LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, July 6, 2024

யாதுமாகி நின்றாய் காளி - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 யாதுமாகி நின்றாய் காளி

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


வெளிபரவித் திரிந்து நிரம்பித்தளும்பும்
காற்றை
வேகவேகமாகத் தமதாக்கிக்கொள்ள
வலமும் இடமுமாய்
வட்டமடித்துக்கொண்டிருந்தார்கள்.
சின்னக் குடுவை முதல்
பென்னம்பெரிய பீப்பாய் வரை
அவரவர் வசதிக்கேற்ப
வழித்துத் திணித்துக்கொண்டு
ஆளுயரக் அண்டாவிலோ
அந்த வானம் வரை உயரமான
தாழியிலோ
நிரப்பிவைக்க முயன்றால் எத்தனை
நன்றாயிருக்கும்
என்று அங்கலாய்த்தபடி
நானே காற்றுக்கு அதிபதி
நானே காற்றின் காதலன்
நானே காற்றின் ஆர்வலன்
நானே காற்றின் பாதுகாவலன்
நானே காற்றைப் பொருள்பெயர்ப்பவன்
நானே காற்றை அளந்து தருபவன்
நானே காற்றைக் குத்தகைக்கு எடுத்திருப்பவன்
நானே காற்றைக் கூண்டிலடைத்திருப்பவன்
என்று நானே நானேக்களால்
நன்கு வளர்ந்தவர்கள்
நாளும் மூச்சுத்திணறியவாறிருக்க
நான்கு வயதுக் குழந்தையொன்று
தளர்நடையிட்டுவந்து
நன்றாய்த் தன் காலி உள்ளங்கைகளைத்
திறந்து காண்பித்துச்
சொன்னது:
“என் கையெலாம் காற்று!”

பங்களிப்பின் பல்பொருள் அகராதி : ஓர் அறிமுகம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பங்களிப்பின் பல்பொருள் அகராதி :

ஓர் அறிமுகம்


‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)



கவனமாக வெளிச்சமூட்டப்பட்ட
ஒளிவட்டங்களுக்கு அப்பால்
காரிருளார்ந்த நள்ளிரவில்
மினுங்கிக்கொண்டிருக்கின்றன
நட்சத்திரங்கள்.
கருத்தாய் மேற்கொள்ளப்பட்ட
ஒத்திகையின் பிறகான
கைத்தட்டல்களுக்கு மேலாய்
ககனவெளியில் கலந்திருக்கின்றன
ஒருகையோசைகள்.
காண்பதும் காட்சிப்பிழையாகும்;
கேட்பதும் அழைப்பாகாதுபோகும்...
ஆனபடியால் ஆகட்டும் _
உம் ஒளிவட்டங்கள் உமக்கு;
எம் விண்மீனகங்கள் எமக்கு.

INSENSITIVITYயின் இருபக்கங்கள் : பெரிசு – கிழவர்

ஜூலை 7, 2018இல் ஃபேஸ்புக்கில் பதிவேற்றியது - மீள்பதிவு

 INSENSITIVITYயின் இருபக்கங்கள் :

பெரிசு – கிழவர்



லதா ராமகிருஷ்ணன்

வயதின் காரணமாக உடலில், தோற்றத்தில் கண்டிப்பாக மாற்றங் கள் நிகழ்கின்றன என்றாலும் வயது என்பது உண்மையில் மன தால் நிர்ணயிக்கப்படுகிறது என்று தோன்றுகிறது.

சமீபத்தில் யதேச்சையாக தொலைக்காட்சியில் காணநேர்ந்த பழைய திரைப்படக் காட்சியொன்றில் 60 வயது நிரம்பிய கதாநாயகி ‘இனி தன் வாழ்க்கை சூன்யம் என்று அழுவதைக் காணநேர்ந்தது. வேடிக்கையாகவும் விசனமாகவும் இருந்தது. வாழ்வு சூன்யமாக வயதா காரணம்?

பாதிப்பேற்படுத்தாத ‘தலைமுடிச்சாயம் எல்லாம் வந்துவிட்ட பின்பு, நிறைய மருந்து மாத்திரைகள் கிடைக்கும்போது, முதுமை என்பது குறித்த சமூகத் தின் பார்வையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுவிட்ட நிலையில் இந்த 60 வயது இப்போது பழைய 60 வயதாக பாவிக்கப்படுவதில்லை என்பதைப் பார்க்க முடிகிறது.

ஆனாலும் நிறைய திரைப்படங்களிலும் தொலைக் காட்சித் தொடர்களிலும், (இதன் தாக்கத்தால் என்றும் சொல்லலாம்) தெருவில் எதிர்ப்படும் இளையதலை முறையினர் மத்தியிலும் ‘பெரிசு’ என்று கேலியாக 60, 60+ வயதினரைக் குறிக்கும் வார்த்தை பரவலாகப் புழங்குகிறது.

‘ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாதது, வீணாக தனக்குத் தேவை யில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது, வாயைப் பொத்திக் கிட்டுப் போக வேண்டியது, என இந்த ஒற்றைச்சொல் பலவாறாகப் பொருள்தருவது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், சமூகம் என்பது இந்த வயதிலா னவர்களையும்(60, 60+ அதற்கு மேல்) உள்ளடக்கியது, இவர்களை யும் உள்ளடக்கியே முழுமை பெறுகிறது என்ற புரிதலை அறவே புறந்தள்ளும் சொல் இந்த ‘பெரிசு’.

சமீபத்தில் இந்தச் சொல்லுக்கு இணையான கிழவர் / கிழவர்கள் என்ற, ஒப்பீட்டளவில் நந்தமிழ்ச் சொல்லை தன்னளவில் அந்தப் பிரிவைச் சேர்ந்த ஒரு சீரிய இலக்கியவாதி யும் இளக்காரமாகப் பயன்படுத்தியிருக்கும் INSENSITIVITYஐ எண்ணி வருத்தப்படாமல் இருக்கமுடியவில்லை.

Friday, July 5, 2024

INSIGHT (a bilingual blogspot for contemporary tamil poetry) - JUNE 2024

INSIGHT 
a bilingual blogspot for
 contemporary tamil poetrY 
 
- JUNE  2024

www.2019insight.blogspot.com


21 POETS - 27 POEMS 
 ORIGINAL POEMS IN TAMIL AND THEIR ENGLISH TRANSLATIONS



 

பாமரனின் பகவத்கீதை - சேவாலயா முரளிதரன்

பாமரனின் பகவத்கீதை

சேவாலயா முரளிதரன் எழுதியது. வானதி பதிப்பக வெளியீடு(ஏப்ரல் 2024)

- லதா ராமகிருஷ்ணன்

மூல மொழியிலும் சரி, மொழிபெயர்ப்பிலும் சரி - பகவத்கீதையை முழுமையாகப் படித்ததில்லை என்பதே நடப்புண்மை.

திருவள்ளுவர், பாரதியார் என்று யாரை எடுத்துக் கொண்டா லும் அவர்களுடைய சில பாக்களே, பாடல் களே மேற்கோள்களாக முன்வைக்கப்படுவதைப் பார்க் கிறோம். OUT OF CONTEXT ஆக அல்லது ALL TOO LITERAL ஆக பொருள் பெயர்த்து(அல்லது திரித்து)ப் பேசுவோரும் பலருண்டு.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பல்லாயிரம் ஆண்டுக ளுக்கு முன்பு படைக்கப்பட்ட ஒன்றில் நடப்புவாழ்வை ஒட்டியும் வெட்டியும் சில இருப்பது இயல்பு.

எதுவாக இருந்தாலும் எந்தவொரு படைப்பையும் முன்முடிவுக ளோடு அணுகி மதிப்பழித்து போட்டு உடைப்பதை விட சாரத்தை எடுத்து சக்கையை விடுத்து அவரவர் வாழ்க்கையை செம்மைப்படுத்திக்கொள்வது சாலச் சிறந்தது.


சமீபத்தில் சேவாலயா என்ற கல்வியமைப்பு - சமூகநல நிறுவனத்தின் தலைவர் திரு.முரளிதரன் பகவத்கீதை யின் சாரம் குறித்து காணொளிகளாக வெளியிட்டவை பாமரனின் பகவத்கீதை என்ற தலைப்பில் நூல் வடிவில் வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 600 பக்கங்கள். விலை ரூ 600. கெட்டி அட்டை. வாசிப்பைக் கடினமாக்காத, கண்ணுக்கு வலியேற்படுத் தாத நேர்த்தியான அச்சாக்கம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, எளிய தமிழில் எழுதியிருக் கும் திரு.முரளிதரன் பகவத் கீதையைக் கரைத்துக் குடித்ததான பாவனையை மேற்கொள்ளவேயில்லை.

39 வயதில் இறந்துபோய்விட்ட பாரதியாரைப் பற்றி சிலர் எழுதும்போது அவருடைய வாழ்க்கையை அருகிருந்து பார்த்ததுபோல், அவர் தனது கவிதைகள் குறித்து, அவற் றின் பொருள் குறித்தெல்லாம் மரண வாக்குமூலம் தந்து விட்டுச் சென்றதைப்போல் அத்தனை authoritative ஆக எழுதுவார்கள். படிக்கப்படிக்க நமக்கு திகிலாகி விடும் - நாம் இத்தனை ஞானசூன்யமாக இருக்கிறோமே என்று!

ஆனால், திரு.முரளிதரனின் எழுத்து அப்படி அமைய வில்லை என்பதே நூலின் மகத்துவம்.

எளிமையாக, அதே சமயம் நூலின் சாரம் நீர்த்துப் போகாதபடி அவர் எழுதியிருப்பதே அவர் பகவத் கீதையை முழுமையாகப் படித்திருக்கிறார், ஆழ்ந்து உள்வாங்கி படித்திருக்கிறார், படித்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு சான்று பகர்கிறது.
நூலில் இடம்பெறும் பதிப்புரை - முனைவர் வானதி TR. ராம நாதன் எழுதியது, ஆசியுரை - சுவாமி கௌதனானந் தர், தலைவர், ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் எழுதி யது, வாழ்த்துரை - S.பாண்டியன், தலைவர், தக்கர் பாபா வித்யாலயா, எழுதியது, வாழ்த்துரை - பாரதியின் கொள்ளுப்பேரன், இசைக் கலைஞர் வி.ராஜ்குமார் பாரதி எழுதியது, எழுத்தாளர் - பத்திரிகையாளர் திரு மாலன் எழுதியுள்ள வாழ்த்துரை, இசைக்கவி ரமணன் (பாரதி யார் என்ற நாடகத்தை உருவாக்கி நடித்தவர்) எழுதி யுள்ள வாழ்த்துரை, நூலாசிரியர் சேவாலயா முரளிதரன் எழுதியுள்ள என்னுரை என இந்நூலில் இடம்பெறும் எல்லா எழுத்தாக்கங்களிலுமே அவற்றை எழுதியவர்கள் தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் நூலின் சிறப்பம் சங்களைக் குறித்துக் கருத்துரைத்திருக்கும் பாங்கும் குறிப் பிடத்தக்கது.

'புகார்ப்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை - கவிஞர் - திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி

'புகார்ப்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை

8, பிப்ரவரி 2023 பதிவுகள் இணைய இதழில் இயக்கு னர் சீனு ராமசாமியின் 'புகார்ப்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை' கவிதைத்தொகுப்பு குறித்து வெளியாகியுள்ள எனது கட்டுரை

                                                    - லதா ராமகிருஷ்ணன். 

*இந்தக் கவிதைத்தொகுப்பில் இடம்பெறும் கவிதைகளும் வேறு சில கவிதைகளும் ஆங்கிலத்தில் என்னால் மொழிபெயர்க்கப் பட்டு சமீபத்தில் நியூ செஞ்சுரி பதிப்பகம் அந்தத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது




- கவிதைத்தொகுப்பு:  'புகார்ப்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை' - சீனு ராமசாமி | பதிப்பகம்:  டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் -

ஒரு துறையில் பிரபலமாக இருப்பவர்கள் அதன் மூலம் மட்டுமே இன்னொரு துறையில் எளிதாகப் பெயர்பெற்றுவிடுவது வழக்க மாக நடக்கும் ஒன்று. திரைப்படத்துறையினர் இலக்கிய வுலகிலும் அரசியல்வெளியிலும் தனியிடம் பிடித்துவிடுவதை இதற்கு உதா ரணங்காட்டலாம். அன்றும் இன்றும் இலக்கியவுலகைச் சேர்ந்தவர் கள் திரைப்படத்துறையில் பெயர் பெற்றிருப்பதும், பெற முயற்சிப் பதும் வழக்கமாக இருந்துவருகிறது.

திரைத்துறையின் வீச்சும், வருமானமும் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் வாழ்க்கைத் தொழிலாக திரைப்படங்களில் பாடல்களெழுதும் தரமான கவிஞர்கள் உண்டு. எழுதப்படும் சாதாரணப் பாடல்கள் இசையின் மூலம் அசாதாரணத்தன்மை பெற, அதில் குளிர்காயும் கவிஞர்களும், திரைப்படப் பிரபலங்க ளோடு தோளோடு தோள் சேர்த்து நிற்கும் புகைப்படத்தைப் பதிவேற்றுவதன் மூலமே தங்கள் கவிதைகளின் தரம் குறித்த பிரமையைப் பரவலாக்கிக்கொண்டிருக்கும் கவிஞர்களும் இங்கே உண்டு. தனித்துவமான கவித்துவம் வாய்க்கப் பெற்ற கவிஞர்கள் திரையுலகத்தினரால் கைவிடப்பட்ட அவலநிலைக்கு இங்கே கணிசமான எடுத்துக் காட்டுகளைக் காட்ட முடியும்.



தரமான சில திரைப்படங்களின் மூலம் திரையுலகில் தம்மை நிலைநிறுத்துக்கொண்டிருக்கும் இயக்குனர் சீனு ராமசாமியின் சமீபத்திய கவிதைத்தொகுப்பான புகார்ப்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை (டிஸ்கவர் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு)யைப் படிக்கக் கிடைத்தபோது மேற்கண்ட எண்ணவோட்டங்கள் மனதில் எழுந்தன.


கவிதைத்தொகுப்பை ஒருவித முரண்பட்ட மனநிலையில் தான் வாசிக்கத் தொடங்கினேன். கவிஞரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் (இது இன்னும் கொஞ்சம் விரிவாக அமைந்திருக்க லாம்), கவிஞரின் சுருக்கமான என்னுரை, அருமையான திரைப்படப் பாடலாசிரியர் என்பதோடு காத்திரமான தமிழ்க் கவிஞராகவும் தன் கவிதைகளின் மூலம் தன்னை அடையாளங் காட்டிச் சென்ற நா.முத்துக்குமாருக்கு தொகுப்பு சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பது, பிரபலங்களிடமிருந்து பல்வேறு முன்னுரை, அணிந்துரை களை வாங்காத பாங்கு ஆகியவை திரு. சீனு ராமசாமி கவிதைகளால் மட்டுமே தன்னைக் கவிஞராக அடையாளங்காட்டிக்கொள்ள விழைபவர் என்பதை உணர்த்தின. தனது திரைப்படப் பிராபல்யத்தினா லன்றி தனது கவிதைகளின் அடர்செறிவின் உதவியால் தன்னை நிலைநாட்டிக்கொள்ள அவர் தகுதி யானவர் என்பதை அவருடைய கவிதைகள் உண்ர்த்திநிற்கின்றன.

கவிதைத்தொகுப்புகள் வழக்கமாக இரு பொதுவான பிரிவுகளில் அமைவதாக வகைப்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை பல கோணங்களில் பார்க்கும், பாடும் கவிதைகளை உள்ளடக்கி யவை. வாழ்வினூடாய் மனிதர், மனித மனம் எதிர்கொள்ளும் பல்வேறு நிகழ்வுகள், உணர்வுகள், தருணங்களைப் பற்றிப் பேசுபவை. இதில் திரு. சீனு ராமசாமியின் கவிதைத் தொகுப்பு இரண்டாம் பிரிவைச் சேர்ந்தது எனலாம்.

ஒரே கருப்பொருளைப் பல கோணங்களில் பேசுவதாக இருந்தாலும், பல கருப்பொருட்களைப் பற்றிப் பேசினாலும், ‘கவிப்பார்வை’ என்ற ஒன்று அந்தக் கவிதைகளில் புலப்படும். மொழிநயம் என்ற ஒன்று அந்தக் கவிதைகளில் புலப்படும். அவை, சம்பந்தப்பட்ட கவிஞரின் கவிதைகள் மேலோட்டமான வையா, ஆழமில்லாத ஆரவாரத்தன்மை கொண்டவையா, கைத்தட்டலைக் கோரி எழுதப்பட்டவையா, சுய புலம்பலும் கழிவிரக்கமுமே கவிதையாகிவிடும் என்ற பிரமையில் உழலுபவையா என பலப்பல விஷயங்களை தேர்ந்த வாசகருக்குத் தெளிவாக்கி விடும்!

 - சிநேகிதரும் சக கவிஞருமாகிய கவிஞர் சீனு ராமசாமியிடம் கவிஞர்
அய்யப்ப மாதவன் தனது சமீபத்திய கவிதைத்தொகுப்பைத் தந்துவக்கும் தருணம் -


திரு.சீனு ராமசாமியின் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகளில் ஆழமும், மொழிநயமும், சமகாலத் தமிழ்க்கவிதைப்போக்குகளில் அவருக்கிருக்கும் பரிச்சயமும், பயிற்சியும் தேர்ச்சியும் புலனாகின்றன மனவினை என்ற கவிதையின் தலைப்பை உதாரணமாகக் கூறலாம். மணவினை என்ற வழக்கமான சொற்பிரயோகம் இங்கே மனவினையாகத் தரப்பட்டுள்ளதில் ஒரு கவித்துவம் புலப்படுகிறது.

அவள்
தரவும் இல்லை
அவன்
பெறவும் இல்லை
என்றெனில்
இடையில் ஒரு பிச்சிப்பூ
மலராமல்
இருக்கிறது

இந்த ஆரம்பவரிகளில் இடம்பெறும் என்றெனில், பிச்சிப்பூ என்ற சொற்கள் குறிப்பிட்டுச் சொல்லப் படவேண்டியவை. (ஒரு வாசகராக என்னளவில், இந்த ஆரம்ப வரிகளோடு கவிதை நிறைவடைந்துவிடுகிறது என்பதால் அடுத்துவரும் வரிகள் ‘விளக்கவுரை’ போல் தோன்றுகின்றன.

முத்துப்பேச்சி என்ற தலைப்பிட்ட கவிதையின் ஆரம்பப் பத்தி கீழ்க்காணும் வரிகளோடு முடிகிறது:

விடுமுறைக் காலங்களில்
வெளிர் மஞ்சள் வேப்பம்பழங்களைப்
பொறுக்கும்போது
என் தலை முட்டியதில்
சிநேகிதி ஒத்தக்கண் முத்துப்பேச்சி
பெரிய மனுசியானாள்.

பெண்ணின் உடல்சார் இயற்கை நிகழ்வொன்றை ஓர் ஆண் அவனுக்கேயுரித்தான விடலைப்பருவ, வளர்பருவ, வாழ்நாள்பூராவுக்குமான அனுமானத்தில் ‘தன் தலை முட்டியதில்/ பெரிய மனுசியானதாகப் பேசும் இந்தக் கவிதையின் மையக் கரு முத்துப்பேச்சியல்ல, வேப்பமரமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

புகார்ப்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை என்ற கவித்துவமான தலைப்பு முன்வைக்கும் குறியீடுகள் கவனிக்கத்தக்கவை.

பக்கம் 49இல் இடம்பெறும் ‘காதலன்’ என்ற தலைப்பிட்ட கவிதை தமிழ்க்கவிதைவெளியில், சங்க காலம் தொட்டு சமகாலம் வரை மிக அதிகமான அளவு பாடுபொருளாக அமைந்த நபரை, அவர் தொடர்பான நிகழ்வுகளை, உணர்வுகளை தனித்துவத்தோடு எடுத்தாள்கின்றன. இதுவரை சொல்லப்படாத, பேசப்படாத விஷயங்களைப் பேசுவதால் ஒரு கவிதை வாசக கவனத்தை ஈர்ப்பது போலவே இதுவரை பேசப்பட்ட, சொல்லப்பட்ட நிகழ்வுகளை, உணர்வுகளை புதிய கோணங்களில் பார்ப்பதன் மூலமும், புதிய உவமான உவமேயங்கள், குறியீடுகளைப் பயன்படுத்திக் கவிதையாக்குவதன் மூலமும் அதேயளவு வாசக கவனத்தை ஈர்க்க முடியும்:

‘உன் சீயக்காய் வாசனையின்
நறுமணமிக்க அதிகாலை
பிரகாசமான நம்பிக்கைகளை
எனக்குத் தந்திருக்கிறது

என்று தெரிவித்து _

நீ வாசித்த என் கவிதை வரிகளில் விழுந்த
ஒரு புன்னகையைப் பிடித்துறங்கிய எனக்கு
நீ நீங்கிச் சென்ற நாளின் முதல் மூன்று ஜாமங்கள்

துயர்மிக்கவை
என்று நகர்ந்து _

என் கவிதையின் மூலம் உன்னை மீட்பேன் என

எண்ணிய
என் காலம் நம்பிக்கையானது

என்று முடியும் இந்தக் கவிதையில் காலம், நம்பிக்கை ஆகிய இரண்டு சொற்களின் கூட்டிணை விலான அர்த்தப்பரிமாணங்கள் உய்த்துணரத்தக்கவை. ’ஆசை முகம் மறந்துபோச்சே – இதை ஆரிடம் சொல்வேனடி தோழி’ என்று அலைக்கழியும் பாரதியின் கவிதைவரிகள் ஏனோ நினைவுக்கு வந்தன.

நாள் என்பது நாளல்ல
பின்பொரு சமயம்
ஏங்கித் தவிக்கும்
நினைவு (நாள் – பக்.27)

மகளின் தலைக்கு மேலே
வட்டமிட்டன பஞ்சவர்ணங்கள்’ (மந்திரச்சொல் – பக்: 38 – 40)

‘நீ கண்மூடி
லயித்த கணத்தில்
களவு போன
அலைபேசியை
எப்படி மீட்பாய்
நான் அங்கிருந்துதான்
உன்னை பின் தொடர்வேன் ( தவம் --- ப;41)

என்று ஒரு முழுக்கவிதையில் தன்னிறைவு பெற்ற தனிக்கவிதைகளாகத் திகழும் வரிகள் நிறையவே கிடைக்கின்றன இந்தத் தொகுப்பில்.

ஆழ்மனம் என்ற தலைப்பிலான சிறுகவிதை (பக்.58) ‘கலவியின் உச்சகணத்தில்/ நாராயணா/ நாராயணா/ நாராயணா/ என்று தானறியாமல் அழைத்தவர்/ சமீபத்தில் மதம் மாறிய/ ஃபெர்ணாண்டஸ் என்கிற பார்த்தசாரதி/ என்று முடிகிறது. பார்த்தசாரதி என்ற பெயர் இந்துவைக் குறிப்பதோடு ஒரு குறிப்பிட்ட பிரிவினரையும் குறிக்கிறதா, ஆமெனில் பிரக்ஞாபூர்வமாக அப்படிக் குறிக்கிறதா, அப்படிக் குறிப்பிட்டால் அது சரியான தகவலா’ என்பதாக மனதில் கேள்விகள் எழுந்தாலும் இந்தக் கவிதை மதமாற்றம் சரியா, தவறா என்று பட்டிமன்றம் நடத்தித் தீர்ப்
பளிக்கப் புகாமல் மதம் மாறியிருப்ப வரின் உளவியலைக் கவிநயத்தோடு சித்தரித்திருப்பது நிறைவான வாசிப்பனுபவத்தை வரவாக்குகிறது.

ஒரு தனிநபரின் உணர்வை, அனுபவத்தை அதனூடாக சமுக நிலவரங்களை பிரக்ஞா பூர்வமாக அல்லது கவிதையின் இயல் பான போக்கில் இரண்டறக் கலந்த அம்சமாகவும் பேசும் கவிதை களுக்கு இக்கவிதை ஓர் எடுத்துக்காட்டு.

சில கவிதைகள் அளவுக்கதிகமாக நீட்டியும் விரித்தும் தரப்பட்டி ருப்பது அந்தக் கவிதை களின் அடர்செறிவைக் குறைப்பதாக உள்ளது. (அப்படி நீட்டி விரித்து விவரித்து எழுத வேண்டிய தேவையைக் கவிமனம் உணர்ந்திருக்கலாம்). மற்றபடி, கூறியது கூறல், உரத்துக் கூறல், எள்ளலாய்க் கூறல் இந்தக் கவிதைத் தொகுப்பில் இல்லை. எல்லாக் கவிதைகளுமே in all seriousness எழுதப்பட்டிருக்கின்றன என்ற உணர்வு இந்தத் தொகுப்பிலுள்ள கவிதை களை வாசிக்கும்போது நமக்குள் மேலோங்கி நிறைவான வாசிப்பனுபவம் வரவாகிறது.

lathaa.r2010@gmail.com

ஒண்ணுமே புரியலை உலகத்திலே…! - லதா ராமகிருஷ்ணன்\

 ஒண்ணுமே புரியலை உலகத்திலே…!

- லதா ராமகிருஷ்ணன்\

............................................................................................................................

இரண்டு வருடங்களுக்கு முன்பு மின்னஞ்சலில் என்னை ஒரு பெண்மணி தொடர்புகொண்டு தனது சில எழுத்தாக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவேண்டும், என்ன கட்டணம் என்று கேட்டிருந்தார்.

பிடித்த பிரதிகள் நிறையவற்றை நான் கட்டணமின்றியே என் மனநிறைவுக்காக மொழிபெயர்த்திருக்கிறேன்; செய்துகொண் டிருக்கிறேன். என்றாலும் நான் தொழில்முறை மொழிபெயர்ப் பாளராக கட்டணம் பெற்று மொழிபெயர்க்கவும் செய்கிறேன். ’ஆனால், நான் தொழில் முறை மொழிபெயர்ப் பாளராக இருந் தாலும் எல்லாப் பிரதிகளையும் மொழிபெயர்க்க ஒப்புக் கொள்வதில்லையென்பதைத் தெரிவித்து அவர் யார் , எதை மொழி பெயர்க்க வேண்டும், மாதிரி பிரதி ஒன்றை அனுப்பி வைத்தால் நலம் என்று பதிலளித்திருந்தேன்.

ஒரு மொழிபெயர்ப்பை செய்து அனுப்புங்கள் – நான் பார்க்க வேண்டும், ஏன் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க கட்டணம் அதிகம், ஏன் தட்டச்சு செய்ய இன்னொருவரிடம் தருகிறீர்கள், நேரடியாக கணினியில் மொழிபெயர்த்தால்தானே தவறுகளைத் திருத்தமுடியும் , நான் அனுப்பும் பிரதிகள் எந்த வயதினருக்கு ஏற்றவை என்று ஆலோசனை தாருங்கள், ஏற்கெனவே ஒருவர் மொழிபெயர்த்த சில பிரதிகளை எடிட் செய்யவேண்டும் என்றெல்லாம் நிறைய கேள்விகள், சந்தேகங் கள் அவரிடமிருந்து.

முன்பு ஒரு முறை பதிப்பகத் தோழி ஒருவர் கூறியது நினைவுக்கு வந்தது. வருகை தரும் சில பதிப்பாளத் தோழர்கள் எந்தப் புத்தகம் போடுகிறீர்கள் என்று நட்புரீதி யாகக் கேட்டு தகவல்களைப் பெற்று பிறகு சம்பந்தப்பட்ட படைப்பாளிகளைத் தொடர்புகொண்டு அந்தப் புத்தகங்களைத் தாங்கள் பதிப்பிக்கக் கேட்டு காரியத்தை முடித்துக் கொண்டுவிடுவது உண்டாம்.

அதுபோல் இந்தப் பெண்மணி என்னிடமிருந்து சில தகவல் களைத் திரட்ட முயல்கிறார் என்பதும் புரிந்தது. ’படைப்பாளிக் கும் மொழிபெயர்ப்பாளருக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை யும் மரியாதையும் இருக்கவேண்டி யது இன்றியமையாதது. எனவே இந்த மொழிபெயர்ப்புப் பணியை ஏற்கவியலாது என்று தெரிவித்தேன்.

பதிலில் ’பத்துவருடங்களுக்கு முன் நீங்கள் என்னுடைய உறவி னரின் படைப்பை ஒரு பத்திரிகைக்காக மொழி பெயர்த்திருந் தீர்கள். அதில் எங்களுக்கு பல போதாமை கள் இருந்தன. இருந்தும் உங்கள் பெயர் மொழிபெயர்ப்பு வெளியில் அடிபடுவ தால் உங்களைத் தொடர்புகொண்டேன்’, என்று முடித்திருந் தார்.

அப்போது நான் செய்தது ஆங்கிலத்திலிருந்து தமிழிலா, தமிழி லிருந்து ஆங்கிலத்திலா, கட்டணம் பெற்றுக் கொண்டு மொழி பெயர்த்தேனா, அல்லது பெறாமல் மொழிபெயர்த்தேனா - என்ப தொன்றும் நினைவில் இல்லை. திருப்தியில்லாத மொழி பெயர்ப்பு செய்தவரை ஏன் மீண்டும் நாடவேண்டும் என்று தெரியவில்லை.

பிறகு, அவர் யார் என்று கூகுளில் தேடினால் ‘பெரிய மொழி பெயர்ப்பாளர், பொருள்பெயர்ப்பாளர் – இது – அது என்று பெரிது பெரிதாய் தகவல்கள் மின்னின. இத்தனை தேர்ந்த மொழி பெயர்ப்பாளர் ஏன் என்னை நாடி வர வேண்டும்?

மொழிபெயர்க்க ஆரம்பித்த சமயத்தில் அப்படித்தான் ஒரு பெண்மணி என்னைத் தேடி வந்து தன்னுடைய கட்டுரை யொன்றை மொழிபெயர்க்கத் தந்து வாங்கிக் கொண்டு போனார். பின்னர் அவருடைய ஆங்கிலக் கட்டுரைகள் முன்ன ணிப் பத்திரிகைகளில் வந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். குழப்பமாக இருந்தது.

ஒருவேளை அவர்களெல்லாம் அத்தனை பிஸியானவர்கள் போலும், அதனால்தான் தங்கள் கட்டுரைகளை மற்றவர்களை மொழிபெயர்க்கச் செய்து தங்கள் பெயரில் வெளியிட்டுக்கொள் கிறார்களாயிருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். மொழி பெயர்ப்பாளர் என்ற வெளிச்சம் வேண்டாத அவர்களுடைய நட்பினர், வேறு சிலர் அப்படிச் செய்துதருவார்களாயிருக்கும். அது அவர்களுக்கிடையேயான பரிமாற்றம்.

ஆனால், நான்பாட்டுக்கு மூலையில் அமர்ந்து ஏதோ மொழி பெயர்த்துக்கொண்டிருந்தால் இப்படித் தேடி வந்து தொல்லை தரவேண்டிய, முடியுமானால் மொழி பெயர்ப்புச்சுரண்டல் செய்ய, அல்லது ஒரு மொழிபெயர்ப்பாளராய் என்னை மதிப் பழிக்க முனையவேண்டிய தேவையென்ன?

Thursday, July 4, 2024

ஒருமையைத் தேடி.... எழுதியவர் : மூஸா ராஜா

 ஒருமையைத் தேடி....

(சூஃபி பார்வையின் வழியே குரானும் பகவத்கீதையும்)

எழுதியவர் :

மூஸா ராஜா

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:

எஸ்.ஆர்.தேவிகா

மதங்கள் மனிதர்களைப் பிரிக்கவோ மனிதர்களி டையே வெறுப்பை வளர்க்கவோ அல்ல என்பதை குரான் - பகவத்கீதை இரண்டிலும் உள்ள இணக்கப் புள்ளிகளைச் சுட்டிக்காட்டி வலியுறுத்தும் நூல். அவசியம் படிக்க வேண்டியது.

புதுப்புனல் வெளியீடு

மாற்றீடுகள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மாற்றீடுகள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

குழந்தைகள் இயல்பிலேயே புரட்சியாளர்கள்.

விலைமதிப்பற்றதென சமூகம் வைத்திருக்கும் பட்டியலில் உள்ள பொருட்களை யெல்லாம் விலக்குவதாய் அவர்களிடம் ஒரு பட்டியல் உள்ளார்ந்து இருக்கும்.

அழுக்கு மண், கசங்கிய தாள், சிகரெட் துண்டு, கையால் தொட்டு ணரத் தூண்டும் சிறுநீர், ஆட்டுப்புழுக்கைகள், யாரோ துப்பிப் போட்டிருக்கும் தூசிபடிந்த மீதி மிட்டாய் விரல் நுழைத்துப் பரவசக் கூடிய ஓட்டைகளை வைத்தி ருக்கும் சாயம்போன சட்டை…..

கோலிகுண்டைக் கண்ணருகே வைத்து உள்ளே தெரியும் வான விற்களைப் பார்த்துப் பரவசப்பட்டுக்கொண்டிருக்கும் சிறுவனிடம் வைரக்கல்லைக் கொடுத்தால் அவன் அதை மறுகையால் அப்பால் ஒதுக்கும் சாத்தியங்களே அதிகம்.

மணல்வீடு கட்டிவிளையாடும் குழந்தைகளுக்கு மண லின் விலை குறித்தோ, அதன் ஒப்பீட்டு மதிப்பீடு குறித்தோ என்ன கவலை யுமில்லை.

கஷ்டப்பட்டுக் கட்டிய மணல்வீட்டை ஒரு நொடியில் காலால் எட்டியுதைப்பது எத்தனை அளப்பரிய, விடுதலையுணர்வு, தாமரை யிலைத்தண்ணீர்த்துவம்!

விளையாடும் சிறுமிக்கு காதில் லோலாக்கும் கணுக்காலில் கொலுசும் இடைஞ்சலாகவே இருக்கும். தாகூர் சொல்லியிருக் கிறார். அவர் சொல்லாவிட்டாலும் அதுவே உண்மை.

குழந்தையின் பொம்மைகள் உயிருள்ளவை . அவை அழும் சிரிக் கும் அவற்றுக்கும் வலிக்கும் பசியெடுக்கும்.

ஊர்ந்துசெல்லும் சிற்றெறும்புகளை வேண்டுமென்றே நசுக்கி விடுவதில்லை குழந்தைகள். அவற்றோடு சேர்ந்து பொந்துக்குள் சென்று பார்க்கவே ஆவலாயிருக்கின்றன.

கெட்ட வார்த்தை நல்ல வார்த்தை என்றெல்லாம் குழந்தைக்குத் தெரியாது. கெட்டவர் நல்லவர் ஏழை பணக் காரர் என்ப தெல்லாமும்கூட.

ஒரு குழந்தையின் சேமிப்பில் இருக்கலாகும் குந்துமணிகள் விலைமதிப்பற்றவை.

குழந்தைக்குள்ளிருக்கும் பிரபஞ்சம் அதற்குப் போதுமானதாக இருக்கிறது.

வாழ்வதும் வளர்வதும் குழந்தைக்கு ’இங்கே – இப்போது’ மட்டுமே யாகிறது.

தங்களுடைய தேர்வுகளுக்காக அடியுதைகளை, ஆங்கார வசை களை எதிர்கொள்ள அவர்கள் மன அளவில் அஞ்சு வதேயில்லை.

ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும் வளர்ந்தவர்கள் சூழ்நிலைக் கைதிகள், சமூக பலியாடுகள், என்பதெல்லாம்....