LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, January 19, 2015

காலத்தின் சில தோற்ற நிலைகள் (ரிஷியின் 4ம் கவிதைத் தொகுப்பு) 1 - 5

காலத்தின் சில தோற்ற நிலைகள்
(ரிஷியின் 4ம் கவிதைத் தொகுப்பு) 1-5
[வெளியீடு: காவ்யா பதிப்பகம்.
முதல் பதிப்பு 2005

]

                       
                         சொல்லவேண்டிய சில
_ ரிஷி’காலாதிகாலம் குடுவைக்குள்ளிருந்துவரும் பூதம்
மூச்சுத் திணறி விழி பிதுங்கி வெளிவந்தாக வேண்டிய நாளின் நிலநடுக்கங்களை
நன்றாக உணர முடியும் அதன்  நானூறு மனங்களால்.
முதலில் தகரும் குடுவையின் உறுதியை
அறுதியிட்டபடி நகரும் பகலிரவுகள்.
பாவம் பூதம், குடுவை, காலம், நான், நீ,
 யாவும்….நானே குடுவையாய், நானே பூதமாய், எதுவோ தக்ர்ந்து, எதுவோ விடுதலையாகி எழுதப்படும் என் கவிதைகளில் எதிரொலிப்பதும் பிரதிபலிப்பதும் ஒரு மனமா? நானூறு மனங்களா? எல்லாம் என்னு டையவையா? ஒரு மனதின் கிளைகளோ, வெவ் வேறு மனங்களின் கூட்டிணைவோ _ கவிதையை எழுதி முடித்த பின் எதையும் தெளிவாக வரைய றுத்துச் சொல்ல இயலவில்லை. கவிதையை ‘அபோத நிலை’யில் எழுதுகிறேன் என்பதல்ல. முழுப் பிரக்ஞையோடு தான் எழுதுகிறேன். ஆனால், அந்தப் பிரக்ஞை, நம்முடைய பொதுவான, இயல் பான பிரக்ஞை யிலிருந்து ஏதோ ஒரு விதத்தில் துல்லியமாக வேறுபட் டிருக்கிறது என்று தோன்று கிறது. அதனால் தானோ என்னவோ, என் கவி தையை நானும் ஒரு வாசகராகப் படிக்கும் தருணங் களே அதிகம். இதன் காரணமாகவே ‘பெண் கவிஞர்’ என்ற அடைமொழியும் பொருளற்ற தாகத் தோன்று கிறது.

ஒரு விஷயம் அல்லது உணர்வு பூதமாக மனதில் அடைபட்டு மூச்சுத்திணறலை  அதிகரித்துக் கொண்டே இருக்கும் போது அதை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டிய அவசரத் தேவையை மனம் அழுத்தமாய் உணர்ந்து அதன் விளைவாய் கவிதை எழுதப்படுகிறது. அல்லது, ஓர் உணர்வின் தாக்கத்தில் நாமே பூதமாகி விசுவரூபமெடுக்கி றோம் கவிதையில். அல்லது, நானாகிய இந்த் அன்புக்குரிய பூதம் அத்தனை ஆனந்தமாய் பீறிட்டு வெளியேறி குமிழ்களையும், வானவிற்களையும் தன் மொழியால், தீண்டலால் நிரந்தரமாக்கிக் கொண்டே போகிறது. அதாவது, போக முயற்சிக் கிறது. அப்படிச் செய்வதன் மூலம் அதனுடைய பூத குணங்களும், கணங்களும் கூட தாற்காலிகத் தைத் தாண்டிய அடுக்கில் இடம் பிடிக்கின்றன. மேலும், மிகத் தனியாக இந்த பூதம் ஒரு  சுமைதாங்கிக் கல் மேல் அமர்ந்து கொண்டு வேறொரு பூதத்தின் வரவைத் தனக்குள்ளிருந்தே எதிர்நோக்கியும், தனக்குள் தானே பழையபடி புகுந்துகொண்டும் கவிதையாய் காலங்கழித்துவருகிறது.

நுண்கணங்களின் கணக்கெடுப்பே கவிதை என்று சொல்லத் தோன்றுகிறது. யாராலும் திட்டவட்ட மாய் எண்ணிச்சொல்ல முடியாத ஒன்றை உணர் வார்த்தமாய் வகைபிரித்து, அவற்றின் உள்கட்டுமா னங்களையும் பகுத்துக்காட்ட மனம் மேற்கொள் ளும் காலத்திற்குமான பிரயத்தனமே கவிதை. இந்த முயற்சியின் வழி புதிய கருத்துருவாக்கங்கள் சில இயல்பாய் வரவாகலாம். ஆனால், கருத்துருவாக் கங்கள் மட்டுமல்ல கவிதை. அரூபக் கவிதைகள் என்று எள்ளிநகையாடப்பட வேண்டியவையல்ல. அவை ஒரு மனதின் வழித்தடங்களை முன்வைக் கின்றன. தூல மாக இருப்பவர் கவிஞர் என்னும் போது அவர் எழுதும் கவிதை கள் எப்படி அரூபக் கவிதைகளாகிவிட முடியும்?

என் கவிதைகள் காலங்கடந்து வாழுமா என்பது பற்றி எனக்கு அக்கறையில்லை.  என் காலத்தி லேயே அவை பேசப்படுமா என்பதும் எனக்கு ஒரு பொருட்டில்லை. எழுதுவதில் கிடைக்கும் மன நிறைவும், வலி நிவாரணமும், கலைடாஸ்கோப் காட்சிகளுமே பிரதானம். தனி ஆவர்த்தனமே சேர்ந்திசையாகவும் ஒலிப்பதை என் சக-கவிஞர்கள் பலருடைய கவிதைகளில் உய்த்துணர்ந்திருக் கிறேன். அப்படி, என் தனி ஆவர்த்தனமும் ஒரு வேளை சேர்ந்திசையாகலாம்…..ஆகவேண்டும் என்ற விருப்பமும், ஆகும் என்ற நம்பிக்கையுமாய் என்னுடைய நான்காவது தொகுப்பு வெளிவருகிறது.

தோழமையுடன்
ரிஷி
17.12.2005


1.அவரவர் நிலம்
உனக்குக் கால் கால் மண் தரை
எனக்கு மனம் தாள் நிலம் அலை
உன் காலே எனதுமாக நிர்பந்தம் ஏதுமிலை
காற்றோ மழையோ கடலோ முகிலோ
நடக்கப் பழகிய பின் நிலம் தானே….
பிடிப்பற்றது திடமில்லை யெனில்
தரையுனதெனக்கமிலமாய்.2. காலம், கனவு மற்றும் கிலோ மீட்டர்கள்
கணக்கற்ற காததூரங்களைத் தனக்குள்
குவித்துவைத்திருக்கிறது காலம்.

ஒவ்வொரு நொடிக்கும் ஒரு ஒளியாண்டு.

மூற்றைம்பது நாட்களை மைல்களாக நீட்டிப் போட்டால்
மறுமுனை அண்டார்ட்டிக்காவைத் தாண்டி….
அந்த நிலாவைத் தாண்டி…..

இமயமலையின் உச்சிமுனைத் தொலைவு
இனி இல்லையாகிவிட்ட அந்த இரண்டுமணி நேரங்கள்….

புலியின் வாலில் தொங்கிக்கொண்டிருக்கும் அந்த உயிரின் அலைச்சல்
எத்தனைக் கடலாழங்கள்?

விடை கிடைக்காத கேள்விகளின் பாரங் களை விரித்துப் போட்டால்
உலகத்துப் பாலைகளையெல்லாம் ஒரு சேரத் தாண்டி நீளும்.

உலர்ந்தும் உருண்டோடிக்கொண்டிருக்கும் கண்ணீரின்
நீள அகலங்கள்
பாதாளவுலகின் பரப்பளவாய்.

உடல்களின் அருகாமைக்கும் உள்ளங்களின்
அருகாமைக்கும் இடையே
சமயங்களில் வரவாகும் அகழிகளின் ஆழம்
அளக்கமாட்டாது.

கண்ணின் காலமும் நெஞ்சின் காலமும்
வெவ்வேறு தொலைவுகளின் அலைவரிசைகளில்.

கனவின் மார்க்கத்திற்கு மார்க்கண்டேயப் புள்ளினங்கள் வரைந்திருக்கும்
விண்ணிலான அருவத்தடங்களின் நீள அகலங்கள் நிலாவிலுள்ளன.

நம்மிடமுள்ளதெல்லாம் வெறும் கிலோமீட்டர்கள் மட்டுமே.3. விடியலின் படிமங்கள்
இரவில் முற்றுப்பெற்றுவிடும் பகலென
முழுப் பிரக்ஞை ஒற்றி வர
முடியாமல் தொடரும் பொழுதெல்லாம்
பயணத்தின் இரவுமொரு விடியலென்று
கற்றுத் தேரும் மனதில் வரவாகும்
மற்றொரு காலவெளி உறவுகள்
நிறமற்று வலியற்று நிரந்தரமாய்.4. பீலி பெய் சாகாடு
வார்த்தைகள் தொண்டைக்குழி வழிய.
விழுங்கக் காத்திருக்கின்றன நிலநடுக்கங்கள்.
திரியாத பாலாய் உறவின் மாட்சிமை,
தாக்கம் நீக்கமற.
குரலழித்துக் கைகாலொழித்து வெறும் வெளி பரவும்
ஒளி நாழிகைகள் ஆலகாலமாய்.
கட்டாந்தரையில் நட்ட நாற்றுக்களா யின்னும்
எத்தனை நாட்களோ…..?
வித்தகமெல்லாம் வற்றிப் போகப் பற்றிய
மோகமே யன்பாய் அதுவே இதுவாக
முற்றிய பித்தம் வடிய
காற்றேகிக் கடந்திட வேண்டும் என்னை நானே.


5. சிறுமியும் யுவதியும் சமவயதில்
எழுதும் நேரம் வயது வழிவிலகிவிடுகிறது.
உள்ளே என்றைக்குமாய் கிளைபிரிந்துகொண்டிருக்கும் வீதியொன்றில்
ஒரு சிறுமி குதித்தோடத் தொடங்குகிறாள்.
திருப்பத்தில் முளைக்கும் இளம் யுவதி
நிரம்பிய அறிவிலும் அழகிலுமாய்
பொடிநடையாய் அளந்துகொண்டிருக்கிறாள் சில
அந்தர உலகங்களை.
பாதிவழியில் சிறுமி அணிலாகவும் முயலாகவும்
யுவதி பஞ்சவர்ணக்கிளியாகவும் புல்லாங்குயிலாகவும் மாறி
இருவருமே பறந்து பறந்து
காலத்தின் கணக்குகளை சரி செய்தும்
குண்டு குழிகளைச் செப்பனிட்டும்
தமது இறக்கைகளால் அதன் பரிமாணங்களைப் பெருக்கி
கைக்கெட்டும் தூரத்தில் நெருக்கமாக்கிப் புதுப்பித்தபடியே
பாடித் திரிகிறார்கள்.
ஓலமோ, ஆலோலமோ _ அவர்களுடைய குரல் வழியே
உருகிக் கசிகிறது உயிரின் உயிர்.
கயிற்றரவின் சொப்பனவெளியில் பெருகிப் பாய்கின்றன
காய்ந்து புதையுண்ட நதிகளெல்லாம்.
வரவாகும் பேரொளியில் சிறுபொழுது
இரட்டைத் தாழ்ப்பாள்களற்று விரியத் திறந்திருக்கும் நிரந்தரத்தின் நுழைவாயில்!

0

No comments:

Post a Comment

comments: