LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, February 2, 2013

காலநிலை [ ரிஷியின் 7-ம் கவிதைத்தொகுப்பு]

’ரிஷி’யின் 7-ம் கவிதைத் தொகுப்பு


காலநிலை

[வெளியீடு: புதுப்புனல் பதிப்பகம்]இடம்பெறும் கவிதைகள்

அ) விசாரணைகள்

1)எனக்கான நீதி
2)வரைபடத்தின் இருப்பு
3) அட்சர லட்சமும் அனேக கோடீசுவர்களும்
4)முதிர்வயதின் மகத்துவம்
5) ஒருவரைப் போல் ஏழு பேர்
6)இனியான என் காலம்
7) தனமும் தரித்திரமும்
8 இல்லாமலிருக்கிறது.
9 வலியின் வலி
10 எல்லோருக்காகவும்.
11) காற்றாடித் திருவிழாக்கள்
12) இம்மை
13) கணக்கு
14)ஆதிக்கவாதியும் அரண்மனைகளும்
15) நாம் சக பயணியர் என்றே நம்பியிருந்தேன்
16) சொல்லின் ஆன்மா
17)மாறும் மதிப்பீடுகள்
18) கண்டதே காட்சி-கொண்டதே கோலம்
19)அரைக்கண காலவெளிகளும் ,  உன் அறைகூவல்களும்
20)விம்மல்களும் தும்மல்களும் வேறுநூறும்...
21) வழியும் மொழியும்
22) பெண்
23) வாக்குகளின் வலிமை
24) அவரவர் மனைவியர்
ஆ) காலநிலைக்கட்டமைப்பு
25) சூரியக்கதிர்வீச்சு
26. ஆழிப்பேரலை
27.கடலிடைப் பனிப்பாறைகள்
28. அழிக்கப்படும் விளைநிலங்கள்
29. பசுமையில்ல வாயுக்களின் அடர்வு
30. புவிமேலோடு
31. சூழல் மாசு
32. வெப்பசுழற்சி
33. காலநிலை
34 காலநிலை மாற்றம்


1)   எனக்கான நீதி

அப்படியொரு மூர்க்கத்தோடு என்னைத் தாக்குகிறாய்.
அது காலத்தின் கட்டாயம் என்று தத்துவமாக்குகிறாய்.
நீக்குப்போக்குத் தெரிந்து நடந்துகொள்வதெனில் நான்
என்னை ஒரு கொலைகாரியாகப் புரிந்துகொண்டு நீ மூட்டும்
 தீக்கிரையாக்கிக்கொள்ள வேண்டும்
இன்றைய உன் மாடமாளிகைக்கும், கூடகோபுரங்களுக்கும் அருகேகூட
படுக்க இடமற்ற உண்ண உணவற்ற கணக்கற்றோர்.
எல்லாவற்றிற்கும் என்னையே காரணமாக்கி குற்றவாளிக்கூண்டில்
நிறுத்துகிறாய்
கரும்புள்ளி செம்புள்ளி குத்தி
கழுதைமேல் ஏற்றியனுப்ப
அரும்பாடு படுகிறாய்
விசாரணையற்ற உன் நீதிமன்றத்தில் என் பக்க நியாயத்தை
எடுத்துரைப்பது கூட எக்குத்தப்பான காரியமாகி
என் தண்டனை கூட்டப்பட்டுவிடும்
என்பது எனக்குத் தெரியும்தான்.
என்ன செய்ய
எனக்கான நீதியை நான் தானே
தேடிக்கொண்டாகவேண்டும்.
  
  

2)    வரைபடத்தின் இருப்பு

அழிப்பானைத் தேடிச் சிரமப்படாதே.
வரைபடத்திலிருந்து என்னை நானே விலக்கிக்கொண்டுவிட்டேன்
வழிதவறிப்போகாமல் கவனமாய் உன்னைக் காப்பாற்றிக்கொள்
காட்டுவழியில் கரடிகளும், புலிகளும், காட்டெருமைகளும் அதிகம்.
நீ எழுதுதாளில் ரத்தம்குடிப்பது வழக்கம்.
அவையோ உண்மையாகவே உன்னை இரையாக்கி விழுங்கிவிடும்.
விழிப்பாயிரு.
உதாரணங்காட்ட ஆள்தேவைப்படும்போது
என்னை நினைவுகூர வேண்டாம்.
நிதானமாய் சிந்தித்துப்பார்....
வரைபடத்தின் இருப்பே
உன் வருகைக்கு முன்னாலும் கடல்களும், பயணங்களும் இருந்தன
என்பதை உணர்த்தவில்லையா உனக்கு?
உண்மையிலேயே உன்னைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. 3) அட்சர லட்சமும் அனேக கோடீசுவர்களும் 
அட்சரம் லட்சம் பெறுமென்றால்
அநேக கோடீசுவரர்களை அடையாளங்காட்ட முடியும் என்னால்.
அடேடே, அவர்கள் வீடுகளைக் கொள்ளையடிக்கத் திட்டம்தீட்டும்
குறுக்குப்புத்தியைக்
காதைப் பிடித்துத் திருகி அடக்கிவை
அதையும் மீறிப்போனாலும் பாவம்
அதற்குத் தெரிந்த குபேர சம்பத்துகள் அங்கிருக்காது.
அந்த வீடுகளில் தரையிலும், பரணிலும், அட்டைப்பெட்டிகளிலும், தலையணகளின் கீழும், இன்னும் மனங்களின் மேற்பரப்பிலும், உள்ளாழங்களிலும்
நீண்டு, சுருண்டு கிடக்கும் விலைமதிப்பற்றவைகளை
கண்டாலும் எரிச்சலில் கண்ணுருட்டி உதடுபிதுக்கி அவற்றைக்
கால்களால் எத்தித் தள்ளிவதைவிட என்னசெய்துவிடுவாய் பெரிதாய்?

அதனதன் இடத்தில் அவையவை
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்.
 4முதிர்வயதின் மகத்துவம்

யாராலும் பார்க்கப்படாமல்
பார்க்கப்படுகிறோமோ என்ற
தர்மசங்கடவுணர்வோ
பார்க்கப்படவில்லையே என்ற
பரிதவிப்போ
இல்லாமல்
ஒரு சிற்றுண்டிவிடுதியில் வெகு இயல்பாய்
நுழைந்து
சீராகச் சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியின் கீழ்
எனக்கான இடத்தைத் தேடிக்கொண்டபோது
முதிர்வயதின் மகத்துவம் புரிந்தது.
5) ஒருவரைப் போல் ஏழு பேர்
இந்தத் தெருவில் நடக்கும்போதெல்லாம் நான்
இன்னொரு தெருவிலும் நடந்துபோய்க்கொண்டிருக்கிறேன்.
இதை எழுதும்போதெல்லாம்
நான் வேறொன்றையும் எழுதியபடியே.
இன்றைக்குத் தூற்றிக்கொண்டிருக்கையிலேயே
போற்றிக்கொண்டுமிருக்கிறேன் அன்றைக்கு.
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்.
இன்று வந்ததும் அதே நிலா
ஊ லலலா.....
ஒருவரைப் போல் ஏழு பேர் இருப்பார்களாம்.
அவரவருக்குள்ளேயே தான் போலும்
எனக்கான தருணத்தில் ஒரு முழுமையாகிவிடலாம் நானும்.6 இனியான என் காலம்

சுவர்களினால் கட்டப்படும் வரம்பெல்லைகள் புரியாத பருவம்.
அடுத்தவீட்டுக்குழந்தைக்கு என் வீட்டின் மூடிய கதவுகள்
பெரும்புதிராய்.
அதன் மென்கைகளால் சன்னமாய் தட்டுகிறது
சற்றே வன்மத்தோடு அடிக்கிறது.
தன் பிஞ்சு உடலை ஒரு பாறையாக்கி
மோதிப்பார்க்கிறது.
மழலைப்பேச்சில் அழைப்புமணியொலிக்கச் செய்கிறது.
எல்லாவற்றையும் கடைக்கண்ணால் கவனித்துக்கொண்டிருக்கும் தாய்க்கு
நான் சற்று நெகிழ்ந்தால்
தனக்கான தனியுலகத்தில் சற்றே இளைப்பாற முடியும்.
சற்றே என்பது சில பல மணிநேரங்களாக நீண்டதுண்டு
இதற்கு முன்பிருந்த வீடுகளில்.
இருந்தது இருந்தவாறு இருக்கிறேன்.
எனக்கான காலம் இன்னும் எவ்வளவு என்று
புரியாத பருவத்தில்.


7) தனமும் தரித்திரமும்

இந்த நள்ளிரவில் இந்தக் கவிதையை எழுதிக்கொண்டிருக்கும் நேரம்
தனலட்சுமி;
நாளைக்காலை கடன் அட்டைக்கான மாதாந்திரத்தொகையைக்
கட்டமுடியாமல் தவிக்கும்நேரம்-
தரித்திரலட்சுமி
தனமோ, தரித்திரமோ
லட்சுமி லட்சுமி தான்!


8 இல்லாமலிருக்கிறது.

பெயரில் என்ன இருக்கிறது?
பெயரில்லாமல் என்ன இருக்கிறது?
எல்லாம் இருக்கிறது.
எதுவும் இல்லை
இவ்விரண்டிற்கும் இடையே தான் எல்லாமே
 இல்லாமலிருக்கிறது.


9 வலியின் வலி

அது ஏனோ தெரியவில்லை
அடித்துப்போட்டு தரைசாய்த்த பின்னும்
திருப்தியாகாமல்
அடுத்த அரைமணிநேரமும்
அடித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
 வலியின் வலியறியா
வெள்ளித்திரைவாசிகள்.


10 எல்லோருக்காகவும்.
கடத்தப்பட்ட தந்தமும், சந்தனமும் என்னவாயிற்று?
காலாவதி மருந்து மாத்திரைகள், உணவுப்பொருட்கள்,
கள்ள வோட்டு, காசுக்கு வோட்டு
கல்வி கற்கக் கையூட்டு, பள்ளி கட்டக் கையூட்டு
கால் நூற்றாண்டுக்கும் மேலாக
நல்லமுறையில் இயங்கிவரும் கிராமப்பள்ளி
தொடர்ந்து நடக்கத் தரப்பட வேண்டும் ஒரு தொகை.
வகைவகையாய் வதைகள் வகுத்துரைக்கப்படுகின்றன
வறுமைக்கோட்டிற்குக் கீழே பெருகும் மக்கட்தொகை
நடுத்தர மக்களை விலையேற்றங்கள் ஏறிமிதிக்க-
நகைக்கடைகள் நிரம்பிவழிகின்றன
நாறும் சாக்கடைகளும்.


கடைசிக் கண்ணி கசாபை
தூக்கிலேற்ற வேண்டும் சீக்கிரமே என்ற முழக்கங்கள் கேட்கிறது.
முதல் கண்ணிகளை ?

எனக்காகும் கேள்விகள்
எல்லோருக்காகவும்.


11) காற்றாடித் திருவிழாக்கள்

காலங்காலமாய் நடந்தேறிவருகின்றன காற்றாடித் திருவிழாக்கள்.
கில்லாடிகள் தான் போட்டியாளர்களும், புரவலர்களும், ஏன்,
பார்வையாளர்களாகிய நாமும்கூட.

கையிலுள்ள நூலின் அளவும், வலுவும்
தெரியாமலிருக்க வழியில்லை.

இக்கரையில் கணுக்காலளவு நீரில் நின்றுகொண்டு
காப்பாற்றுவோம் என்று
மின்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பட்டங்கள்
மும்முரமாய் பறக்கவிடப்பட்டவண்ணம்...

அதைப் பார்த்துப் பெருங்குரலெடுத்துச் சிரித்தவாறே,
கோரதாண்டவமாடிக்கொண்டிருந்த நரமாமிசபட்சியொன்று
எரிசிறகு விரித்துயரே பறந்துபோய்
நூல்களையெல்லாம்
ரத்தம் வழியும் தனது கூர்நகங்களாலும், பற்களாலும்
அறுத்துப்போட்டது.

நூறாயிரக்கணக்கான சிரசுகளையும்.

சிதறித் தெறித்துப் பெருகியோடிய கதறல்களை சிலர்
எடைநிறுத்துப்பார்க்க சிலர்
கடைவிரித்துப் பொருள்சேர்க்க சிலர்
 தாம் மட்டுமே பொருள்பெயர்க்கத் தகும்
 என உரிமைகொண்டாட சிலர்
பதிவுநாடாக்களில் சேகரித்துக்கொண்டு காலத்திற்குமான
கலைப்பொருளாக்க சிலர்
வேகவேகமாகக் குழியாழம்பறித்து அவற்றைப்
 புதைத்துவிட்டு எதுவும் கேட்கவில்லையே
என்று கதைத்திருக்க......

தொடரும் காற்றாடித் திருவிழாக்கள்.


12) இம்மை

ஆரம்பமும் முடிவுமற்ற ஒரு பயணத்தில் நான்; பொடிநடையாக.
சில சமயங்களில் காலணிகளோடு; பல நேரங்களில் வெறுங்காலோடு.
திடுமென முளைக்கும் சிறகுகள் வரமாய்; சாபமாயும்கூட.
வழிச்செலவில் காற்றின் தீண்டல் வருவாயாகவும், பெருலாபமாகவும்
உயிர்நிறைக்க, ஒரு நெகிழ்வில் கண் தளும்ப அண்ணாந்து
 ஐ லவ் யூ “ என்கிறேன்.
அதி ஆனந்தத்தில் ஆங்கிலமும் தமிழாகிவிடும் தானே!
நடக்கும் நேரம் என்னை மீறி பாதங்களடியில் நசுங்கலாகும்
நுண்ணுயிர்களின் நினைப்பு குற்றவாளியாக உணரச்செய்யும்.
நல்லவேளையாக, எல்லா நேரங்களிலும் இல்லை.
எனக்கான நச்சுமுட்களும், கூர்கற்களும் சுட்டெரிக்கும் கதிரோனும்,
அமிலத்துளிகளும், வலியும் ரணமும், வேதனையும், வாழ்வீர்ப்புமாய்,
காலடித்தடயங்களை கவனமாகத் துடைத்து சுவடழித்து
என்னை வரலாற்றில் இடம்பெறச் செய்யும் போட்டியிலிருந்து
முற்றுமாக விலக்கிக்கொண்டு வெறுங்கையோடு போய்க்கொண்டிருக்கிறேன்.
வாட்களோடு எதிரே வ்ரும் சிலர் உலகில் இதுகாறும் நடந்த, நடக்கின்ற, நடக்கவுள்ள படுகொலைகளையெல்லாம் நான் செய்த்தாகச் சொல்லி
கண்களையும் கைகளையும் திருகி முறிக்கத் தயாராய் சூழ்ந்துகொள்கிறார்கள்.
வாதப்பிரதிவாதங்கள் ஏதுமின்றி நாலாயிரம் ஆண்டுகள் கடுஞ்சிறைவாசமும், கழுவேற்றங்களும் என்று தீர்ப்பெழுதப்படுகிறது.

”பழிபாவம் புரியவில்லை, பணங்காசு கையிலில்லை. பின் ஏன் என்னை..?.”

”கேள்வி கேட்டால் கூடுதல் தண்டனை கிடைக்கும். பேசாமல் வா”

”உறக்கம்போக என் மொத்த வாழ்க்கையுமே நாற்பதாண்டுகள் கூட நீளாதே
இனியான என் வாழ்க்கை இருபது வருடங்களுக்கும் குறைவாக இருக்கையில்
எனக்கு இடப்பட்டுள்ள தண்டனையை எப்படி நிறைவேற்ற இயலும்?”  _

அதற்குத் தானே இருக்கின்றன உன்னுடைய அடுத்தபிறவிகள்”.


13) கணக்கு
அவர் ஒன்றைச் செய்தால்
அவர் மட்டுமே
அந்த ஒன்றை மட்டுமே
செய்கிறார்.

இவர் இரண்டைச் செய்தால்
இவர் மட்டுமே
அந்த இரண்டை மட்டுமே
செய்கிறார்.

ஆனால் இன்னொரு இவர் அல்லது
இன்னொரு அவர்
செய்யும் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே
பலவாக பலராகப் பல்கிப் பெருகியவாறு....

அறிந்தே செய்யும் கணக்குப்பிழையில்
அழிப்பானுக்கு ஏது வேலை?


14)ஆதிக்கவாதியும் அரண்மனைகளும்

நாலாவது தலைமுறையாக நடுத்தரவர்க்கத்தில் பிறப்பு ;
.நேற்றும் நாளையும் அரசுக்கல்லூரியில் தான் படிப்பு.
ஆனாலும் அடித்திழுத்துக்கொண்டுபோய்
நடுச்சந்தியில் நிறுத்தி, ஆதிக்கவாதி என்று
ஊர் கேட்க, உலகு கேட்க, சொல்லிசொல்லிசொல்லி
சவுக்கடி தந்தவாறே சென்று சேர்கிறார் சிலர் -
அப்பாவி உயிர்களை பலிகொடுத்து அமைத்த அடித்தளத்தின் மீது
ஆரோகணித்திருக்கும் தம் அரண்மனைகளுக்கு.15) நாம் சக பயணியர் என்றே நம்பியிருந்தேன்
நாம் சக பயணியர் என்றே
இத்தனை காலமும் நம்பியிருந்தேன்

எனக்கும் உனக்கும் காலணிகள் இருக்கின்றன ;
சுடுவெயிலைச் சமாளிக்க.
ஆங்காங்கே மரநிழல்களில்
இருக்கைகளும் போடப்பட்டிருக்கும்...
நான் ராமேசுவரத்தைக்கூடப் பார்த்தது கிடையாது.
உனக்கோ நியூஜிலாந்து மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து
மாம்பலத்திற்குச் செல்வதுபோல்....

என்றாலும்,

நாம் சக பயணியர் என்றே
இத்தனை காலமும் நம்பியிருந்தேன்.

நம்மோடு வழியேகும் நாலாயிர லட்சம் பேருக்கு
கொதிக்கக்கொதிக்க வெறுங்கால் நடைப்பயணம்
காலமெல்லாம்.

குற்றவுணர்வோடு கண்களில் நீர்மல்க
“கூட்டுக்களவாணிகள் நாம்”, என்று கூறியவாறு
ஏறிட்டுப்பார்த்தால், நொடியில்
உனக்குரிய குற்றச்சுமையையும், தண்டனைச்சுமையையும்
என் தலையில் இறக்கிவிட்டு
ஆணியடித்து அசையாமலிருக்கச் செய்து
ஒரு சொடுக்கில் தரையிறங்கிய தனிவிமானத்தில்
ஏறிச்சென்றுவிடுகிறாய்

பளு தாங்க முடியாமல்
அடுத்த அடி எடுத்துவைக்க ஆதரவுக் கையின்றித்
திகைத்து நின்றுகொண்டிருக்கும் என்னருகே
நீ குறிபார்த்துச் சுழற்றியெறியும் கையெறிகுண்டில்
எத்தனைக்கெத்தனை நான் ரத்தக்கூழாவேனோ
அத்தனைக்கத்தனை எளிதாய்
சமூகசீர்திருத்தவாதியாகிவிடுகிறாய் நீ!

நாம் சக பயணியர் என்றே இத்தனை காலமும்
நம்பிக்கொண்டிருந்தேன்...


16) சொல்லின் ஆன்மா
ஒரு மயிலிறகைப்போல்
அத்தனை மிருதுவான சொல் அது!
விரல்களால் வருடினால் வலிக்குமோவென
உயிரால் நீவித்தரப்பட்டு
பார்த்துப்பார்த்து இடம்பொருத்தப்பட்டு
காலத்திற்குமாய் பத்திரப்படுத்திவைக்கப்பட்டது கவிதையில்.

ஒற்றை மயிலிறகு ஓராயிரம்கண் தோகைவிரித்து
சுற்றிச் சுழன்றாடிய ஆட்டத்தில்
சொக்கி நின்றதென்ன ! சொர்க்கமானதென்ன ! !

சொல்லாட பொருளாட
மயிலாட மழையாட
கானாட கவியாட-

தத்தரிகிட தித்தோம் !
 தளாங்குதக தித்தோம் ! !

மழைபொழிய மனம்வழிய
அலையும், காற்றும் வீச
ஆலோலக்கனவு பேச _

தத்தரிகிட தித்தோம் !
தளாங்குதக தித்தோம் ! !
கண்ணீரில் மனம் வெளுக்கக்
காற்றானதென்ன ! ஊற்றானதென்ன!.
காலமே தானாகிய மாயம்தான் என்ன!!

தத்தரிகிட தித்தோம் !
தளாங்குதக தித்தோம் ! !


_கழிசடையே, காலொடித்துவிடுவேன் ஆடினால்,
எனக் கூவியபடி
கம்பும், கத்தியுமாய் வந்து வழிமறித்துக்
கிழித்தெறிந்தார்கள்,
காறித்துப்பினார்கள்,
தப்பித்தவறியும் பேசிவிடலாகாது எனக்
குரல்வளையைத் திருகி நெறித்தார்கள்,
காலால் மிதித்தார்கள்,
கொளுத்திப் போட்டார்கள்....

என்றும் பழகாத பகை கண்டு
திகைத்து நின்ற கவியை
கைதொட்டு அழைத்துக்
கண்சிமிட்டியது
கவிதையின் ஆன்மாவாகிய
சொல்லின் சொல்!.


17) மாறும் மதிப்பீடுகள்
6 போடக் கற்றுத்தரப்பட்டது குழந்தைக்கு
ஆகச் சிறிய நூலின் முனையில் ஒரு  பூஜ்யத்தைக் கட்டித்
தொங்கவிட்டது குழந்தை.
8 போடக் கற்றுத்தரப்பட்டது.
சம அளவு அல்லது சற்றே சிறியதும் பெரியதுமான
இரண்டு பூஜ்யங்களை ஒன்றன்மீது ஒன்றாக
அடுக்கிவைத்து
கைதட்டிக் குதூகலித்தது குழந்தை.
10 போடக் கற்றுத்தரப்பட்டது.
ஒரு சிறிய தடுப்புச்சுவர் எழுப்பி
பூஜ்யம் உருண்டோடிவிடாமல் பாதுகாத்தது குழந்தை.
பெரியவர்களின் கணக்கில் பூஜ்யம்
அதனளவில் மதிப்பற்றது.
பிள்ளைகளுக்கோ விலைமதிப்பற்றது!


18) கண்டதே காட்சி-கொண்டதே கோலம்
இறுக்கமாகக் கண்களை மூடிக்கொண்டிருந்த பூனை
இருள் பொறுக்க மாடாமல்
திடீரென ஒரு நாள் விழித்துப் பார்த்தது.
கண்பறிக்கும் வெளிச்சங்களில் தெரிந்த
எண்ணுலகங்களில்
சின்னஞ்சிறு குருவிகள், சிற்றெறும்புக்கூட்டங்கள்
தொடங்கி
பென்னம்பெரிய யானை, டினோசார் எல்லாமும்
அதனதன் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தன.
தன்னைத் தாண்டி உலகம் இயங்குவதைக் கண்டு
செயலிழந்துபோன பூனை
மதில் மீது தாவியேறிக்கொண்டது.
 போய்வந்தவாறு
இப்போதும்
அங்கேயே
அங்குமிங்கும்.


19) அரைக்கண காலவெளிகளும்
 உன் அறைகூவல்களும்
கொஞ்சம் பொறு
தட்டாமாலை சுற்றிக்கொண்டிருக்கிறேன்
இன்னமும் நிலா வரவில்லை.
அழைத்தபடியிருக்கிறேன்.
விண்மீனின் கண்சிமிட்டலைக் கண்டு ரசித்தபடி
அண்ணாந்திருக்கிறேன்....

கண்ணீர் பாதையை மறைக்கிறது.
தத்தளித்துக்கொண்டிருக்கிறேன்.
கடும்புயல்-வெள்ளத்தில்
கலகலத்துச் சரிந்தவண்ணமிருக்கிறேன்
காலன் எதிரில் கையறுநிலையில்
மண்டியிட்டவாறு....

கிட்டாதாயின் வெட்டென மறவின் உட்பொருளைத்
துருவிக்கொண்டிருக்கிறேன்.
எட்டாக்கனி எதற்கெல்லாம் குறியீடாகும் என்பதையும்.

உடனடியாக எதிர்வினையாற்றவில்லையென்பதால்
உன் அறைகூவலைக்கேட்டு பயந்துவிட்டதாக அர்த்தமல்ல.

20)விம்மல்களும் தும்மல்களும் வேறுநூறும்...
அணில் வால் ஆணா? பெண்ணா?
மணலின் மென்மை அல்லது மொரமொரப்பு?
காற்றின் உயிர்ப்பு? கால நீட்சி? கவின் நிலக்காட்சி?
கல் யானை? கல்லுக்குள் தேரை?
வலக்கைக்கும் இடக்கைக்குமுள்ள தொடுபுள்ளிகளும்,
தொலைவுகளும்?
தருணங்கள்?
பரிவு? புரிதல்? நிறைவு? விரைவு?
சிட்டுக்குருவியின் குட்டிமூக்கு?
தொட்டிநீருக்குள் மூழ்கிய மூச்சுத்திணறல்?
நோய்? நோயின் வலி? வலியோலம்? காலம்? மேலும்_
பாசம்? மோசம்? நாசம்? வேஷம்? ரோஷம்? சந்தோஷம்?
உம் எம் நம் தம்
விம்மல்களும் தும்மல்களும், வேறுநூறும்....
(இம்மென்றால் இருக்குமோ சிறைவாசம்?)

வேண்டும்போது உமையொருபாகன்;
வேண்டாதபோது காலைத்தூக்கியாடி
தாட்சாயிணியை அவமானப்படுத்திய துக்கிரித்தாண்டவக்கோன்.
சிவனேயென்றிருக்க வழியில்லை
சிவனுக்கும்!


21) வழியும் மொழியும்
கிளைபிரியும் பாதைகள் முளைத்த புள்ளியை
நன்றியோடு நினைவுகூர்ந்தவாறே முன்னேறிச் செல்லும் மனம்.
களைத்துச் சோரும் பாதங்கள் கன்றிப் போனாலும்
காலரை மணிநேரம் கண்ணில்படும் மரநிழலில் இளைப்பாறிய பின்
மீண்டும் தொடருமேயன்றி யொருநாளும் கைவிடப்படாது பயணம்.
எல்லாம் இன்பமயம்; எங்கும் துன்பமயம்.
தங்கும் பயம் மனதில் பொங்குமாக்கடலாய்.
விடலைப்பருவத்திலும் வயோதிகத்தின் நுழைவாயிலிலும்
நடந்து நடந்து நடந்து நடந்து தானே
கடந்துகொண்டிருக்கிறேன், கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன் என் வழியை.
பதற்றமும் பரவசமுமாய் கழியும் பயணப்போக்கில்
இன்றளவும் பழகிலேன் முன்மொழியவும், வழிமொழியவும்.

22) பெண்
சிலருக்குக் கண், சிலருக்கு மண்
இவருக்கு மயிர், அவருக்கு பயிர்
இன்று வரம், நாளை மரம்
சொல்லுக்கு மைல்கல், செயலுக்கு மண்ணாங்கட்டி
ஒரு கணம் பத்தரைமாற்றுத் தங்கம், மறுகணம்
பித்தளைக்கும் மங்கலாகும்....

மண்ணும் வீணல்ல, மயிரும் வீணல்ல.
மரத்தின் பெருமை ஊரறியும், உலகறியும்.
பித்தளைப் பாத்திரங்களில் தான் பெருமளவு தயாராகிவருகிறது
வயிற்றுக்குச் சோறு.
மைல்கல்லோ, மண்ணாங்கட்டியோ -
மண்ணிலும் கல்லிலுமே நிலவளம் நிரூபணம்.
சொல்லித் தீராதிருக்கும் இன்னும் பிறவேறும்.
எதுகைமோனைக்குள் அடங்கிடாது இகவுலகும் அகவுலகும்.
வரிகளுக்குள் ஊடுருவினால் தானே புரியும் உயிரின் மகத்துவம்!

23) வாக்குகளின் வலிமை
இருபதாண்டுகளுக்கு முன்னர் கசிந்த விஷவாயு இன்னமும்
தீராத்தாகத்தோடு உறிஞ்சித்தீர்த்துக்கொண்டிருக்கிறது-
குறிப்பாக ஏழைகளின் உயிர்களை.

இன்றைய மரபணுமாற்றப் பயிர்களும்.

வாக்குகளின் வலிமையில் சில குடும்பங்களுக்கு இமயமலைகள்
உடைமையாகிவிடுகின்றன.
ஒருவேளை பறவைகளின் இறக்கைகளும்கூட.

ஊசிப்போன மருந்திலும் ஊசியிலும்
ஊசலாடிக்கொண்டிருக்கும் மனித உயிர்களின் மீட்பராக
கூவிக்கூவிக் கடைவிரித்திருப்போரிலும் கலந்திருப்பார்
கொள்ளை லாபமே குறியாய் சிலர்.

விற்பனைப்பையின்றியே அரண்மனைகளில்
அமர்ந்தது அமர்ந்தபடி ஆள்சேர்த்துக்கொண்டிருக்கும்
 விளம்பரப்பிரதிநிதிகளிடம்
(அன்னாடங்காய்ச்சிகளுக்கென்று சிலர் ; அம்பானிகளுக்கென்று சிலர்)
ஆயிரக்கணக்கில் வந்து ஆயிரக்கணக்கில் தந்து
பெற்றுச் செல்கின்றனர்
கத்தரித்து ஒட்டப்பட்ட சிறு பொட்டலங்களில்
உள்ளுறை ஆன்மாவை.

அவரவருக்கான குற்றவுணர்வுகளிலிருந்தெல்லாம் விடுபட
அதி எளிய வழி
அடுத்தவரை குற்றங்களின் கட்டாயக் குத்தகைக்காரர்களாக்கிவிடுவது.

ஒரு சொல்லின் இன்மையில் உயரும் மனிதகுலம் என்பது உண்மையானால்
உலகின் அதி உன்னத அற்புதம் அதுவாகத்தான் இருக்கமுடியும்
என்று ஏங்கிச் சோரும் நெஞ்சில் உருள்கிறது
கொஞ்சமே கொஞ்சம் படித்த போர்ஹேயின் அலெஃப்.

24) அவரவர் மனைவியர்
அடுத்தவனின் அருங்காதல் மனைவியை
அடங்காக் காமத்தில் கடத்திச் சென்றவனை_
அரக்கியர் பிடியில் சிறைவைத்திருந்தவனை_
அனுதினம் வந்துபார்த்து வேட்கைமொழிபேசி
வாட்டிவதைத்தவனை_
பேராண்மையாளனாகச் சித்தரிப்போரை
அவரவர் மனைவியரே
அடையாளங்கண்டுகொள்வார்களாக.II காலநிலைக்கட்டமைப்பு


25) சூரியக்கதிர்வீச்சு
உம்மைச் சுற்றி அந்த ஒரு சொல்லைப்
காற்றில் பரவச் செய்
சிலந்திவலைப் பூச்சிகளாய் சிக்கும்
பல.
நாக்கை நீட்டிச் சுழற்றி
வேண்டியதை உள்ளிழுத்துக்கொள்.
உன் அடியாழ இருளுக்குள்
ஒளிபாய்ச்சித் துழாவும்
சூரியக்கதிர்வீச்சில்லா உலகில்
சிறிதும் கவலையெதற்கு?


26. ஆழிப்பேரலை
அந்த ஒரேயொரு சொல்லைச் சொன்னால் போதும்
முப்பதுக்கு மேலோ கீழோ_
தப்பாது கிடைப்பார்கள்
பத்தரைமாற்றுக்கன்னிகள்
எப்பவும்.
பாதுகாப்புறை தேவையில்லை.
பரிசுகளேதும் பெரிதாகத் தர வேண்டியதில்லை.
ஒரு புன்னகையைத் தங்கள் மனதின் அடியாழங்களில்
பத்திரப்படுத்திக்கொள்ளும் பேதையர்களுக்கு
என்றும் பஞ்சமேயில்லை.
வெப்பம் அதிகரித்து கடல்மட்டம் உயர்ந்து
ஆழிப்பேரலையாக உருவாகிக்கொண்டிருப்பதையறியாமல்
கடற்கரையில் அழகிய கிளிஞ்சல்களைப் பொறுக்கி
அழகுபார்த்துக்கொண்டிருக்கும் அறியாமை நிரம்பியவர்களை
அடையாளங்காணத் தெரிந்துகொள்ளக்
கொஞ்சம் பயின்றுவிட்டால் போதுமானது

  
27.கடலிடைப் பனிப்பாறைகள்
இரைதேட வாகாய்
நிற்பதற்கு
கடலிடைப் பனிப்பாறைகள் இல்லாதொழிய
அழியாமல் என்ன செய்யும்
பெங்குயின் இனம்?
அது மட்டுமா....

  
28. அழிக்கப்படும் விளைநிலங்கள்
 அகமும் புறமுமாய்
தனது 10 சதவிகிதத்திற்கும் குறைவாகத் தருவதில்
கவனமாயிருந்து
பதிலுக்கு 210 சதவிகிதத்தைப்
பெறத் தெரிந்தவர்கள்
வெற்றியாளர்கள் பட்டியலில் இடம்பெறுகிறார்கள்
ஆறு வறண்ட்போனால் என்ன?
விளைநிலங்கள் அழிக்கப்பட்டால்தான் என்ன?
வர்த்தக சாம்ராஜ்ய உருவாக்கமும்
விரிவாக்கமுமே குறியாய்.


29. பசுமையில்ல வாயுக்களின் அடர்வு
வளிமண்டலத்தில் அதிகமாகிக்கொண்டே வருகிறது
பசுமையில்ல வாயுக்களின் அடர்வு
புதைபடிவ எரிபொருள்களின் வழி
மண்ணரிப்பின் வரி காடெரிப்பின் வழி
ரயில்பாதைகள், நெடுஞ்சாலைகள் வழி
சுழித்தோடும் ஆறு கடல் நீர் வழி
நீராவி வழி
புகை வழி மாசு வழி
ஆசையாசையாய்
மொழியும் மொழியாச்
சொல் வழி சைகை வழி
நில் வழி செல் வழி
கழியுங் காலம்
அழிவின் நிழலில்.

30. புவிமேலோடு
புவிமேலோட்டுத்தகடுகள்
ஒன்றோடொன்று இடைவிடாமல்
உராய்ந்துகொண்டேயிருக்கின்றன.
விளைவாய்
சில நேரங்களில்
மலைகள் உருவாகின்றன.
சில நேரங்களில்
கண்டம் புதையுண்டு போகிறது.
கடல் கரையாக, கரை கடலாக
உடல்கள் சடலங்களாகும்
எனில்
சடலங்கள் உயிர்தெழுமோ?

31. சூழல் மாசு
 அடுக்குமாடி வீடுகளைத் தாண்டி
குடிசைப்பகுதிக்குச் செல்லும் வழியிலுள்ள
குப்பைக்கூளங்களில்
சாக்கடைகளில்
அப்பிக்கொண்டிருக்கும் கொசுக்களறியா
சாதி சமய
ஏழை பணக்காரப்
பாகுபாடுகள்.

32. வெப்பசுழற்சி
என் குழந்தையைக் கடத்திச் சென்றவரைக் கையுங்களவுமாகப் பிடித்துவிட்டேன்.
எல்லாம் தெரிந்தவர்தான்.
கழுத்தை நெரித்துக்கொல்லவேண்டும் என்ற கொந்தளிப்பை
யடக்கிக்கொண்டு நியாயம் கேட்டேன்.
உன்னிலிருந்து வந்ததென்றாலும் உன் குழந்தை உன்னுடையதல்ல
என்று தத்துவம் பேசினார்.
உன் குழந்தைக்குப் புதுச்சட்டை வாங்கி அணிவித்திருக்கும் என் பெருந்தன்மை கண்ணில் படவில்லையா? ‘ என்றார்.
கதறிக் கன்ணீர் விட்டழுதபடி என்னிடம் ஓடோடிவந்து ஒண்டிக்கொண்ட
குழந்தையைப் பார்த்து
தொட்டாற்சுருங்கி தாயைப்பொலவே என்று கேலிசெய்தார்.
அற்ப விஷயத்திற்கு ஆகாத்தியம் செய்கிறாயே என்றார்.
மலிவான விளம்பரம் தேடும் முயற்சி இது என்றார்.
நோஞ்சான் பிள்ளை, இதைப் போய் யாராவது கடத்துவார்களா?
போனால் போகிறது என்று தூக்கிக்கொண்டேன் என்றார்
உன் அழகையும் உன் குழந்தையின் அழகையும் கண்ணாடியில் பார்த்துக்கொள் என்றார்.
மனநோயின் அறிகுறி இது, மருத்துவரைப் பார் என்றார்.
குறுமதிக்காரி என்றார்
சிறுதுளியும் உன்மேல் மதிப்பில்லை என்றார்.
மறந்தும் வருத்தம் தெரிவிக்கத் தெரியாத மனிதன்
இவன் கழுத்தைத் தொடுவதும் இழுக்கு என்று தோன்றியது.
குழந்தையை இடுப்பில் அப்பிக்கொண்டேன்.
உன் மதிப்பை உன்னோடு வைத்துக்கொள் என்று
வாயாரக் காறித்துப்பினேன்.
வழிநடந்தேன்.

33. காலநிலை
அதிகாரபீடத்திலிருக்கும்போதெல்லாம்
புலப்படாத ஆரிய-திராவிட பேதங்கள்
ஒரு நெருக்கடியின்போது
தவறாமல் தட்டுப்படும்.
கரியமிலவாயுவைப் பிராணவாயுவாய்
வெகுமக்களின் நாசிகளுக்குள் வலிந்து திணிக்கும்
வன்முறையின் எதிரில் மட்டும்
இந்தக் காரியக் காமாலைக்கண்கள்
மூடிய பூனைக்கண்களாகிவிடும்.     
காலநிலை மாற்றத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.

34. காலநிலை மாற்றம்
உறையச் செய்யும் குளிர்காலம்.
சுட்டெரிக்கும் கோடை.
மழையற்றுப்போகும் அல்லது
வெள்ளக்காடாகும்.
ஒரு பக்கம் ஆயிரங்கோடிகள் விரயம்
மறுபக்கம் அன்றாடங்காய்ச்சிகளின் எண்ணிக்கை
அபரிமிதமாய்ப் பெருகும்.
எழுதுவதற்காய் எழுதப்படும் கவிதைகள் கைத்தட்டல் பெற
எழுதித்தீராமல் எழுதப்படுபவை கல்லடிக்காளாகும்.
முப்பது வருடங்களின் சராசரி வெப்பநிலை
ஒரு பகுதியின் வானிலையாக
எத்தனை வருடங்கள் வாழ வேண்டும்
அன்பு நிலையாக?
பருவமழை, வசந்தகாலம், புயல்-வெள்ளம்
குளிர்காலம் , பிரத்யேக வானிலை நிகழ்வுகள்
யாவும் உள்ளடங்கியது காலநிலையாக
இயற்கை ஒழுங்கமைவில் நேரும் மாற்றங்களால்
சேரும் பேரிடர்கள்.
மழைநீர் சேகரிப்புக்கு முதலில் மழை வேண்டும்
அதுவேயாகுமாம் மனமும்.0

No comments:

Post a Comment

comments: