குத் தந்த மொழிபெயர்ப்புப் பணிகளையும் என்னால் முடிந்த அளவு நிறைவாகச் செய்துகொடுத்திருக்கிறேன். நவீன தமிழ்க்கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மூன்று தொகுதிகளாக வெளியிட்டிருக்கும், ஜெயகாந்தனுடைய படைப்பாக்கங்களையு, வேறு சில எழுத்தாளர்களின் படைப்பாக்கங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் டாக்டர் கே.எஸ். சுப்ரமணியத்தையும் இங்கே நினைவுகூர்வது அவசியம். என்னு டைய ஆர்வம் காரணமாகவும், தொழில்முறை மொழிபெயர்ப்பாளராகவும் நவீன தமிழ்க்கவிதைகள், சிறுகதைகள் சிலவற்றையும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளேன்; மொழிபெயர்த்துவருகிறேன்.

தமிழ்ச்சூழலில் ஒரு மொழிபெயர்ப்பு நூல் மறு பதிப்பு பெறுவது அரிதான காரியமாகவே இருந்துவருகிறது. மிகவும் பரவலாக வாசிக்கப்பட்ட, பிரம்ம ராஜனால் மொழிபெயர்க்கப்பட்டு ஜார்ஜ் லூயி போர்ஹேயின் சிறுகதைகள், இடாலோ கால்வினோவின் சிறுகதைகள், உலகக் கவிதைகள், அவரால் வெகுநாட்களுக்கு முன்பே மிகுந்த ஆர்வமும் அயராத உழைப்புமாக மொழி பெயர்த்து முடிக்கப்பட்ட மார்க்வெஸ்ஸின் ONE HUNDRED YEARS OF SOLITUDE (இது வேறொருவரின் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கிறது என்றாலும் கூட பிரம்மராஜனுடைய மொழிபெயர்ப்பின் தரம் அறிந்த காரணத்தால்), அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் சித்தர் பாடல்கள், ஏராளமான நவீன தமிழ்க் கவிஞர்களுடைய கவிதைகள் _ வெளியாக வேண்டும் என்பது ஒரு வாசகராக என்னுடைய பெருவிருப்பம்.

உலகத்தரம் வாய்ந்த எழுத்துகள் தமிழில் உள்ளன. அவை ஆங்கிலத்தில் வெளியாகப் போதுமான மொழிபெயர்ப்பு முயற்சிகளும், வெளியீட்டு முயற் சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியம். அதற்கான ஆர்வமும் முனைப்பும் கொண்டவர்களாய், தங்கள் வெளியீட்டு முயற்சிக ளின் ஒரு தொடக்கமாக இந்த நூலை வெளியிடும் தோழர்கள் பாண்டிய னுக்கும், விலாசினிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.                   
                                              
லதா ராமகிருஷ்ணன்


19.12.2014, சென்னை-15.

No comments:

Post a Comment