LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, May 27, 2020

க்ருஷ்ணார்ப்பணம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

க்ருஷ்ணார்ப்பணம்
ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


1.விண்டவர் கண்டிலர்

தேடித்தேடி இளைக்கச்செய்து
அவளை ஹரி மோசம் செய்துவிட்டதாக
கரும்புள்ளி செம்புள்ளி குத்த
காலந்தோறும் பரபரத்துக்கொண்டிருப்போருக்கு
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி யொரு பேதை;
காதலனால் வஞ்சிக்கப்பட்டவள்;
கண்ணீர்பெருக அவனை நினைத்துப்
பாடல்கள் எழுதியெழுதி இளைத்தவள்;
இன்(ல்)வாழ்க்கையைத் தொலைத்தவள்…..
நாச்சியார் திருமொழி பாய்ச்சும் அன்பெல்லாம்
விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதாய்
இறுதித்தீர்ப்பு எழுதி
கழுமேடைக்கு ஹரியெனும் காற்றை
கரகரவென்று இழுத்துச்செல்லப் பார்ப்பவர்களின்
விசாரணை வளையத்திற்கு அப்பாலானது
காற்றைக் காதலனாக அடைந்தே தீருவது என்ற
அவளின்
அசாதாரண ஊற்றனைய போதமும்
பிறவிப்பெரும் பேறாய்
காற்றோடு அவள் ஆனந்தமாய் அலைந்துதிரிந்த
அரிதரிதாம் காதமும்
உருவறு விசுவரூபக் காற்று
அவளைச் சரண் புகுந்ததும்
அதுகாலை கேட்ட சுநாதமும்
மீதமும்.

***
2.கண்டவர் விண்டிலர்

அவரிவருடைய கண்ணீரின் அர்த்தங்களை யெல்லாம்
தன் கண்ணீருக்கானதாக முன்வைத்துக் கொண்டிருப்போரிடம்
மென்சிரிப்போடு ஒன்றை மட்டுமே
திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டிருக்கிறாள் ஆண்டாள்:
என் ஒரேயொரு கண்ணீர்த்துளியைத் தருகிறேன்
திரியாமல் முறியாமல் திறந்து
உள்ளேயிருக்கும் உணர்வின் உணர்வை
உள்ளது உள்ளபடி
கையிலேந்திக் கொண்டுவரமுடியுமா பாருங்கள்.”
அவளறிவாள் _
அதன் வட்டம் நம் உள்ளங்கைகளில் அடங்காது.
அதன் குளிர்ச்சி சுட்டெரிக்கும்.
அதனுள்ளே தெரியும் வானவிற்கள் நம் பார்வைக்குக்
காணாதொழியும் வாய்ப்புகளே அதிகம்.
அந்த ஒற்றைக் கண்ணீர்த்துளிக்குள்
புல்லாங்குழல் உண்டு;
பிரிய குசேலர் உண்டு;
உரலில் கட்டிவைக்கப்பட்டிருக்கும்
குறும்புக் குழந்தையின் குட்டி வாய்க்குள்ளான
அகில உருண்டை உண்டு.....
ஒரு கணம் யுகமாகவும்
ஒரு யுகம் கண்ணிமைப்போதாகவும்
அந்தக் கண்ணீர்த்துளிக்குள் இயங்கும்
காலம் வேறு;
காலக்கணக்கு வேறு;
காலப்பிரக்ஞை வேறு.
வேண்டாத வேலை யிது -துண்டுபோட்டுத் தாண்டாத குறையாய் அவள் காதலைத் தோற்றதாக்குவது.
மாண்டாலும் மாறாதது ஆண்டாளின் அன்பு.
தீக்குள் விரலை வைத்தால்
நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் தோன்றுவது
எத்தகைய திருக்கனவு!
ஒருவகையில் உலகையே புரட்டிப்போடுவது!
விரலும் தீயும் இன்பமும் தோன்றலும் நந்தலாலாவும்
ஒருங்கிணைந்திருக்குமிந்த
ஒற்றைக் கண்ணீர்த்துளி
நேற்று பாடினாலும் நாளை பாடினாலும்
வரிகளை மீறிப்பரவும்
காற்றின் வருடல்;
குரலற்ற விளி;
பொருள் மீறிய பிரபஞ்சவெளி....


Tuesday, May 26, 2020

திக்குத்தெரியாத காட்டில்……. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

திக்குத்தெரியாத காட்டில்…….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
 - Saturday, 02 May 2020 தேதியிட்ட பதிவுகள் இணைய இதழில் வெளியான கவிதை
 
திசை – 1

ரயில்வண்டிகள் வழக்கம்போல்
 ஓடத்தொடங்கும்.
 விமானங்கள் பறக்கத்தொடங்கும்.
 கொரோனாக் காலம் என்பது கடந்தகாலமாகும்.
 கதைகளில், கவிதைகளில் திரைப்படங்களில்
 பட்டிமன்றங்களில் பேசுபொருளாகும்.
 கேட்பவர்கள் பார்ப்பவர்களில் சிலர்
 சிரிப்பார்கள்;
 சிலரின் முதுகுத்தண்டுகள் சில்லிடும்.
 இனி வரலாகாத அந்த முப்பது நாட்கள்
 அல்லது
 மூன்று மாதங்களின் நினைவு தரும் இழப்புணர்வு
 சிலருக்குப் பொருட்படுத்தத்தக்கதாய்
 சிலருக்குப் பொருளற்றதாய்
 அருகருகிருக்கும் இரு மனங்களின் இடைவெளி
 அதலபாதாளமாயிருக்க வழியுண்டு என
 நினைக்கையிலேயே
 அதன் மறுபக்கமும் எதிரொலிக்கும் மனதில்.
 மீண்டும் மனிதர்கள் கூடிப்பழகுவார்கள்.
 கூட்டங்கூட்டமாக திருவிழாக்களைக் கண்டு மகிழ்வார்கள்
 குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடற்கரைக் குச் செல்வார்கள்.
 கொரோனாவை மீறியும் நீளும் காலம் நெருக்கும் கூட்டமாய் உந்தித்தள்ள
 இருபக்கமாய் பிரிந்துவிட்டவர்கள் இன்னமும்
 தேடித்திரிந்துகொண்டிருக்கலாம்.

திசை – 2

அந்த அநாமதேய பிராந்தியத்தில் தான்
 சென்றிருக்கும் வீடு இருக்கிறது;
 செல்லவேண்டிய வீடும் இருக்கிறது.
 நிகழ்காலமும் எதிர்காலமும் இருமுனைகளாக
 இடையே இருப்பவை ஒரு சில வீடுகளாக இருக்கலாம்
 சில பல தெருக்களாக இருக்கலாம்
 வீதிகளாக இருக்கலாம்
 மீதமிருக்கும் கோபதாபங்களாக இருக்கலாம்
 அநாமதேய பிராந்தியமென்றானபின்
 அடுத்திருந்தாலும்
 அந்த இரு வீடுகளுக்கிடையே
 ஆயிரமாயிரம் மைல்களாக
 அந்திசாயும் நேரத்தில்
 எந்தப் பக்கம் திரும்புவது என்று தெரியாமல்
 நின்றது நின்றபடி
 தேடித்தேடி இளைத்திருக்கும்
 ஏழை மனம்.

 திசை - 3

பாதங்களுக்குப் போதிய பலம்வேண்டும்
 திசையறியாத்த தொலைவின்
 காததூரங்களைக் கடக்க;
 பழகவேண்டும் வழிகளில் தட்டுப்படும்
 இடர்ப்பாடுகள்…
 .காலணிகளை ஊடுருவி சுருக்கென்று குத்தும் கூர்கற்கள்;
 தைக்கும் நச்சுமுட்கள்;
 கண்ணீர் வந்தால் சற்றே இளைப்பாறுவதற்கு
 நிழல் தரும் மரம் எங்காவது இருக்கும்
 என்பதொரு நம்பிக்கை.
 என்றாவதுதான் தட்டுப்படுமா
 நன்னம்பிக்கைமுனைகள்?
 இப்போதெல்லாம் இரவில் வனவிலங்குகள்
 நடமாட்டம்
 வாகனவீதிகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
 இத்தனையையும் கடந்து சென்றடையும் வீடு
 பூட்டியிருக்க நேரலாம்
 அல்லது தாளிடப்படலாம் வாசல்….
 ஈசலாய் எழுந்து மடியும் எண்ணங்கள்
 கட்டுச்சோறாய்
 மனதிலொரு நெடும்பயணம் பொடிநடையாய்
 நடந்தவண்ணம்…

 திசை - 4

இங்கிருந்து பார்க்க முட்டுச்சந்துபோல்தான்
 தெரிகிறது.
 ஒருவேளை மறுமுனையில் திறப்பிருக்கலாம்.
 இருபக்கமும் பாதை பிரியலாம்
 இதுபோல் நடந்ததில்லையா என்ன?
ஆனால்
 இரு நான்கு வருடங்களுக்கு முன்பு
  நடக்கமுடிந்ததைப் போல் இன்று முடிவதில்லை.
 நினைத்தபோது கால்கள் தூண்களாகி
 நிலமூன்றி நின்றுவிடுகின்றன
 நகர்த்தவே சக்தியில்லாத நிலையில்
 நெடுமரமாய் வேர்பிடித்திருக்கும் கால்கள்
 தன்னிலைக்குத் திரும்பக் காத்திருக்க
  நேர்கிறது.
 இல்லை, சாம்சன் தலைமுடியாய் மீண்டும்
 சக்தி திரண்டு
 நிலத்தைப் பிளந்து தூண்களை வெளியே இழுத்து
 கால்களாக்கிக்கொள்ளும்படியாகிறது.
 இதற்காகும் நேரம் பொதுவான  காலக்
 கணக்கில் சேருவதில்லை
 அதிபிரம்மாண்டப் பெருங்காலம்  அதன்
 போக்கில்
 வருங்காலத்தை நோக்கிப் பாய்ந்தவண்ணமே.
 அதன் சுழல்வேகத்தில் கழன்று மேலெழும்பும் கால்கள்
 நடக்க முற்படுவதற்குள்
 இழுத்துச்செல்லப்படுகின்றன.
 புயலடித்துத் தரைதட்டும் கப்பலாய்
 அயல்வெளியில் கரைசேர்ந்து
 அரைமயக்கத்தில்
 துவண்டுகிடக்கின்றன, கையறுநிலையில்…
 என்றும் சென்று சேருமிடம் சேர
  கால்களுக்குக் கருணை காட்டவேண்டும்
 காலம்.

 திசை – 5

அனேக கிலோமீட்டர்கள் நடந்து சென்று
 அன்னையைக் கண்டவர்
 அவள் உடனே இறந்துவிடுவதையும் காண்
 கிறார்.
 அனேக கிலோமீட்டர்கள் ஆம்புலன்ஸில்
 அன்பு நண்பனின் இறந்த உடலிருந்த பெட்டியருகே
 அப்படியே அமர்ந்திருக்கிறார் இன்னொருவர்.
 ஒருவகையில் இருவரும் பரஸ்பரம் கால்மாற்றிக் கொள்கிறார்கள்.
 உடலொன்றில் மரணம் நிகழும்போதெல்லாம்
 உயிரோடிருக்கும் சில மனங்களும் மரித்துவிடுகின்றன.
 இறந்தவரின் உடல் ஒருபோதும் எழுந்து நடப்பதில்லை.
 மரித்த மனங்கள் பலகாலம் திசையழிய அலைந்தவாறே……

 திசை – 6

அதன் இயல்பில் மனித உடலொன்றுக்குள்
நுழைந்துவிட்ட தீநுண்மி
திசைமாறி எங்கெங்கோ திரிந்தலைந்து,
இறுதியில்
இருதயம், மூளை இன்னும் சில இனமறியா
பிறவேறுகளுடைய கூட்டிணைவிலானதாய்
பரவலாய் பேசப்படும் மனதையடைந்துவிட _
அது கடைந்தெடுத்த அமுதமாயொரு பெயரை
அத்தனை வலியிலும் அதற்கேயான மாமருந்தாய்
மனனமாய் உச்சரித்துக்கொண்டிருக்கக் கண்டு
அதிர்ந்துபோய்
அன்பின் வெப்பத்தைத் தாங்கவொண்ணாமல்
அங்கிருந்து வெளியேறும் திசைதேடி
அலைக்கழியும்.

திசை – 7

காட்டின் வெளிச்சத்திற்கும் நாட்டின் வெளிச்சத்திற்கும்
கண்டிப்பாக வித்தியாசம் உண்டுதான்…..
எனில் _
காட்டின் நடுவில் தெரியும் நாட்டிலும்
நாட்டின் நடுவில் தெரியும் காட்டிலும்
மனதிலும் மூளையிலும் முளைத்த கால்களோடு
மீளாப்பயணம் மேற்கொண்டிருப்பது
முட்டாள்தனமென்றால் கெட்ட கோபத்துடன்
திட்டுகிறது உள்.
தட்டுப்படாத திசையையும் தடத்தையும்
அங்கங்கே விட்டகுறை தொட்டகுறையாய்
கிட்டும் கனிகளும்,
மெட்டுக்கப்பாலான குயிலின் இன்னிசையும்
சரிக்கட்டிவிட
அன்றுபோல் என்றும் தொடரும் பயணம்
தனிவெளியொன்றின் பிடிபடா திசையில்…..

திசை – 8

பகலைப் பகலாக்கும் சூரியனின் மகிமை பழுதற்றதுதான், என்றாலும்
அதன் கதிர்கள் வரிவரியாய்
உள்வெளியெங்கும் படர்ந்து சுட்டெரிக்கும் போது
அனத்தாமலிருக்கவியலாது.
மனதின் உடலோ உடலின் மனமோ _
இரும்பாலானதல்லவே எதுவும்….
துருப்பிடிக்கும் காலத்தே எல்லாமும்,
என்றபோதும்
கரிந்தெரியும் ரணத்தோடும் புண்களோடும்
வெடிப்புகளோடும்
திரும்பத்திரும்ப தனக்கான ஒன்பதாவது
திசைதேடி
தாகம் மிக பயணப்படும் மனதுக்கு
இருமருங்குமான இயற்கையழகைப் பருகக் கொடுத்து
 அருள்பாலிப்பதும் அந்தக் கதிரோனேயாகும்.

'கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை…. லதா ராமகிருஷ்ணன்

'கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….
லதா ராமகிருஷ்ணன்

(மே 17 தேதியிட்ட *திண்ணை இணைய இதழில் வெளியானது)

சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவொன்றுக்குச் சென்றிருந்தேன்.

வந்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான பிரபல பேச்சாளர் ஒருவர் தனது உரையின் நடுவே, அம்மாவை விட மனைவியே மேலானவள். ஏனென் றால், அம்மாவால் தர முடியாததை மனைவியால் தர முடியும்’, என்று தனது கணீர் குரலில் கூறினார்.

அரங்கமே அதிர்ந்துபோய் அருவருப்போடு முகஞ் சுளித்ததை அவர் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.

எத்தனை தேவையற்ற, அருவருப்பான ஒப்புமை அவருடையது. அத்தனை கொச்சையானதாக ஒலிக்கவில்லையென்றாலும் சமீபத்தில் சர்ச்சைக் குள்ளாகி யிருக்கும் நடிகை ஜோதிகாவின் கோயிலைப் பற்றிய பேச்சு இடம்பெறும் காணொளி யைக் கண்டபோது, இது எதற்கு இந்தத் தேவையற்ற பேச்சு என்ற எண்ணமே ஏற்பட்டது.

தஞ்சையிலுள்ள பிரகதீஸ்வரர் கோயிலைத் தான் பார்த்ததாகவும், அது உதய்பூர் அரண் மனை போல் இருந்ததாகவும், மறுநாள் அதே ஊரில் அவல நிலை யில் ஒரு மருத்துவமனையைப் பார்த்ததாகவும் அவையோரிடம் தெரிவித்து, கோயில் உண்டியலில் பணம் போடுபவர்கள் பள்ளி, மருத்துவமனை கட்டப் படுவதற்கும், அவற்றின் பராமரிப்புக்கும் பணம் தரலாம் என்பதாகவும் கூறியிருக்கிறார். இந்தக் கருத்துக்கு எதிர்ப்பெழுந்திருக்கிறது. அதேயளவு ஆதரவும் எழுந்திருக்கிறது.

நடிகை ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யா தன் மனைவி தவறாக எதுவும் சொல்லவில்லை என்றும், தவறு என்று சொல்பவர்கள் அதே கருத் தைச் சொல்லி யிருக்கும் சுவாமி விவேகானந்தர், பாரதியார், திருமூலர் போன்றோரைப் படித்திருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

அவர்கள் வாழ்ந்த காலம் வேறு. வாழ்ந்த வாழ்க்கை வேறு. அவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்கள். எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.

நடிகை ஜோதிகா பிரகதீஸ்வரர் கோயிலை உதய்பூர் அரண்மனைபோல் இருப்ப தாகவும், அந்த ஊரில் அவலமான நிலையில் உள்ள மருத்துவமனையைப் பார்த்த பின்பு அந்தக் கோயிலுக்குப் போக மனம் ஒப்பவில்லை என்றும் கருத்துரைத்த இடம் ஒர் ஆடம்பரமான திரையுலக விருதுவிழா. அத்தகைய ஆடம்பர விழாக்களை நடத்த ஆகும் செலவு நிறைய நிறைய. அத்தகைய விழாக்களுக்குச் செலவிடுபவர் கள் எல்லா ஊர்களிலும் மருத்துவமனை, பள்ளிக் கூடம் கட்டப்படுவதற்கும், பராமரிக்கவும்கூட செலவழிக்கவேண்டும் என்று கூறலாமே? அப்படிக் கூறவேண்டிய தேவையை அவர் ஏன் உணரவில்லை?

கோயில் உண்டியலில் பணம் போடுகிறவர்கள் வேறு நல்ல காரியங்களுக்குப் பணம் தருவதில்லை என்று திட்டவட்டமாகக் கூற முடியுமா? கோயில் உண்டிய லில் ஒரு ரூபாய் போடுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு கோடி ரூபாய் போடுகிறவர்களும் இருக்கிறார் கள். கோயில் உண்டியலில் போடப்படும் பணம் கோயி லுக்கு ‘பெயிண்ட்’ அடிப்பது போன்ற, ஜோதிகாவின் கருத்துப்படி அநாவசிய வேலைக்குத் தான் பயன் படுத்தப்படுகிறது என்று திட்டவட்ட மாகச் சொல்ல முடியுமா?

எத்தனை பேருக்கு கோயில் அன்னதானம் பசியாற்று கிறது தெரியுமா? தினம் தினமா கோயில்கள் கட்டப் படுகின்றன. இந்தியாவில் உள்ள கோயில்கள் கட்டப் பட்டு, பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டு எத்தனை யெத்தனை வருடங்களாகிவிட்டன! அந்நியப் படையெடுப்புகளில் அழிக்கப்பட்ட கோயில்கள் போக இன்னும் எத்தனை கோயில்கள் சின்னச்சின்ன ஊர்க ளில் சிதிலமடைந்திருக்கின்றன!

பள்ளிக்கூடம், மருத்துவமனை சரியான பராமரிப் பின்றி இருந்தால் அது குறித்து உரிய அதிகாரிக ளிடம் சொல்லி நடவடிக்கை எடுப்பதுதான் சரியான அணுகுமுறை. ஓர் ஊரில் பள்ளிக்கூடம் நல்ல நிலையில் இல்லை, எனவே அங்கேயுள்ள மருத்துவமனையைப் பராமரிப்பது அநாவசியம் என்று யாரே னும் சொல்வார்களா?

இரண்டும் இருவேறு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்பவை.

ஆனால், கோயில் அநாவசியம் என்று எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். அதாவது, இருக்கும் கோயிலைப் பராமரிப்பதுகூட அநாவசியம் என்னும் உட்பொருளில்.

ஆனால், கோயில் என்பது ஒரு மண்ணின், மதத்தின் நம்பிக்கை, விழுமியம், கலாச்சாரம் சார்ந்தது.

நேற்று பூ வாங்கச் சென்றபோது பூவிற்கும் பெண்மணி முழம் அளந்து வெட்டித் தருவதற்காக கத்தியைத் தேடினார். எத்தனை தேடியும் கிடைக்க வில்லை. 'பரவாயில்லை, பல்லால் கடித்துத் தாருங்கள்' என்று நான் சொன்னதற்கு ‘அது தப்புமா, கடவுளுக்கு சுத்தபத்தமா தரணும் என்று தன் தேடலைத் தொடர்ந்தார்.

இறை நம்பிக்கை என்பது உளவியல் சார்ந்தது. உடல் நலனைப் பேணுதல் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் உள நலனைப் பேணலும். அவ்வகையில் பள்ளிக்கூடம், மருத்துவமனை இரண்டுடனும் தொடர் புடையது கோயில் என்பதோடு அந்த இரண்டைத் தாண்டி மனிதர்களுக்கு உள்ள சில தேவைகளையும் அது பூர்த்தி செய்கிறது என்று சொல்லலாம்.

என் தந்தை இறந்தபோது என் அம்மாவுக்கு 37 வயது. அப்பாவின் மருத்துவச் செலவுக்கு வாங்கிய கடன் மட்டுமே எங்களுக்கிருந்த சொத்து. என் அம்மா அத்தனை பாடுபட்டு என்னையும் என் தம்பியையும் படிக்கவைத்தார். தந்தை இறந்த பின் 35 வருடங்கள் கடவுளிடம் கோபம் கொண்டு கோவில் பக்கமே செல்லாமலிருந்தேன்.

அம்மா தினமும் கோயிலுக்குச் செல்வது வழக்கம். ஒரு நாள், ‘கடவுள்தான் எங்கு மிருக்கிறாரே –பின் ஏன் தினமும் கோவிலுக்குப் போகிறாய்?’ என்று இளமைக்கே உரிய அலட்சியமும் அறிவுசாலி பாவனையுமாய் (ஆனால், அந்நாளில் கூட வாயே கிழிந்துதொங்கும் அளவுக்கு எகத்தாளமாக கோண வாய்ச் சிரிப்பு சிரித்ததில்லை என்பது ஒரு மனிதப் பிறவியாக நான் ஆறுதல் கொள்ளும் விஷயம்) என் அம்மா விடம் கேட்டபோது, ‘உனக்கு இலக்கியம் எப்படியோ அப்படி கோயில் எனக்கு’ என்று சாந்தமாக எனில் உறுதியாக பதிலளித்து ‘மேலே பேசுவதற்கு எதுவுமில்லை’ என்பதாய் தன் வேலையில் மூழ்கினார்.

அதற்குப் பிறகு பல நாட்கள் கழித்து, என்னைப்போல் இளவயதில் கணவனை யிழந்தவர்கள் கடற்கரைக்குச் சென்று காலார நடக்க முடியாது. கோயிலில் காலார பிராகாரத்தைச் சுற்றிவரலாம். என்னைப்போன்ற பெண்களைப் பார்க்கும் போது, அவர்களிடம் பேசும் போது எனக்கு ஒரு தைரியம் பிறக்கிறது. நான் கடவுளிடம் ’எனக்கு அதைத் தா, இதைத் தா’ என்று கேட்பதில்லை. யாரிடமும் போய் நிற்காமல் என் சொந்தக்காலில் நின்று என்னையும் என் பிள்ளைக ளையும் காப்பாற்ற சக்தி கொடு என்று மட்டுமே கேட்பேன். அப்படி இதுவரை காப்பாற்றியதற்காக நன்றி தெரிவிக்கவே நான் கோயிலுக்குச் செல்கிறேன்’, என்றார். இப்பொழுதும் போகிறார்!

என் அம்மாவின் பேச்சு என்னை நிறைய யோசிக்க வைத்தது. யோசித்துப்பார்த்தால் எந்தவொரு கலைப் படைப்பும் சில மனங்களில் உதித்த கற்பனையே. ஆனாலும், அவற்றை எப்படி உருகியுருகிப் பார்க்கி றோம், படிக்கிறோம். அவற்றின் மூலம் நம் மனம் எவ்வாறெல்லாம் மேம்படுகிறது, துலக்கமடைகிறது! அப்படித்தான் கோயில் என்பதும். சிலருக்கு அது வொரு சுற்றுலாத்தலம்; சிலருக்கு அது பெரும் ஆசுவாசம். நம்பிக் கைக்கும் மூடநம்பிக்கைக்கும் மயிரிழைதான் வித்தியாசம். இரண்டும் highly relative terms; often overlapping.

மருத்துவர்கள், விஞ்ஞானிகள் முழுக்க முழுக்க கடவுள் நம்பிக்கை அற்றவர்களா என்ன? அப்படி யில்லையே? அவர்களில் கோயில் உண்டியலில் போடுபவர்களும் இருப்பார்கள்; ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து தருபவர்களும், வைத்தி யம் பார்ப்பவர்களும் உண்டு.

பள்ளிக்கூடம், மருத்துவமனை இரண்டும் தனித்தனி அளவில் அத்தியா வசியமானதே. அதேபோல்தான் கோவிலும்.

‘தனியொருவனுக்குணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றாரே பாரதி. அப்படி எல்லோரும் தங்கள் வாழ்விலும் இருந்தால் அவர்கள் வணக்கத்திற் குரியவர்கள். ஆனால், ஏழைகளுக்காக ஆவேசமாகக் குரலெழுப்புபவர்கள் அவர்களுக்காக தங்கள் வசதி யான வாழ்க்கையை வாழாமலிருக்கிறார்களா என்பதும் கேள்வி.

இன்று சமூகப்பணியாற்ற முன்வருபவர்களில் கணிச மான பகுதியினருக்கு அதற்குக் கிடைக்கும் வரி விலக்கும் ஓர் இயக்குவிசையாக இருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது.

ஒரு திரைப்படத்தில் ஊதியமாக லட்சங்களோ கோடி களோ வாங்கிக் கொண்டு தியாகி வேடத்தில் நடிப்பவர் களெல்லாம் உண்மையான தியாகிகளல்ல. அப்படி அவர்கள் நம்பிக்கொள்வதும், அப்படி அவர்களை நம்பிக்கொள்வதும் அபத்தம்.

தனது முக்காலே மூணுவாசி படங்களில் மதுபுட்டி யோடு காட்சியளிக்கும் நடிகர் ரஜினிகாந்த், அந்தக் காட்சிகளின் மூலம் எத்தனையோ இளைஞர்களுக்கு குடி பற்றிய ஒரு பிரமையை உருவாக்கியவர் ’இப்போது டாஸ்மாக்கைத் தொடங்கினால் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கமுடியாது’ என்று ஆட்சியாளர்களுக்கு அறைகூவல் விடுகிறார்.

நடிகை ஜோதிகாவின் விஷயத்தில் அவரை எதிர்த்திருப்பவர்கள் பலர் கொச்சையாக தனிமனிதத் தாக்குதலில் இறங்கியிருப்பது தேவையற்றது; கண்டிக்கத்தக்கது. மேலும், ஒரு கருத்தை எதிர்ப்பவர்கள் தங்கள் பக்க நியாயத்தைப் பேசுவதில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்காமல் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தும்போதும், தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடும் போதும் எதிர்க்கப்படும் கருத்தைக் கூறியவர் ‘பாதிக்கப்பட்டவராகி’விடுகிறார் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.

அதே சமயம், நடிகை ஜோதிகாவின் கருத்தை எதிர்ப்பவர்களை மிகக் கொச்சையாகப் பழிப்பதில் அவருடைய ஆதரவாளர்களும், இந்து எதிர்ப் பாளர்களும், கடவுள் எதிர்ப்பாளர்களும் எந்தவிதத்திலும் சளைத்தவர் களில்லை. முன்னாள் நீதியரசர் உட்பட எதிர்க்கருத்தாளர்களை ‘சங்கிகள்’ என்று பழிப்பதில் முன்னணியில் நிற்கிறார்கள். இதுபோல் வேறு எந்தத் தரப்பினரை யாவது அவர்கள் இத்தகைய ‘முத்திரை வாசகங்களால்’ மதிப்பழிக்க முற்படு வார்களா என்பது சந்தேகமே.

பொதுவெளியில் பிரபலங்களாக இருப்பவர்கள் ஒரு கருத்துரைக்கும்போது அதன் பின்விளைவுகளை யோசித்துப் பேசுவது நல்லது.

அல்லது _

‘என் கருத்து யார் மனதையேனும் புண்படுத்தியிருந் தால் மன்னிக்கவும்’ என்று கூறும் பெருந்தன்மையாவது சம்பந்தப்பட்டவர்களுக்கு இருத்தல் நலம்.