LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, July 29, 2014

அவலக்காட்சிகள்

ரிஷி



காளியினுடையதாய்க் கனலும் கண்களைச் சுழற்றி உறுத்துப் பார்க்கிறாள் _
ஒரு கணமேனும் உலகம் உறைந்துபோகும் என்ற எதிர்பார்ப்போடு..
எதுவும் நடக்கவில்லை.

தாள மாட்டாமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறாள்; நியாயங் கேட்கிறாள்.
நேசம் பேசுவதாய் நிறையப் பொய்யுரைக்கிறாள்.
அவற்றை நிஜமென்று ஒப்ப மாட்டாதவர்களை
நீசர்களென்று காறியுமிழ்கிறாள்; கடித்துத் துப்புகிறாள்.
கொடுங்குற்றவாளிகளாக்கி
சொற்களால் அகழப்பட்ட பாதாளச்சிறைக்குள்
கழுத்தைப் பிடித்துத் தள்ளி குப்புற விழச் செய்கிறாள்.
இன்னொருவர் அழிவில் தான் தன் உயர்வு
என்ற அயரா நம்பிக்கையோடு
அன்பின் பெயரால் உன்னை யென்னை
யவனை யவளை யவரை யெல்லா நேரமும்
அடைத்துவைக்கிறாள்; அடித்து நொறுக்குகிறாள்
அடியாட்களின் துணையோடு.

கழுமரத்தடியே கதியென்று கிடக்கும் அவளைப் பார்த்தால்
கண்றாவியாக இருக்கிறது.
என்னவொரு வீண்விரய உழைப்பு இது!

’ஐயோ பாவம், பிழைப்புக்காக
என்னவெல்லாம் பாத்திரம் ஏற்றாகவேண்டியிருக்கிறது!’

அதோ அவளுடைய குரலின், கைவிரல்களின் இடிமின்னலில்
அரங்கமே அதிர்ந்துபோக
அடர்ந்திருண்டு பொழியும் நஞ்சில்
அவளே வழுக்கிவிழுந்துகொண்டிருக்கிறாள்.

’உடைந்திருக்குமோ என்ற பயமில்லை முதுகெலும்பு
இருந்தால் தானே’ என தமக்குள் சிரித்துக்கொள்கின்றனர்
பார்வையாளர்கள்.

நல்லவேளையாக அவ்வப்பொழுது திரை கீழிறங்கிக்கொண்டிருக்கிறது.



[* திண்ணை இணைய இதழில் ஜூலை 2014இல் வெளியானது]
0

No comments:

Post a Comment