LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, July 12, 2022

மாய யதார்த்தம் - லதா ராமகிருஷ்ணன்

 மாய யதார்த்தம்

 லதா ராமகிருஷ்ணன்

 

ஒரு//* ஒரு கவிதை எப்படி மனதில் ஒரு பொறியாக உருவாகிறது, எப்படி நகர்கிறது, அதன் போக்கில் நேரும் மாற்றங்கள் என் னென்ன என்றெல்லாம் அறிய ஒரு கவிஞராகவும் வாசகராகவும் எனக்கு என்றுமே ஆர்வமுண்டு.

அதனால்தான் ஒவ்வொரு கவிஞரும் தங்களுடைய ஒரு கவிதை உருவான விதத்தையாவது எழுதி அவற்றை ஒரு தொகுப்பாகக் கொண்டு வரவேண்டும் என்பது என் நீண்ட நாள் விருப்பம்.

இத்தகைய தொகுப்புகள் கவிதை புரிவதற்கான, உணரப்படுவதற் கான ஒரு சில திறப்புகளையாவது ஆர்வமுள்ள வாசகர்களுக்குக் காட்டும் என்றும் தோன்றுகிறது

  

//இது என் கவிதை//

 

மாய யதார்த்தம்

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 

திடீரென்று ஒரு மாயக் கதவு

திறந்துகொண்டதுபோல் தோன்றியது

மாயக்கதவு மனதின் உள்ளும் வெளியும்

பப்பாதியாய்.

மாயம் ஏன் எப்போதும் கதவாகிறது?

ஜன்னலாவதில்லை?

எத்தனை உயரத்திலிருந்தாலும்

மாயஜன்னல்வழியாக வெளியே குதிப்பது

கடினமாக இருக்கவியலாதுதானே.

மாயஜன்னலிருந்தால் அதன்வழியாக

விண்நோக்கிப் பறப்பதும் சாத்தியமே.

ஒருவேளை மாயஜன்னல் வழியாய்

ஏகமுடிந்த வானத்தில்

மேகங்கள் மெய்யாகவே நீரலைகளா

யிருக்கக்கூடும்

ஆனாலும் மாயம் எப்போதும் கதவாகவே

மாயக்கதவு எப்படியிருக்கும்

மாயம் என்றால் என்ன?

மன்னிக்கவும் -

அகராதிச்சொற்கள் மாயத்தைப்

பொருள்பெயர்த்தால்

அது சரியாக வராது.

அதற்கொரு மாய அகராதி வேண்டும்

மாய அகராதியெனில் அதை நிரப்ப

மாய வார்த்தைகள் வேண்டும்

மாயவார்த்தை என்று தனியாக

இருக்கிறதா என்ன!

எதிர்பார்க்குமொரு குறுஞ்செய்தியில்

இல்லாதிருக்கும்

சின்னச் சொல்லொன்று

என்றுமான வானவில்லாய்!

மாயமென்பது மனமா

வாழ்வின் மர்மமா

உணர்வின் மடைதிறப்பா

உன்மத்தப் பரவசமா

அறிவின்பாற்பட்ட அதிவிழிப்புநிலையா

அறிவிற்கப்பாற்பட்ட ஆனந்தக்கண்ணீரா

காலங்காலமாய் கடைந்து மேலெழும்பி

வரும்

அமிழ்தா அதன் கசடா…..

அசடின் கைவசமுள்ள மந்திரக்கோல்

சுழலச் சுழலும் பூமிக்கோளங்கள்

அவரவருக்குள்ளும் வெளியும்…..

மாயாதிமாயங்களும் மாயமாகிப்போகு

மொரு மாயவாழ்வின் தூல சூக்குமங்கள்

மகாமாயமாய்

மாயக்கானல்நீர்குடித்துத் தாகம் தணிக்கும்

மாயமானுடைய கொம்புகளின் கொலைக்

கூர்மைக்கும்

அழகிய விழிகளின் அப்பாவித்தனமான

பார்வைக்குமான

இணைப்புப்பால மாயம்

முதல் இடை கடை யற்று…..

 

இந்த என்னுடைய கவிதையைப் பொறுத்தவரை

 

(ஒரு) காலையில் எதிர்பாராமல் ஒரு மொழிபெயர்ப்புப்பணிக்கான தொலைபேசி அழைப்பு வந்து அது ஒப்புக்கொள்ளப் பட்டு நாளை மொழிபெயர்ப்புக் கட்டண முன்பணம் வந்து சேரும் என்ற நம்பிக் கையில் இதுவரை சில பிரதிகளைத் தட்டச்சு செய்துகொடுத் திருக்கும் இரண்டு தோழியருக்குத் தரவேண்டிய பணத்தில் கொஞ்சமாவது தரவேண்டும், என்னுடைய இரண்டு நூல்களை லே-அவுட் செய்து கொடுத்த தோழருக்குத் தரவேண்டிய பணத்தில் கொஞ்சமாவது தரவேண்டும் என்று தன்னிச்சையாய் மனம் நீண்ட பட்டியல் தயாரித்துக் கொண்டேபோக _

 

_ மாலையில் மொழிபெயர்ப்புபணியைத் தர முன்வந்த வர்கள் அவர்களளவில் நியாயமான காரணங்களுக்காய், என்னிடம் மொழிபெயர்ப்புப் பணியைத் தரும் திட்டத்தை GREEN SIGNAL இலிருந்து ORANGE SIGNAL க்கு மாற்றியிருக்கும் செய்தியைத் தெரிவித்தார்கள். அது RED SIGNAL ஆக மாறும் சாத்தியமே அதிகம் என்பது உள்ளுணர்வுக்குப் புரிகிறது. (அதுவே நடந்தது)

 இதன் தொடர்பாய் ஏதேதோ எண்ணங்கள் மனதில் கலவையாய்..... துக்கம், ஏமாற்றம் என்பதைவிட வாழ் வின் UNPREDICTABILITY குறித்த சிந்தனையோட்டமாய் தோன்றிக் குழம்பி இந்தக் கவிதை யாய் வந்து விழுந்தாயிற்று.

இன்னும் நேர்த்தியாய் கவிதையைச் செதுக்க முடியும். அப்படிச் செய்தால் வெறும் CRAFT ஆகிவிடுமோ என்று எப்போதும் போல் ஒரு சஞ்சலம்.

 கவிதையை எழுதிக்கொண்டே வருகையில் இதே விஷயம் இதை விட அருமையாய் எழுதப்பட்டிருக்கிறதே என்ற நினைவு மேலெ ழும்பி மேற்கொண்டு எழுதவிடாமல் வழிமறிக்கும். ஆனால் எழுதாமலிருக் கவும் முடியாது!

 எங்கோ ஓரிடத்தில் கவிதையை முடித்துத்தானே ஆக வேண்டும், அதை இங்கேயே செய்தால் என்ன என்று அங்கங்கே சில வரிகளில் தோன்றும்.

ஆனாலும் இன்னும் சொல்ல வேண்டியது பாக்கியிருக்கிறது என்பதான உணர்வு கவிதையை இன்னும் கொஞ்சம் நீளமாக்கும்.

ஒரு கட்டத்தில் இதற்குமேல் ஏதும் சொல்வதற்கில்லை என்றவித மான நினைப்பும், ஒருவித அலுப்புமாய் கவிதை முடிக்கப்பட்டு விடும்.

ஆனாலும் கவிதையில் இன்னும் எழுதப்படாத வரிகள் மீதமுள் ளன என்பதை முதலில் எனக்குக் குறிப்புணர்த்துவதாகவே முடிவு வரிகளில் ஒருவித பூடகத்தன்மை சமயங்களில் இயல்பாகவும் சமயங்களில் பிரக்ஞா பூர்வமாகவும் இடம்பெறும்