LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, March 30, 2011

வலிவேதனைகளை நகைச்சுவையாக்கி.... லதா ராமகிருஷ்ணன்வலிவேதனைகளை நகைச்சுவையாக்கி வரும் சின்னத்திரை, பெரிய திரை சித்தரிப்புகள் குறித்து கூற வேண்டிய சில_

லதா ராமகிருஷ்ணன்


வணக்கம். எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து ஒரு எழுத்தாளர் எள்ளி    நகையாடி எழுதிய கட்டுரை காரணமாக உருவாகியுள்ள பிரச்னை பற்றி எழுதப்பட்டுள்ளதைப் படித்தேன். சம்பந்தப்பட்ட கட்டுரையை நான் வாசிக்கவில்லை. ஆனால், இந்த ஒரு கட்டுரைக்காக இத்தனை போர்க்கொடி உயர்த்தியுள்ள திரைப்படக் கலைஞர்களும், ரசிகர்களும் தொலைக்காட்சியின் பல்வேறு அலைவரிசைகளில்  இன்று நகைச்சுவை நிகழ்ச்சி, சிரிப்பு நிகழ்ச்சி என்று ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சிகளெல்லாம் இதையே தான் செய்து வருகின்றன. குறிப்பாக, எம்.ஜி.ஆர் குண்டடிபட்ட பிறகு நடித்த போது இருந்த அவருடைய குரல் நிறைய பேரால் நகைச்சுவைப்படுத்தப்படுகிறது. அதேபோல், சிவாஜியின் சில படங்களிலான நடை,உடை,        பாவனைகள் out of context ஆக திரும்பத் திரும்ப நகைச்சுவைக்கான விஷயங்களாகக் கையாளப்பட்டு வருகின்றன. அந்த நிகழ்ச்சிகளில் பங்குபெறுபவர்களெல்லாம் திரையுலக நடிக நடிகைகள் தான்.

(சிலை என்பது ஒரு நிஜமனிதனின் உருவத்தை வடிப்பதாகத் தான் சென்னைக் கடற்கரையில் உள்ள சிலைகள் அமைந்திருக்கின்றன. அப்படியிருக்கும்போது, சிவாஜி கணெசனின் உருவச்சிலை மட்டும் ஏன் அவர் ஏற்று நடித்த வீர சிவாஜியின் உருவமைப்பில் வைக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்வி அந்த சிலையைப் பார்க்கும்போதெல்லாம் தவிர்க்கமுடியாமல் மனதில் எழுகிறது).

சிவாஜியின் நடிப்பிலுள்ள மிகைபாவங்களைப் பேசக் கூடாது என்பதல்ல. ஆனால், வெறும் அபிப்பிராயங்களையும், அக்கப்போர்களையும் விமர்சனங்களாகவும்,திறனாய்வுகளாகவும் முன்வைத்து வருபவர்களுக்கெல்லாம் சிவாஜி 'வாய்க்கு அவிலாகி ' விடுவது அவலம். இருநூறு பக்கங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை ஒருவர் மொழிபெயர்த்திருக்கும் நிலையில் அந்தப் புத்தகத்தில் தென்படும் ஒரே ஒரு தவறான மொழிபெயர்ப்பையே, (மொழிபெயர்ப்பு குறித்த ஒரு ஒற்றைப் பரிமாணப் பார்வையில் ஒருவருடைய மொழிபெயர்ப்பு மலிவானதாக்கப்படுவதும் நடக்கிறது) திரும்பத் திரும்ப வெளிச்சம் போட்டுக் காட்டி சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளரின் உழைப்பை மலிவாக்கும் முயற்சியை ஒத்தது இது. 

எத்தனையோ திரைப்படங்களில் உடல் ஊனம் கேலிப்பொருளாக்கப்பட்டு வருவது இன்றளவும் இயல்பான நடப்பாக இருக்கிறது. இந்த மனித-எதிர் நடவடிக்கைகளுக்கு தொலைக்காட்சித் தொடர்நாடகங்களும் விதிவிலக்கல்ல. அரவானிகளைப் பற்றிய விழிப்புணர்வற்ற ஒரு நிலையில் நடிகை ராதிகாவின் தொடர் 'அரசி'யில் வரும் கங்காமென்ற அரவாணி கதாபாத்திரம் வில்லத்தனமானதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்தவிதமான எதிர்ப்புக்குரல் எழுந்தால் உடனே அந்தக் கதாபாத்திரத்தை தியாகியாக்கவும் தயங்க மாட்டார்கள் இந்த சீரியல்வாதிகள். தவிர, எல்லாத் தொடர்களின் நிர்வாகிகளும், தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வாராவாரம் தவறாமல் ஒன்றுகூடி கலந்துபேசி தங்களுடைய தொடர்களின்             நிகழ்வுகளை, வசனங்களை உருவாக்கிக் கொள்வது போல் ஒரு தொடரில் நாயகிக்கு இந்த வாரம் பைத்தியம் பிடித்து விட்டால் இன்னொரு தொடரில் நாயகிக்கு அடுத்த வாரம் பைத்தியம் பிடித்து விடுகிறது. ஒரு தொடரில் குழந்தைப் பாத்திரம் இந்த வாரம் திருவிழாவில் காணாமல் போய் விடுகிறது என்றால் இன்னொரு தொடரில் குழந்தை இரண்டு மாதங்களுக்கு முன்பே ('ஃப்ளாஷ்பாக்'   உபயத்தில்) காணாமல்போய் விடுகிறது!

கலையைப் பற்றி, கலைஞர்களைப் பற்றிய நுண்ணுணர்வுகளைப்    பிரதிபலிப்பதாகப் பெரிதாகப் பறைசாற்றிக் கொள்ளும் கட்சிகளால் நடத்தப்படும் தொலைக்காட்சிகளில் கூட இன்றளவும் சண்டைக் கோழி திரைப்படம் கவிஞர் குட்டிரேவதியைக் கேவலம் செய்யும் வசனத்தோடு தான் ஒளிபரப்படுகிறது. பத்து பேர் கையெழுத்திட்டுக் கொடுத்தால் சென்சார் போர்டு அந்த வசனத்தை ஒலியற்றதாக்கி   விட முடியும் என்று எடிட்டர் லெனின் சண்டைக்கோழி எதிர்ப்புக் கூட்டத்தில் கூறியது நினைவுக்கு வருகிறது.)

சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவாகச் சித்தரித்திருப்பதாய் ஆஜா நாச்லே' என்ற மாதுரி தீட்சித் படமொன்றுக்கு பெரிய  அளவில் எதிர்ப்பெழுந்தது. உண்மையாகவே வெகுண்டெழுந்து, (அல்லது, சில உள்நோக்கங்களுக்காகக் கூட இருக்கலாம்)      போர்க்கொடி உயர்த்தி  அரசியல் கட்சிகள், சாதிஅமைப்புகள் இத்தகைய சில சித்தரிப்புகளைத் தடுத்து நிறுத்துகின்றன. ஆனால், ஊனமுற்றோரைப் பற்றிய எதிர்மறையான, மேம்போக்கான சித்தரிப்புகள், இயல்பான பேச்சுவழக்காக பெரிய சின்ன திரைகளில் புழங்கி வரும் சில கண்டனத்திற்குரிய சித்தரிப்புகள், சொல்லாடல்கள் குறித்து தொடர்ந்தரீதியில் எதிர்ப்பியக்கங்கள் உருவாவதில்லை. ஹிரோஷிமா நீதானோ, நாகசாகி நீ தானோ, உன்மீது     தானோ, என் காதல் 'பாமோ' என்று உலகின் மிகக் கொடிய படுகொலையை காதலுக்கு வர்ண்ணையாக்கி எழுதியிருக்கிறார் ஒரு       திரைப்படப் பாடலாசிரியர். சுனாமி என்ற பேரழிவை இவ்வாறு  மேம்போக்குத்தனமாக, மலிவாகப் பயன்படுத்தும் போக்கும் இன்று அதிகமாகி வருகிறது.

மக்கள் தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஒரு குழந்தைப் பாடலில் கோழிக்குஞ்சு ஒன்று உணவுப்பண்டமாகத் தயாரிக்கப்பட்டுக்    கொண்டிருக்க, "தோல் உரிக்கப்படும் போது  அது என்ன சொல்லிச்சாம்?" என்ற கேள்விக்கு 'இப்பொழுது சவரம் செய்து           கொடிருப்பதாக' கோழிக்குஞ்சு மறுமொழி தருவதாகவும்,        "வயிற்றுக்குள்ளே போகும் போது என்ன சொல்லிச்சாம் கோழிக்குஞ்சு?" என்ற கேள்விக்கு 'நான் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறேன்," என்பதாக கோழிக்குஞ்சு மறுமொழி தருவதாகவும், ஒரு உயிரின் வதையை சிறு குழந்தைகளுக்கு நகைச்சுவைப் பாடலாக்கித் தந்தது வேதனையளித்தது. இந்தப் பாடல் பல பள்ளிகளிலும் குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படுவதாக அறிகிறேன். புலால் உண்ணலாமா, கூடாதா என்பதல்ல கேள்வி. வாழ்க்கையே survival of the fittest என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்பதற்காய் அதன் அநீதிகளை நாம் தட்டிக் கேட்காமல் இருந்து விடுவதில்லையே. அதேபோல், புலால் உண்ணுதல் தவிர்க்க முடியாதது என்பதை ஒப்புக் கொண்டாலும் கூட, அதற்காய் ஒரு உயிரின் மரணவேதனையை நகைச்சுவையாக்க வேண்டிய அவசியமென்ன? மனிதனே உலகில் பிரதானமானவன் என்ற       பார்வை சரியானதா?

மக்கள் தொலைக்காட்சி ஒரு விதிவிலக்காகச் செயல்பட்டு வருவதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அதே சமயம், தொலைக்காட்சி நிகழ்வுகள் ஒரேயடியாக பாடம் எடுப்பது போல் அமைவது சரியல்ல. தவிர, திரைப்படம் என்ற சக்தி வாய்ந்த      ஊடகத்தை ஒரேயடியாகப் புறக்கணித்து விடுவதும் சரியல்ல. மக்கள் தொலைக்காட்சியில் இடம்பெறும் விளம்பரங்கள் சிலவற்றில்        திரைப்பட நட்சத்திரங்கள் இடம்பெறும்போது அதை ஒன்றும் செய்ய முடிவதில்லையே. நல்ல திரைப்படங்களை ஆதரித்து இடமளித்தால் அது நல்ல திரைப்படங்களைத் தர வேண்டும் என்ற முனைப்போடு இருப்பவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையுமல்லவா?

மேலும், இன்று கணிணி, இணையதளங்கள் மூலம் global village என்பதாக உலக வெளி நெருங்கி வரும் சூழலில் பிறமொழிகள் மீது வெறுப்புணர்வோடு பேசுவதும் தேவையற்றது. தாய்மொழி மீது பற்றை வளர்க்க பிறமொழிகளைப் பழிக்க வேண்டிய அவசியமில்லை. இன்னும் சொல்லப் போனால், எத்தனைக்கெத்தனை அதிக மொழிகளைக் கற்கிறோமோ அத்தனைக்கத்தனை நம் மொழியின் அருமை நமக்குப் புரியும் என்று கூடச் சொல்ல முடியும்! என்றாலும், தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளில் தமிழில் பேச வேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாட்டுடன் மக்கள் தொலைக்காட்சியில்  நிகழ்ச்சிகள் அமைக்கப்படுவது சிறப்பு. இதில் இடம்பெறும்        'தமிழ்பேசு, தங்கக் காசு' என்ற நிகழ்ச்சி பெற்ற வரவேற்பு தமிழை  சிதைப்பதை, முக்கால்வாசி ஆங்கிலத்தில் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கி வரும் விஜய் தொலைக்காட்சியைக் கூட அப்படியொரு    நிகழ்ச்சியைத் தொடங்க வைத்திருக்கிறது. ஆனால், பெண்ணை  போகப்பொருளாக்கிக் காட்டிய வண்ணமே பெண்ணுரிமைக்காகவும் குரல் கொடுக்கும் வியாபாரப் பத்திரிகைகளைப் போல், தமிழைக் கொலை செய்த வண்ணமே தமிழின் உயர்வைப் பேசுவது         தாய்மொழியையும் வர்த்தகப்பொருளாகப் பாவிக்கும் போக்கே.

வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறோம் என்ற பெயரில் ஆண்டான்-அடிமைநிலைகளைப் பேணும் சொற்பிரயோகங்களும், நடை உடை பாவனகளும் தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு, எழுபது வயது மனிதராக உள்ள வேலைக்காரரையும் முதலாளியின் 'தம்மாத்தூண்டு' மகள் ஒருமையில் தான் அழைப்பாள். வீட்டு வேலைக்காரர் என்றால் கைகட்டி நிற்பார், முட்டாளாகத் தான் இருப்பார், அவருடைய வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்ளும் சுயபுத்தி அவருக்குக் கிடையாது'. வீட்டு வேலை செய்யும் பெண்மணியைக் குறித்த சிலேடைப் பேச்சுக்கள், நமுட்டுச் சிரிப்புகள் - இப்படியான பிம்பங்களே பெரும்பாலும் சின்ன பெரிய     திரைகளில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அனாதை, வாழாவெட்டி, நொண்டி, குருடு, போன்ற சொற்பிரயோகங்கள் வெகு இயல்பாகக் கையாளப்பட்டு வருகின்றன.

'தத்தெடுத்தல்' என்பது இப்பொழுது தான் சிறிதுசிறிதாகப் பரவலாகிக் கொண்டு வருகிறது. ஆனால், இப்பொழுது நடைபெற்று வரும் பல சின்னத்திரைத் தொடர்களில் தத்தெடுக்கும் குழந்தை உண்மைப் பாசத்தோடு இருக்காது என்று பெற்றோர்கள் கவலைப்படுவது   போல் சித்தரிப்புகள் அதிகமாகி வருகின்றன. குடும்ப வன்முறை என்பதில் தொலைக்காட்சித் தொடர்களில் இடம்பெறும் சித்தரிப்புகளையும், அவை பார்வையாளர்கள் மனங்களில் ஏற்படுத்தும்  பாதிப்புகளையும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்' 'அவன் கையை வெட்டு', 'இவள் கதையை முடித்து விடு' என்றெல்லாம் கட்டுகட்டாக பணத்தைக் கொடுத்து நெருங்கிய உறவைக் கொல்ல வேண்டி 'தாதாக்களை' நேரில் சென்று பார்த்துக் கேட்டுக் கொள்ளும் காட்சிகளும் இன்று சின்ன பெரிய திரைகளில் அதிகமாக இடம்பெறுகின்றன. குறிப்பாக இத்தகைய காட்சிகள் romanticize செய்யப்படுகின்றன. இவற்றை தினம்தினம் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகள், பெரியவர்களின் மனங்களில் அவற்றின் விளைவாக எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது கவனத்திற்குரியது.

நிஜத்தில் வாழ்க்கை இதை விட மோசமாக இருக்கிறது என்ற முன்வைப்பவர்கள் வாழ்க்கையில் அத்தகைய அவலங்கள்           நடந்தேறும்போது அவை வண்ணமயமாக, சுவாரசியமாக அமைவதில்லை என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

*Published in Thinnai

No comments:

Post a Comment

comments: