LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, September 13, 2017

என்னை விட்டுவிடுங்கள்

என்னை விட்டுவிடுங்கள்
ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)

நன்றாகவே அறிவேன் ஐயா
நீங்கள் என்னை நலம் விசாரித்து 
நயத்தக்க நாகரிகத்துடன் நாலும் அளவளாவுவதெல்லாம்
சில பல செய்திகளை என்னிடமிருந்து சேகரித்து
நான் சொல்லாததைச் சொன்னதாய் செய்தி பரப்பவே.
ஊர்வன பறப்பனவுக்கு உள்ளதெல்லாம் ஐந்தே அறிவுதானாம்
உங்களுக்குத் தலா பத்துப் பதினைந்துகூட இருக்கலாம்.
உயர்வானவராகவே இருங்கள், ஆனால்
அடுத்தவரை அவமதிப்பதற்கும் அவதூறு பேசுவதற்குமே 
அவையென்று ஆகிவிட்ட அவலத்தை 
இன்றேனும் எண்ணிப்பாருங்கள்.
ஆன்றோரே! சான்றோரே! மீண்டும் 
மன்றாடிச் சொல்கிறேன் _
உங்கள் போட்டி பொறாமைகள் பொல்லாப்பு 
பொச்சரிப்புகளையெல்லாம்
நீங்கள்தான் சுமக்கவேண்டும்
அவரவர் சிரசுகளில்.
என் தலையில் ஏற்றப்பார்க்காதீர்கள்.
பனங்காயின் கனத்தையும் சுமக்கலாகும்
என் குருவித்தலையால், தேவையெனில்
உங்கள் குப்பைக்கூளங்கள் கழிசடைகளையெல்லாம்
வழிநீளச் சுமந்து ஆவதுதான் என்ன?
இல்லாததை இருப்பதாக, இருப்பதை இல்லாததாகப் 
பொல்லாங்கு சொல்லிச் சொல்லி 
என்ன கண்டீர்?
நல்லோரே வல்லோரே
சொல்லுங்கள்.
பித்துப்பிடித்ததுபோல்
தெரிந்தவர் தெரியாதவர் தலைகளையெல்லாம் ஏன்
எத்திக்கொண்டேயிருக்கிறீர்கள்?
பெருமதிப்பிற்குரியோரே! பெருந்தகைகளே!
உத்தமர்களில்லை நீங்கள்
அறிவேன்
உன்மத்தர்களுமில்லை.
உங்களைக் கலந்தாலோசிக்காமல்
உரக்க வழிமொழியாமல்
சுயம்புவாய் எழுதுபவர் கைவிரல்களை அறுத்தெறியும் வெறியில்
உங்கள் நாவிலும் எழுதுகோல் முனையிலும் பிச்சுவாக்கத்தியோடு
நகர்வலம் வந்துகொண்டிருக்கிறீர்கள்.
மோதிரம் அணிந்திருப்பதொன்றே உங்களுக்கான தகுதியென்று
தேடித்தேடித் தலைகளைக் குட்டுகிறீர்கள்
ரத்தம் சொட்டச்சொட்ட.
ரணகாயமடைந்தவர்கள் நன்றிபாராட்டவேண்டும் என்று 
மனதார விரும்பும் உங்கள் மனிதநேயம்
மெய்சிலிர்க்கவைக்கிறது.
மறவாமல்
எரிகொள்ளியை எல்லா நேரமும் 
முதுகுப்புறம் மறைத்தபடியே
நட்புபாராட்டிவருகிறீர்கள்.
என்றேனும் நெருப்பு உங்களையே பதம்பார்த்துவிடாமல்
கவனமாயிருங்கள்
(
உங்களுக்குச் சொல்லித்தரவேண்டுமா என்ன!)
எப்படியோ போங்கள் _
என்னை விட்டுவிடுங்கள்.


No comments:

Post a Comment