கருகத் திருவுளமோ?
ரிஷி
ஐந்து மாத கர்ப்பிணிப்பெண் வைதேகி.
வைகை நதிப்படுகையில் புதையுண்டு கிடந்தாள் பிணமாக.
காதலித்துக் கைப்பிடித்தவன் ‘தலித்’ என்பதால் அவன் உயிர் வலிக்க
அருமை மகளின் உயிரும் உடலும் வலித்துத் துடித்தடங்க
ஆளமர்த்திப் பெண்ணைக் கொலை செய்து
தன் ’கௌரவ’த்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாள் தாய்.
மகனும் சகோதரர்களும் இழிதுணையாய்.
’உண்டா’யிருக்கும் செய்தியைத் தாயிடம் ஆசைஆசையாய் தெரிவித்தவளை
பாசாங்குப் பாசம் காட்டிப் பிறந்தவீட்டுக்கு வரவழைத்து
கருவைத் துண்டாக்கும்படி கட்டாயப்படுத்தியதில் குலைந்துபோனது
தாய்மையின் கௌரவம்.
விரும்பி வரித்தவனைத் துறந்துவிட்டு வரும்படிக் கட்டாயப்படுத்தியதில்
தொலைந்து பறிபோயிற்று தாலியின் கௌரவம்;
தாம்பத்தியத்தின் கௌரவம்.
தமயன், தாய்மாமன்களின் குரூரத்தில் கரிந்துபோனது உறவுப்பிணைப்பின் கௌரவம்.
இத்தனை வெறித்தனத்திலா இடம்பிடித்திருக்கிறது
சாதியின் கௌரவம்?
சமூகத்தின் கௌரவம்?
அன்பின் வெளிப்பாடு இது என்று கூடக் கூறலாம் சிலர்…..
பெற்றோரும் பலிகடாக்களே என்று பேசலாம்..
மனுவின் நாசவேலை என்று சொல்லி முடிக்கப் பார்க்கலாம்……
ஊரெங்கும் ஒலிவாங்கிகள் ஓயாது அதிர்ந்தபடி
காரோடும் வீதிகளின் இருமருங்கும் வாக்குறுதிகள் சிதறியபடி…..
தொடரும் கௌரவக்கொலைகளைக் கண்டனம் செய்து
ஏன் எந்தக் கட்சியுமே ஒரு சுவரொட்டியும் ஒட்டவில்லை?
தேர்தல் மும்முரத்தில் கிராமம் கிராமமாய் சென்றவண்ணம்
வேட்பாளர்களும் தலைவர்களும்.
ஆம், வேறு வேறு சாதிகளாய் வாக்காளர்களைப் பிரித்தால்தான்
வெற்றிக்கனியை எட்டிப்பறிக்க முடியும்.
சமூக சீர்திருத்தவாதச் செம்மல்கள் – சினிமாத்துறையினர்
சும்மாயிருப்பது ஏன்?
சாதிப்பிரிவினையே விறுவிறுப்பான கதைக்களம்.
வசூலை அதிகரிப்பதே குறியாய்
‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்று நீதி கூறி
அவர்பாட்டுக்குச் சென்றுவிடுவார் அடுத்த படமெடுக்க.
ஒருவேளை எங்கேனும் அதிசயமாய் மக்கள் எதிர்த்தெழுந்தால்
அவர்களை எதிர்மறையாய் ஆய்ந்தலச முற்படுவார் சில அறிவுசாலிகள்.
காதல் திருமணங்கள் சாதியொழிப்புக்கு வழிகோலும் என்போரின்
வாக்காளர்கள் என் வணக்கத்திற்குரிய ஆசான்கள் என்போரின் _
அரசாங்கங்கள், அதிகார பீடங்களின்
பாராமுகங்களின் நேரேதிரே பூதாகாரமாய் வளர்ந்துவருகின்றன
கௌரவக் கொலைகள்.
பல்கிப் பெருகிப் புரையோடி வளர்கிறது மனித நாகரிகத்தையே பழிக்கும் நச்சுவிதை; மனம் பிளக்கும் வதை _
இனியும் எத்தனை காலம் தொடர அனுமதிக்கப்போகிறோம்
இதை?
* டெக்கான் க்ரானிக்கள் நாளிதழ் ஏப்ரல் 1,2014 – சென்னை / ராமநாதபுரம் மார்ச் 31.
தலித் இளைஞர் சுரேஷ், அவர் மனைவி வைதேகி (வயது 23) கடந்த ஆகஸ்டு மாதம் மனம் விரும்பித் திருமணம் செய்துகொண்டனர். பெண் உயர் சாதியை சேர்ந்தவர் எனப்தால் அவர் வீட்டில் எதிர்த்தனர். ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்ணான வைதேகி தான் கருவுற்றிருக்கும் நல்ல செய்தியைத் தாயோடு பகிர்ந்துகொள்ள விரும்பி தாயோடு தொலைபேசியில் தொடர்புகொண்டதன் விளைவாக, தாய்க்கு உடல்நலம் சரியில்லை என்று பொய் கூறி வைதேகியை வீட்டிற்கு வரவழைத்து ஐந்து மாத கருவைக் கலைத்ஹ்டுவிடும்படியும், கணவனை விட்டு வந்துவிடும்படியும் வீட்டார் கட்டாயப்படுத்தியிருக்கின்றனர். மறுத்ததால் ஆள்வைத்து வைதேகியை கொலை செய்திருக்கின்றனர். கணவர் சுரேஷ் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பித்ததன் பேரில் எடுக்கப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளதாக டெக்கான் க்ரானிக்கள் ஏப்ரல் 1 தேதியிட்ட நாளிதழில் செய்தி வந்துள்ளது.