LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, July 25, 2023

அம்பலம் _ ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

அம்பலம்

_ ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
 //2016, ஜூலை 25இல் பதிவேற்றப்பட்டது//


பெருந்தகை யவர் அருமருந் தெழுத்தாளர்
தனக்கு முன்பாகப் பேச வேண்டியவரை மனிதநேயத்தோடு
மிக லாவகமாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப்
பேசஎழுந்தபோது
அலைகளின் சலசலப்பும் சிறகுகளின் மென் படபடப்பும்
இடி முழக்கமும் பூமாரிப் பொழிவும்
நிலநடுக்கமும் பாறைச்சரிவும் பிரளயமும்
புது உலகப் புறப்பாடும்
கேட்கக் கிடைக்கிறதோ என்று
சிலர் செவிகளைக் கூர்மையாக்கிக் கொள்ள
சிலர் கேட்டதாகவே நம்பத் தொடங்க
இன்னும் சிலர் அந்தப் பாதங்கள் தரையில் பதிந்துள்ளனவா
அல்லது அவர் உண்மையில் தேவதையே தானோ வென
திகைப்பும் பிரமிப்பும் சேரக் குனிந்துபார்க்க
நேரமில்லை என்றாலும் வந்தேன்
எந்தக் கூட்டத்திற்கும் போவதில்லை என்றாலும்வந்தேன்
என்றாலும் என்றாலும் என்றாலும்
என்று அடுக்கிக் கொண்டே போனதில் சுரந்திருந்த
‘போனால் போகட்டும் என்று’
பேரருள் பாலிப்பாய்புரிந்து கொள்ளப்பட்டிருக்குமோ
அல்லது சுட்டிருக்குமோ சுளீரென
யாமறியோம் பராபரமே
அன்றி அதையும் கவித்துவ வரியாகப்
பரவசங் கொள்வோர் என்றும் உளர் தானோ ஏனோ
என்றும் உளறிக்கொண்டிருக்கும் வாயிலிருந்து ஒழுகுவது
தேனோ நெய்யோ தீர்த்தம் தானோவென
சிலர் மயங்க
சிலர் மருள
உன் முன் னோர் என் முன்னோர் அவர் முன்னோர்
இவர் முன்னோர்
உன் ரசனை என் அறிவு அவர் தெரிவு இவர் பரிவு
எல்லாமே
வெத்துவேட்டுபித்தலாட்டம் நச்சுப்பாம்பு நாராசம் என
மிச்சம் மீதி வைக்காமல் ஒரு கச்சிதக் கணக்கோடு
கண்ட தலை விண்ட தலை கண்கொள்ளாத் தலை
விள்ளவியவியலாத் தலை
சொட்டைத் தலை மொட்டைத் தலை
அறுவைச் சிகிச்சைக்கு ஆளான தலை
பிறந்த பிறவா இறந்த இறவா வாரிய வாரா
இன்னும் ஏராளம் ஏராளம் தலை களை யெல்லாம்
தனி அடை யாளங்களை அழித்துக் கூழாக்கி
வெட்டிச்சாய்த்துக் காணாப் பொணமாக்கிய பின்
தன் இடம் உறுதிப்பட்டுவிட்ட திருப்தியோடு
தரையில் மிதக்கும் பல்லக்கே போன்ற அசைவுடன்
புறப்பட்டுச்சென்றவர்
பன்னாட்டுப் பெருமுதலாளி தயாரிக்கும்
திரைப்பட விழா வொன்றின்
குளிரூட்டப் பட்ட பேரரங்கிற்குள் நுழைந்து
மேடையேறிப் பொருந்தி யமர்ந்துகொண்டார்
கட்டாயம் இடையில் கிளம்பிப் போகமாட்டார்
இறுதிவரை அங்கேயே தான் இருப்பார்.


No comments:

Post a Comment