LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, January 31, 2025

உள்ளொளியின் இருளில்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உள்ளொளியின் இருளில்….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
சுடர் விளக்கொளியைப் பார்த்தல்
ஒரு தரிசனமாக
இருகைகூப்பித் தொழுகிறாள்.
சுடர் அணையப் பார்க்கிறது.
கை குவித்துத் தடுக்கிறாள் காற்றை.
உள்ளிறங்கிய திரியை உடனடியாக விளக்கின் குகைவழியாக மேலுயர்த்துகிறாள்.
கொஞ்சம் எண்ணெய் எடுத்துவந்து ஊற்றுகிறாள்.
அலையும் சுடருக்குள்ளிருந்து காலம் எட்டிப்பார்ப்பதுபோல்
தோன்றுகிறது.
நக்கலாக சிரிப்பதுபோலவும்.
மருள் மனம் மறுபடி மறுபடி சொல்லிக்கொள்கிறது
தனக்குத்தானே _
'அணையவே ஒளி
ஒளியின் மறுபக்கம் இருள்
பொருளின் பொருள் அனர்த்தமாக
அதற்கொரு அர்த்தம் கற்பிக்கும் பிரயத்தனமே
பிரகாசமாக
திரும்ப
இருளும் ஒளியும்
திரும்பத்திரும்ப
திரும்பத்திரும்பத்திரும்ப……..'
மனதின் ஓரத்தில் சுடர்விட்டவாறிருக்கிறது
ஓர் ஒளித்துணுக்கு.


கவிதையெழுதுதல் வாசித்தல், மொழிபெயர்த்தல் குறித்து சொல்லத்தோன்றும் சில…. 4 _ லதா ராமகிருஷ்ணன்

 கவிதையெழுதுதல் வாசித்தல், மொழிபெயர்த்தல்

குறித்து
சொல்லத்தோன்றும் சில…. 4

_ லதா ராமகிருஷ்ணன்
கவிஞர் சாகிிப்கிரான் தக்கையின் கீழ்க்காணும் கவிதையை மொழிபெயர்த்து பதிவேற்றியிருக்கிறேன்.

கவிதை முழுமையாகப் புரிந்தாலே அதை மொழிபெயர்ப் பில் அதேயளவாய்க் கொண்டுவருவது கடினம். ஒரு கவிதை என்னால் முழுமையாக உள்வாங்கப்படாத போது?

ஒரு வாசகராக எனக்கு முழுமையாகப் புரிந்துவிடாத கவிதையை நான் ஏன் மொழிபெயர்க்கவேண்டும்?

ஒரு வாசகராக ஒரு கவிதை எனக்கு முழுமையாகப் புரி யாத போதும் அதில் ஒரளவு புரிந்துவிடும் சில மனதை ஈர்க்க, மனதை அலைக்கழிக்க அதை மொழிபெயர்க்கத் தோன்றுகிறது.
இதுவும் ஒருவிதத்தில் ‘நீலக்குழல் விளக்கின்’ Predator பொறி, தூண்டில் போன்றதே!

.....................................................
கவிஞர் சாகிப்கிரானின் வரிகள் இவை:

கருவி
............................

அது ஒரு பொறி.
எனக்கான விருப்பம்
ஒரு தூண்டிலாகிவிட்டது.
அந்த நீல குழல் விளக்கை
எனது விருப்பமாக மாற்றும்
அதை ஒரு கையிலும்
பிரிடேட்டர் உரித்த
கபால தண்டுவடம் மற்றொரு
கையிலும் வீசி நடக்கும்
அந்த விசித்திர ஜந்துவை
யாரும் அடையாளம் காண முடியாது.
புத்தனை பின்னுக்குத் தள்ளும்
சூறைக் காற்றில்
போதிமரம்தான் அந்த
குழல் விளக்கு.
அவன் ஒற்றைக் கொம்புடன்
தஞ்சமடைந்த பள்ளத்தின்
முட்டு...
மற்றொரு தியானம்.
- சாகிப்கிரான்

(மீள். மூன்று வருடங்களுக்கு முன்னால்.)

A POEM BY SHAHIBKIRAN THAKKAI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
DEVICE
That was a trap
My desire became a lure
None can recognize that
bizarre species which
walks on swinging both its hands
holding in one
that which makes the blue florescent
as my wish precise
and in the other
cervical spine peeled off by the
predator.
In the storm that pushes Buddha backward
the tube light is the Tree of Enlightenment.
The shove and butting of the pit
where he had sought refuge with a lone horn….
Meditation of another kind.

Shahibkiran Thakkai

இந்தக் கவிதையில் வரும் பிரிடேட்டர் ஐ அர்த்த அளவிலும், படத்தில் காணும் அளவிலும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த இரண்டினூடாகவும் கவிதை எதையோ சொல்ல முற்படுகிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், என்ன சொல்கிறது என்று திட்ட வட்டமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை.

சமயங்களில் குறிப்பான ஒரு விஷயம் – படம், பாட்டு, நிகழ்வு, பழமொழி என்பதாய் ஒரு கவிதைக்கான கருப் பொருளாகி விடுவதுண்டு. அந்த விஷயம் பிடிபட்டுவிட் டால் பின் கவிதைக்குள் நுழைந்துவிட முடியும்.

அப்படி ஒரு குறிப்பிட்ட பிரிடேட்டர் படத்தை, பட நிகழ்வை இக்கவிதை குறியீடாகப் பயன்படுத்தி யிருக்கிறதா? (நான் எந்த predator படமும் பார்த்ததில்லை; இணைய விளையாட்டு ஏதும் இருப்பின் அதை அறிந்த தில்லை. பிரிடேட்டர் உருவம் கணினியில் பார்த்திருக் கிறேன். ‘ஏலியன்’ என்று ஓரளவு புரிகிறது. குரூரமா னதாய் தெரிகிறது. ஆனால், அதன் முதன்மைத் தன்மை, செயல்பாடு என்ன என்பதெல்லாம் தெரியாது. உண்மை யில் யாருக்குத்தான் தெரியும் என்றும் கேட்கமுடியும் தான்.

பொறி என்றால் சிக்கவைப்பது; உத்தி, கருவி – இவை யெல்லாவற்றுக்குமாக ஒற்றை ஆங்கில வார்த்தை இருக்கிறதா?

இதில் வரும் பிரிடேட்டர் (Predator) வேட்டையாடலை, வேட்டைப்பிராணியை முன்னிறுத்துகிறதா? வாழ்வில் வேட்டையாடப்படலை, மனிதனுக்குள்ளிருக்கும் விலங்கைக் குறிப்புணர்த்துகிறதா? ஒரு குறிப்பிட்ட படத் தில் வருவதா? எல்லா பிரிடேட்டருக்கும் குறியீடாகி நிற்பதா?

குழல் விளக்கின் நீல ஒளி இரவு நேரம், உறக்க சமயம், கனவுநிலையைக் குறிக்கிறதா? அல்லது, வேறு ஏதா வதா?

நீலக் குழல் விளக்கை கவிதைசொல்லியின் விருப்பமாக மாற்றும் பொறிக்கும் புத்தனை பின்னுக்குத் தள்ளும் / சூறைக் காற்றில் /போதிமரம்தான் /அந்த குழல் விளக்கு என்று உணர்தலுக்கும் இடையில் நிகழும் மோதலும் அலைக்கழிப்பும்தான் கவிதையாகியிருக்கிறதா?

யாரும் அடையாளம் காணமுடியாத அந்த விசித்திர ஜந்து நம் எல்லோருள்ளும் இருக்கிறதோ? அதை அடையாளங் காண்பதுதான் போதிமர ஞானமோ?

அவன் ஒற்றைக் கொம்புடன்
தஞ்சமடைந்த பள்ளத்தின்
முட்டு...
மற்றொரு தியானம்.

கவிதைசொல்லி பள்ளத்தில் விழவில்லை; தஞ்சமடைந் \திருக் கிறான். பள்ளத்தின் முட்டு – மீட்சியற்ற நிலையா? அல்லது ஒற்றைக்கொம்பை மீறி பள்ளத்தால் முட்டப்பட்ட நிலையா?

என் புரியாமையையும் மீறி என்னால் ஏன் இந்தக் கவி தையைப் புறமொதுக்க முடியவில்லை? இந்தக் கவிதை ஒரு அலைக்கழிப்பை நவீனமாகச் சொல்ல வேண்டும் என்று மேம்போக்காக அல்லாமல் மனமார விரும்புகிறது என்றும் சொல்லவந்த விஷயத்தை மிகத் திருத்தமாகச் சொல்ல நினைப்பதையும் உணரமுடிகிறது.

இந்தக் கவிஞர் கவிதைக்கப்பால் தன்னை கவிஞராக வேறுவிதங்களில் முன்னிலைப்படுத்தியதில்லை; பறையறிவித்துக்கொண்டதில்லை என்பதும் அவர் இந்தக் கவிதையை வெறுமே தன்னை ‘பெரிய நவீனக் கவிஞராகக் ‘காட்டி’க் கொள்வதற்காக எழுதியிருக்க மாட்டார் என்ற தெளிவைத் தருகிறது.

கவிஞர் பிரம்மராஜனுடைய கவிதைகளில் மேற்குறிப் பிட்ட தன்மையை உணரமுடியும் என்பதாலேயே அவருடைய கவிதைகளைத் திரும்பத்திரும்பப் படித்து கவிதை முழு அளவில் ஒற்றை அர்த்தமொன்றைத் தருவதாகப் புரியாத நிலையிலும் அதன் புதிர்வழிப்பாதைகளில் அலைந்துதிரிவதிலேயே நிறைவுணர முடிகிறது.

கவிதையில் தேவைக்கு அதிகமாய் சொற்களேதும் இல் லாததும் கவிதை அதனளவில் அடர்வானது என்று உணர வைக்கிறது.

எனவே, இந்தக் கவிதைக்குள் நுழைவதற்கான திறவு கோலை (திறவுகோல்களை) கவிதைக்கு உள்ளாகவும், வெளியாகவும் இருக்கும் பிரிடேட்டரின் (பிரிடேட்டர்க ளின்) _ சொல், சினிமா, ஒருவேளை ஏதேனும் இணைய விளையாட்டு இவற்றின் அடிப்படையில் கவிதைக்குள் ளும் வெளியுமாகத் தேட ஆரம்பிக்கிறேன்.

வாசகப் பிரதி எழுத்தாளர் பிரதியிலிருந்து மாறுபடக் கூடும், அதற்கான சாத்தியப்பாடுகளே அதிகம் என்ற தெளிவு இருபது வருடங்களுக்கும் மேலாக நவீன தமிழ்க்கவிதை வெளியில் புழங்குவதன் காரணமாக வரவாகியிருக்கிறது.

என்றாலும் கிடைக்கும் வாசகப்பிரதியும் முழுநிறைவானதாக இல்லாதபோது?

கவிதைசொல்லி தனது மன அவசத்தை, அலைக்க ழிப்பை, அ-பூரண வாழ்வைப் பேசும்போது அந்த அலைக் கழிப்பை வாசகப் பிரதியும் தருவது இயல்பு தானே? அல்லது இப்படியில்லையா? இதற்கு வாசிப்பு சார் போதாமை காரணமா?

திக்குத் தெரியாத காட்டில் தேடித்தேடி இளைத்தல் வரமா? சாபமா? தேடலே கவிதை எழுதுதலின் வாசித்த லின் சாரமா? தேடிக்கண்டடைதல் தத்துவத்திற்கானதா? கண்டடைதல் என்றால் என்ன? கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் கவிதைக்கும் பொருந்துமா?

இந்தத் தேடலின் முடிவில் தெளிவு கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம். ’இங்கிருந்து வெளியே’ என்பதுதானே பயணத்தின் இலக்கே

இத்தகைய அடர்செறிவான கவிதைகளை எழுதுகிற வர்கள் தங்களுடைய ஒரு கவிதை உருவாகும் போக்கை யாவது வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள முன்வர வேண் டும் என்று ஒரு வாசகராக என் வேண்டு கோளை இங்கே முன்வைக்கிறேன். அப்படி சில பகிர்வு களைத் தொகுத்து ஒரு சிறு நூலாக்கினால் அது நவீன கவிதை சார்ந்த சில புரிதல்களை மேம்படுத்த உதவும் என்று தோன்றுகிறது.

கவிதை புரியவில்லை என்று சொல்லும் வாசகர்கள் இருவகைப் பட்டவர்கள். ஒரு தரப்பினர் புரியும்படி கவிதை எழுதச்சொல்லி கவிஞர்களை மிரட்டுபவர்கள். உரித்த வாழைப்பழத்தை வாயில் போடும் அளவில் கவிதை அமைய வேண்டும் என்று எதிர்பார்ப் பவர்கள். அவர்களை விட்டுவிடுவோம். இன்னொரு தரப்பினர் ஒரு அடர்செறிவான கவிதையை இழைபிரித்தறிய வேண்டும் என்ற மெய்யான ஆர்வமுடையவர்கள். அவர்களிடம் கவிஞர் கள் தமது ஒரு கவிதையை அல்லது சில கவிதைகளை இழை பிரித்துக் காட்டினால் அதில் கிடைக்கும் நிறைவு சம்பந்தப்பட்ட இருவருக்கும் பொதுவானது!

......................................................................................................................
பி.கு: இங்கே பேச எடுத்துக்கொண்டுள்ள கவிஞர் சாகிப் கிரானின் கவிதை குறித்து நான் எழுதியுள்ளவற்றைப் பொருட்படுத்தி கவிஞர் அளித்திருக்கும் மறுமொழி கீழே தரப்பட்டுள்ளது. அவருக்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகிறது.

Shahibkiran Thakkai
உண்மையாலுமே, மிக சிரத்தை எடுத்துக் கொண்ட, ஒரு வாசிப்பிற்கான பிரயத்தனங்கள் கூடியப்பதிவு. பொது வாக பிரிடேட்டர் என்பதை வேட்டை விலங்குகளைக் குறித்து பயன்படுத்துவார்கள். அது தனக் கான உணவுக்கு மட்டுமே ஒரு விலங்கை வேட்டையா டும். ஆனால் திரைப்படத்தில் வரும் அந்த ஏலியன் பிரி டேட்டர், குறிப்பாக வேட்டையாடும் மனிதர்களின் கபா லத்தை தண்டுவடத்துடன் உருவி எடுக்கும். இது உணவுக்கானது அல்ல. ஆனால் கவிதை ஒரு உணர்வு நிலை சார்ந்தது என்பதால் அதை விளக்குவது என்பது பெரும் அபத்தமாகிப் போய், சொற்கூடாகிவிடும். தங்க ளின் புரிதலுக்கான முனைப்பே கவிதையைப் பல தளங் களில் நிகழ்த்தும்.
Sri N Srivatsa, Riyas Qurana and 17 others

அவரவர் – அடுத்தவர் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் – அடுத்தவர்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று
அதிநவீனமா யொரு வரி எழுதியவர்
‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று
ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின்
தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம்பினால்
கவிதையாகிடுமாவென
அடுத்தகவியை இடித்துக்காட்டி
‘நிலம் விட்டு நிலம் சென்றாலும்
நகம்வெட்டித்தானேயாகவேண்டும்’ என்று
தன் கவிதையின் இன்னுமொரு வரியை எழுதிவிட்டு.
பின்குறிப்பாய்,
‘கவிதைவரலாற்றில் க்வாண்ட்டம் பாய்ச்சல் இதுவென்றால்
ஆய்வுக்கப்பாலான சரியோ சரியது கண்டிப்பாய்’
எனச் சிரித்தவாறு முன்மொழிந்து வழிமொழிந்து
வந்துபோன என் வசந்தம் தந்ததொரு தனி சுகந்தம் என்று
சொத்தை ‘க்ளீஷே’க்களைக் கவிதையாக்கி
தத்துப்பித்தென்று உளறி வதைக்கிறாரெ’ன
சக கவியைக் கிழிகிழித்து
சத்தான திறனாய்வைப் பகிர்ந்த கையோடு
‘முத்தான முத்தல்லவோ, என் முதுகுவலி
உலகின் குத்தமல்லவோ’ என
கத்துங்கடலாய்க் கண்கலங்கிப்
பித்தாய் பிறைசூடிப் பிரபஞ்சக் கவிதையாக்கி
மொத்தமாய் மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்
வெத்துக்காகிதத்தை!

Tuesday, January 21, 2025

MODERN TAMIL POETRY - A MINIATURE CANVAS VOL.1 & VOL.2

 வாங்குவீர் இன்றே!


MODERN TAMIL POETRY -
A MINIATURE CANVAS
VOL.1 & VOL.2

(* ஒவ்வொரு தொகுப்பிலும் 150க்கும் மேற்பட்ட சமகாலத் தமிழ்க்கவிஞர்களின் ஆளுக்கு ஒரு கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது. ஃபேஸ் புக் இல் நட்புவட்டத்தில் உள்ள கவிஞர்களுடைய கவிதைகள் அவ்வப்போது மொழிபெயர்க்கப்பட்டு பதிவேற்றப்பட்டுவருகின்றன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை ...


MODERN TAMIL POETRY - A MINIATURE CANVAS - VOL.1
150+ சம காலத் தமிழ்க்கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பு.

மொழிபெயர்ப்பாளர் திருஎஸ்.என்.ஸ்ரீவத்ஸா

MODERN TAMIL POETRY - A MINIATURE CANVAS - VOL.11
150+ சம காலத் தமிழ்க்கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பு.

மொழிபெயர்ப்பாளர்
லதா ராமகிருஷ்ணன்

பிரதிகள் வாங்க தொடர்புகொள்ளவும்:

திரு.ராஜா
கலைஞன் பதிப்பகம் - தொலைபேசி எண் 97104 22798
GPAY எண்
தொடர்புக்கு ஜிபே எண்:97104 22798
.......................................................................................................................................
நட்பினருக்கு வணக்கம்,

தனியொரு கவிஞரின் கவிதைகளை தொகுப்பாகக் கொண்டுவரு வதற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைகளை (ஆளுக்கு ஒன்று என்ற அளவில்) தொகுப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு.
தனியொரு கவிஞரெனில் அவருக்கு பத்திருபது அன்பளிப்புப் பிரதிகள் கொடுத்தால் போதும். ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் இடம்பெறும் தொகுப்பு என்றால் ஆளுக்கு ஒரு அன்பளிப்புப் பிரதி தந்தால்கூட நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை பதிப்பகம் அன்பளிப்பாகத் தரவேண்டியிருக்கும்.
இந்தக் காரணத்தாலேயே சமகால கவிதைப்போக்குக ளைப் புலப்படுத்தும் தொகுப்புகள் அதிகம் வருவதில்லை எனலாம்.
இத்தகைய தொகுப்புகள் வெளியாவதை ஊக்குவிக்க நாம் செய்யவேண்டியது. இத்தகைய பிரதிகளை வாங்குவது.
சமீபத்தில் கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ள MODERN TAMIL POETRY - A MINIATURE CANVAS VOL 1 & VOL.2 இரண்டு தொகுப்புகளில் ஒன்றில் இடம்பெற்றி ருக்கும் கவிஞர்கள் மற்ற தொகுப்பை விலை கொடுத்து வாங்கி இந்த முயற்சியை ஊக்குவிக்கலாம். அல்லது முடிந்தவர்கள் இரண்டு தொகுப்புகளையுமே விலை கொடுத்து வாங்கலாம். யாருக்கேனும் அன்பளிப்பாகத் தரலாம். ஏதேனும் நூலகத்திற்கு அன்பளிப்பாகத் தரலாம்.
இந்த இரண்டு தொகுப்புகளிலுமாக 300க்கும் மேற்பட்ட சமகால தமிழ்க்கவிஞர்களின் கவிதை மொழிபெயர்ப்பு கள் வெளியாகியுள்ளன.
இந்த மூலகவிதைகள் இடம் பெறும் தொகுதியை ஒரே தொகுப்பாக வெளியிட் டால் கவிஞர்களின் விவரக் குறிப்புகளோடு தொகுப்பு 400 பக்கங்களுக்கு மேல் போகும்.
இந்த எண்ணம் ஈடேற நாம் தற்போது வெளியாகியிருக் கும் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்புகளுக்கு ஆதர வளிக்கவேண்டியது அவசியம்.
முடிந்தவர்கள் முன்வரும்படி வேண்டிக்கொள்கிறேன்

வலியின் கையறுநிலை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வலியின் கையறுநிலை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அரிக்கும் இடத்திலுள்ள கூந்தலை ஒரு கையால் கொத்தாய்ப் பிடித்து
மறுகை விரலால் நெருடி வழுக்கியோடும் பேனைத் தடுத்து நிறுத்தி
மயிரிழைகளோடு சேர்த்து இழுத்து
அதைக் கைக்கட்டைவிரல் நகத்தின்மீது வைத்து
மறுகைக் கட்டைவிரல் நகத்தால் சொடுக்கும் நேரம்
அந்த இக்கிணியூண்டு உடலிலிருந்து உயிர்பிரியும் சப்தம்
துல்லியமாய்க் கேட்கும்.

ஒரு கையறு நிலையில் மனம் அதிரும்;
கடவுளுக்கு சாபமிடும்.
பேன்கள் மண்டிய தலையோடு வாழ முடிந்தால் நன்றாயிருக்குமோ என்று பேதலிக்கும்.

சொடுக்காமல் ஜன்னலுக்கு வெளியே வீசியெறியும் நேரம்
எலும்புமுறிவு ஏற்பட்டுவிடுமோ அதற்கு
என்ற கேள்வி தவறாமல் கலங்கவைக்கும்.

எல்லாநேரமும் இந்தப் பிரக்ஞை விழித்துக்கிடக்கும்
என்று சொல்லமுடியாவிட்டாலும்
‘நல்லா வேணும் பேனுக்கு’ என்று நினைக்க ஒருபோதும்முடிந்ததில்லை;

அந்த நுண்ணுயிர் என் கையால் கொலையாகவே
பிறவியெடுக்கிறது
என்று பெருமைப்பட்டுக்கொள்ள
ஒருபோதும் முடிந்ததில்லை;

அதற்கு வலியிருக்க வழியில்லை என்று
அறுதியிட்டுப் பறைசாற்ற
ஒருபோதும்முடிந்ததில்லை.

பேனைச் சொடுக்குவது எனக்குக் கைவந்த கலை
என்று பெருமைபீற்றிக்கொள்ள
ஒருபோதும் முடிந்ததில்லை.

பேனைப் பிடித்துவிடுவதில்தான்
என் ஆனமானம் அடங்கியிருக்கிறது என்று நம்ப ஒருபோதும்முடிந்ததில்லை.

நான் வளர்க்கிறேன் பேனை,
எனவே நான் அதைக் கொல்ல
உரிமைபெற்றிருக்கிறேன் என்று உரைநிகழ்த்த
ஒருபோதும் முடிந்ததில்லை.

உதிர்ந்துகொண்டேபோகும் தலைமயிரென்றாலும்
அது பெரும் காடு பேனுக்கு. அதன் பிறப்பிடம்; வளருமிடம்.
அங்கிருந்து அதை விரட்டவேண்டிய கட்டாயத்திற்காளாவதில்
எப்படிக் களிப்பெய்த முடியும்?

கண்காணவியலா அந்த நுண்ணுயிரின் கண்களில்
மண்டிய அச்சம் மனதில் பாரமாகுமேயல்லாமல் வீரமாகாது என்று சொன்னால்
விதவிதமான வழிகளில் விரோதியாகிவிடுவேன் - தெரியும்;

கருத்துச்சுதந்திரத்திற்கும் இங்கே வன்முறையார்ந்த
முள்வேலிகள் உண்டு;
கருத்துரிமைக் காவலர்களாகத் தம்மைத்தாம் முன்னிறுத்துவோர் கட்டியெழுப்புவது.

பேனோ மானோ மனிதனோ, சகவுயிர்களிடம் கருணை
வேண்டும் என்று சொன்னால் கவிஞர்களேனும் வழிமொழிவார்கள் என்ற நம்பிக்கை
வெறுங்கனாவாகிப் போவதில்
கலங்கும் மனம்.

நம்பிக்கை பொய்ப்பதும் பகையாவதுமேதான்
நட்பினராவதன் முழுமை போலும்.