LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, March 19, 2023

தன்மதிப்பு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 தன்மதிப்பு

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)




பென்னம்பெரிய வெறுப்புகள் உண்டு. என்றாலும்

அவளுக்கிருப்பதெல்லாம் சின்னதொரு விருப்பம் மட்டுமே.


கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதாகச் சொல்லமுடியா விட் டாலும்

கால்களை சற்று எட்டிப்போட்டாலே கொஞ்ச நாட்களில்

சென்றுசேர்ந்துவிடக்கூடிய

அந்த அதி சிங்கார நகரில் அரண்மனை உப்பரிகையில்

சிம்மாசனத்தில்

தலையில் பொருந்தியிருக்கும் கிரீடம் பார்வையை

மறைக்காமலிருக்கும்படியாக

அரசன் அமர்ந்து கண்களால் நகர்வலம் வந்து

கொண்டிருக்கும் நேரம்

அதேவழியாய் அவள் வீதியுலா வரவேண்டும்.


அந்தச் சக்கரவர்த்தியின் கண்களில் ஏதோவொரு அகாலத்தில்

வனாந்திரத்தில் ஏற்பட்ட பரிச்சயத்தின் நினைவு விரிக்கும்

இணைமனிதபாவம் பயம் பிரமிப்பு பரவசம்

பதற்றம் பழகிய ஈரம் எல்லாவற்றையும்

அந்நியமாய்ப் பார்த்தபடியே

பார்வையை சாம்ராஜ்யபதியின் தலைக்குமேலாய்

விட்டுவிடுதலையாகிப் பறந்துகொண்டிருக்குமொரு

சிட்டுக்குருவிக்காய்உயர்த்தவேண்டும்.


அதன் சிறகடிப்பைக் பார்த்தபடியே

எங்கேயும் தடுக்கிவிழுந்துவிடாமல்

அந்த மாமன்னனுடைய முகத்தின்

சுக்குநூறான துண்டங்களை

முதுகின் கண்களால் கண்டுரசித்தபடி

அந்த வழியைக் கடந்தேகிவிடவேண்டும்.

கட்டிடக்கலை வரலாறு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கட்டிடக்கலை வரலாறு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(*15 மார்ச், 2023 அன்று பதிவுகள் இணைய இதழில் பிரசுரமான கவிதை)

கைவசமிருக்கும் கற்களையும் மணலையும் சிமெண்ட்டையும் ஜல்லியையும் தண்ணீரையும் கலந்து கட்டிக்கொண்டிருக்கிறாய்…
இந்தக் கற்களும் மணலும் சிமெண்ட்டும் ஜல்லியும் தண்ணீரும் தரமானவையா போதுமானவையா
என்று சரிபார்க்க உனக்கு நேரமில்லை மனமுமில்லை.
தினசரிச் சந்தையில் சுலபமாய் மலிவு விலைக்கு வாங்கவும்
விற்கவும் முடிகிறது.
அப்படிக் கட்டப்படுவதைக் கண்காட்சியாகப் பார்த்து மகிழ
அன்றாடம் சாரிசாரியாக ஆட்கள் வருகிறார்கள் எனும்போது
அதற்கான அல்லது அதைக்கொண்டு அருங்காட்சியகமும் பல்பொருள் அங்காடியும் அமைக்கப்படுவதுதானே புத்திசாலித்தனம்.
தரமற்ற அளவில் நிர்மாணிக்கப்படுமொரு கட்டிடம் இடிந்துவிழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதனால் நேரும் இழப்புகளும் அதிகம்.
ஒப்புநோக்க வார்த்தைகளால் கட்டப்படுவனவற்றுக்கு
அத்தகைய அபாயங்கள் குறைவு.
எத்தனை பலவீனமாகக் கட்டப்பட்டிருந்தாலும்
உறுதியானது என்று மற்றவர்களை நம்பவைக்கும் உத்திகளை
நேர்த்தியாகக் கையாளத் தெரிந்தால் போதும்.
காலத்துக்கும் அது உறுதியாக நிற்கும்.
அவ்விதமாய் கட்டப்படுவதன் அடி முடி காணா தலைமுறையினர்
அவற்றில் வாசம் செய்தபடி
அவற்றுக்கு வாடகை செலுத்தியபடி
அவற்றினூடாய் வாழ்ந்தேகியபடி
அவர் மீது இவரும் இவர் மீது அவரும் வெறுப்புமிழ்ந்தபடி….
அவர்களைக் காட்சிப்பொருளாக்கியபடி கட்டிடவியாபாரத்தில்
கொள்ளை லாபம் ஈட்டிக்கொண்டிருப்பவர்களை
கனவான்களாக காருண்யவாதிகளாக காண்பதும்
காட்டுவதுமாய்
ஊட்டிவளர்க்கபட்டுக்கொண்டிருக்கும்
கட்டிடக்கலை வரலாறு.

'அன்பே உருவாதலு'க்கான அதி எளிய வழி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 'அன்பே உருவாதலு'க்கான

அதி எளிய வழி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
(* 15 மார்ச், 2023 தேதியிட்ட பதிவுகள் இணைய இதழில் இடம்பெற்றுள்ளது)
யார் என்ன எழுதினாலும் அநாயாசமாக ‘லைக்’கிட்டுத் தள்ளிக்கொண்டிருந்த கை ஒருநாள் சுளுக்கிக்கொண்டுவிட்டது.
அமிர்தாஞ்ஜன், டைகர் பாம், பிண்ட தைலம்
எதுவும் உதவிக்கு வரவில்லை.
அந்தக் கைக்குரியவருக்கு
அழுகையழுகையாய் வந்தது
ஆரேனும் தன்னை அன்பிலாக் காட்டான்,
சகமனிதவிரோதி,
மன்னிக்கத் தெரியாத மிருகம்,
அ- புரட்சியாளர்,
அசிங்கம்பிடித்த விருப்புவெறுப்புவாதி,
அநியாய சார்பாளர்,
அனுதினம் பாரபட்சம் பழகுபவர்
இன்னும் என்னென்னவோ எண்ணிவிடுவார்களே
இவருமவரும்
தெரிந்தவர்களும் தெரியாதவர்களும்
இருப்போரும் இல்லாதாரும்
கல்லாரும் கற்றாரும்
உள்ள விருப்புவெறுப்புக்கேற்ப
உற்றார் உறவினர் நட்பினர் விரோதிகள்
எல்லோரும் ….
என்ற கவலையில்
விறுவிறுவெனத் தலைசுற்றியது அவருக்கு.
மாற்றுக்கருத்திருந்தாலும் மறைத்து ’லைக்’ இட மறவாமலிருப்பதே
மகோன்னத மனிதப் பண்பு!
இடதுகையால் எழுதும் பழக்கத்தைக் கற்றுத்தராத
பள்ளிமீதும் கல்லூரி மீதும்
கடகடவென்று வசையை அள்ளியிறைக்கத்
தொடங்கிய மனதை
பிரயத்தனத்தோடு அடக்கிக்கொண்டார்.
அவருடைய ’லைக்’கிற்கு அப்பாலாகக்கூடாது அவையும்.
இத்தனை கரைபுரண்டோடும் அன்புநிறை
பத்தரைமாற்றுத்தங்க வித்தகரின்
இன்றைய லைக்குகளுக்காகக் காத்துக்கொண்டிருக்காமல்
தன்பாட்டில் இயங்கிக்கொண்டிருக்கிறது
ஃபேஸ்புக்
என்பதே அன்னாரின் இன்னாளுக்கான
ஆகப்பெரும் துக்கமாக……..

மகளிர் தின சிறப்புமலர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மகளிர் தின சிறப்புமலர்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

முதல் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்து (பெண் அமைச்சர் கள், பெண் விமான ஓட்டிகள், பெண் ஆட்டோ ஓட்டிகள், மாணவிகள் – ஆரம்பப்பள்ளி முதல் பொறியியல் கல்லூரி வரை முகம் மலரச் சிரித்தபடி நின்றுகொண் டிருந்தார்கள்).

இரண்டாம் பக்கத்தில் முக்கால் மார்பு தெரியும்படி யான ஒரு நடிகையின் படம் (அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருக் கும் Peeping Tom கிசுகிசுக்களுக்கும் இந்தப் படத்திற்கும் எந்தவொரு சம்பந்தமு மில்லை. அதனாலென்ன?).

மூன்றாம் பக்கத்தில் மூக்குத்தியம்மன் (அவளுக் கான படை யல், பாடல், செய்யவேண்டிய நேர்த்திக்கடன், அவளுக்கு எங்கெல்லாம் கோயில்கள் இருக்கின்றன என்ற விவரங்க ளோடு).

நான்காம் பக்கத்தில் கபடி விளையாடும் பள்ளி மாணவி களின் படமும் பாராட்டும் (பாவம், வெயி லும் புழுதியும் மண்டிக்கிடக்கும் மைதானத்தில் ஏன் அந்த நிகழ்வை வைத்தார்களோ – பார்க்க வருத்தமாயிருக்கிறது).

ஐந்தாம் பக்கத்தில் மனோரஞ்ஜிதப்பூவை காதலி யோடு ஒப்பிட்டு ஒரு காதலன் எழுதும் கவிதை.(நேற்று – இன்று – நாளைக்கானது; காலத்திற்கு மான அரதப்பழசுக் கவிதை).

ஆறாம் பக்கத்தில் ஒரே சமயத்தில் ஒருவனின் நல்ல மனைவியும் இன்னொருவனின் கள்ளக் காதலியுமான பெண்ணின் கணவன் தூங்கும் போது கடப்பாரையால் அவன் மண்டையில் ஓங்கியடித்துக் கொலைசெய்த செய்தியின் விரிவாக்கம். (பின் எப்படி கணவன் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினரிடம் சொன்னாள் என்ற உங்கள் கேள்வி தர்க்கபூர்வமா னதே. தெரிந்துகொள்ள நாற்பத்தியெட்டாவது பக்கத்திற்குச் செல்லவும்).

ஏழாம் பக்கத்தில் ஒரு கையின் ஐந்து விரல்க ளால் ஒரே சமயத்தில் ஐந்துகோலங்கள் போடும் சாதனைப்பெண் ணின் கதை.( இது எப்படி சாத்தி யம் என்று கேள்விகேட்ப வர்கள் பெண்ணின விரோதிகளாகக் கொள்ளப்படுவார்கள்).

எட்டாம் பக்கத்தில் தன்னுடைய குடிசையின் வாசலோர மாய் வடை பஜ்ஜி சுட்டு விற்றுக் கொண்டிருக்கும் மூதாட்டி (பிறந்ததிலிருந்தே ஏழையாக இருக்கிறாரே – இது ஏன் என்று யாரும் கேள்வி கேட்டுவிடலாகாது – அவருடைய அயரா உழைப்பைப் பாராட்டி கைதட்டி னாலே போதுமா னது).

ஒன்பதாவது பக்கத்தில் ஒரு பெண் இந்தக் கையால் விமானமோட்டி அந்தக் கையால் விளம்பரத்திற்கான சோப்பை எடுத்துத் தோளில் தேய்த்துக்கொள்ள ஆரம் பிக்கிறார். (ஏன் விளம் பரங்களில் வரும் பெண்கள் எல்லோருமே உள்ளங்கைகளில் சோப்பைக் குழைக்கா மல் நேரடியாக ஆடையற்ற தோள்களில் மயக்கும் பார்வையோடு தேய்க்கத் தொடங்குகிறார்கள்?)

பத்தாவது பக்கத்தில் ’பெண் நுகர்பொருளல்ல’ என்று கட்டுரையின் ஆரம்பத்தில் ஆவேசமாகக் கைகளை உயர்த்தியபடிக் கூவும் பெண்ணைக் காட்டித் தன் ஆபரணங்களை வாங்கச்சொல்லிக் கொண்டிருந்தது நகைக்கடை விளம்பரம்.

பதினைந்தாம் பக்கத்தில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதல் பரிசு வென்ற பெண் கையி லுள்ள ஆயுதத்தால் வாசகர்களில் யாரையோ குறிபார்த்துக்கொண்டிருந்தாள்.

பதினெட்டாம் பக்கத்தில் எட்டாம் வகுப்பு மாணவி யொருத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டத்தை அத்தனை ரசித்து ருசித்து அக்குவேறு ஆணிவேறாக அலசிக்கொண்டிருந் தார் கட்டுரையாளர்.

இருபதாம் பக்கம்..... முப்பதாவது பக்கம்...... ஐம்பத்தியெட்டாவது பக்கம்....எண்பதாவது பக்கம்……

நூறாவது பக்கத்தில் மீண்டுமொரு மகளிர் தின வாழ்த்து. இம்முறை அந்தப் பத்திரிகையில் பணிசெய்யும் பெண்கள் – முகம் மலரச் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தார்கள்)

ஒரே பாதை வெவ்வேறு கால்கள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்

 ஒரே பாதை வெவ்வேறு கால்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(*15 மார்ச், 2023 பதிவுகள் இணையட் இதழில் பிரசுரமான கவிதை)
அவரவர் பயணங்களுக்காகப் பாதையின் நீள அகலங்களும்
இருமருங்கிலுமான மரங்களும் மைல்கற்களும்
தெருவோரக் கடைகளும் திருப்பங்களும்
மறுசீரமைக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.
அவர் நடக்கும்போது அந்தச் சாலையோரங்களிலிருந்த
அருநிழற் தருக்கள்
அடுத்தவர் நடக்கும்போது மாயமாய் மறைந்துபோய்விடுகின்றன.
அதற்கு பதில்
அங்கே கூர்முனைக் கற்கள் இறைந்துகிடக்கின்றன.
அவர் நடக்கும்போதெல்லாம் அங்கே நாள்தவறாமல் இளநீர் வெட்டிக்கொண்டிருக்கும் வியாபாரி
அடுத்தவர் அவ்வழியே செல்லும்போது
வெடிகுண்டு வண்டியில் கூவிக்கொண்டே செல்கிறார்.
அவர் நடக்கும்போது வீசும் தென்றல்
அடுத்தவர் நடக்கும்போது சூறாவளியாகிவிடுகிறது.
அவர் நடக்கும்போது ஆயிரத்தெட்டு யோசனைகளோடு சென்றாலும்
வழுக்கிவிட அங்கேயிருக்காத சாணிமொந்தையும் போட்டுடைத்த பூசணிக்காயும்
நாறும் சாம்பார்ப் பொட்டலமும் செத்த எலியும்
குழியும் குண்டும் வழியெலாம் உருண்டோடும் கோலிகுண்டுகளும்
யாவும் அடுத்தவர் செல்லும்நேரம்
அங்கே ஆஜராகிவிடுகின்றன.
அப்படியுமிப்படியும் ஆடித் தள்ளாடித் தத்தளிக்கும் ஒருவரை
யடுத்தவர் தம்பிடி பெறாதவர் என்று எக்களிப்பதும்
வம்படியாய்ப் பிடித்திழுத்துத் தள்ளிவிடுவதும்
சாலைவிதிகளிலேயே மீறப்படாமல் மிக கவனமாய்ப்
பேணப்படுவதாகிறது.
அடிக்கடி விபத்துகள் நேரும் அந்த அபாயகரமான வளைவு
மட்டும் இருந்தவிடத்திலேயே இருந்துவிடுமா என்ன….

அவரவர் வேலை அவரவருக்கு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் வேலை அவரவருக்கு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


மீறல் என்பது மட்டுமே மந்திரச்சொல்லாக இருந்தது.
மீறல்களில் சின்ன மீறல் பெரிய மீறல்
தேவையான மீறல் தேவையற்ற மீறல்
அர்த்தம் மிக்க மீறல் ஆக்கங்கெட்ட மீறல்
இயல்பான மீறல் தருவிக்கப்பட்ட மீறல்
உள்ளார்ந்த மீறல் உருவேற்றப்பட்ட மீறல்
இன்னும் எத்தனையோ உண்டென்றறியாமல்
வெறுமே அந்த மந்திரச்சொல்லை உச்சாடனம் செய்தாலே
அற்புத விளக்கு ஒன்றல்ல ஆயிரம் கைவசமாகும்
என்று அரைகுறையாய் சொல்லித் தந்தவர்கள் தருகிறவர்களுக்கு
அதன்படி செயல்பட்டு அந்த இருட்குகைக்குள்
அகப்பட்டு
புதையலேதும் கிடைக்காமல் வதைபடும்
அப்பிராணி சீடர்களுக்கு
அடைக்கலமளிக்க அவகாசமிருப்பதேயில்லை.

காலாவதியாகாக் கவி பிரம்மராஜன்!

காலாவதியாகாக் கவி பிரம்மராஜன்!

 





 



 [சில மாதங்களுக்கு முன்பு கவி பிரம்மராஜனைக் காலாவதியாகி விட்ட கவிஞர் என்று சக கவிஞர் ஒருவர் எழுதியிருந்ததைப் படிக்க நேர்ந்தது.  ஒரு கவிஞரின் கவிதைகள் பிரசுரமாகாததாலேயே அவர் கவிதை எழுதவில்லை என்று கூறிவிடலாமா? அவர் கவிதைகள் எழுதிக்கொண் டிருக்கலாம். பிரசுரத்திற்கு அனுப்பாமலிருக்கலாம்.  ஒரு கவிஞர் இப்போது கவிதை எழுதுவதில்லை என்பதாலேயே அவர் காலாவதி யாகிவிட்ட கவிஞர் என்று சொல்வது எத்தனை அபத்தம். தமிழ்க் கவிதை வெளியில் கவிஞர் பிரம்மராஜனுக்கு ஒரு தனியிடம் என்றும் உண்டு. அவருடைய கவிதைகளில் சில இங்கே தரப்பட்டுள் ளன]



































































 

 

 

நிலாமயம்! - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 நிலாமயம்!

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

(*12 மார்ச் 2023 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ள கவிதை)


சிலருடைய கவிதைகளில் நிலவு கறைபடிந்ததாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு களங்கமற்றதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு சந்திரனாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு அம்புலிமாமாவாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு கொஞ்சிக்குலவும் காதலியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு அஞ்சிப் பதுங்கும் குழந்தையாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு உலவிக்கொண்டி ருப்பதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மிதந்துகொண்டி ருப்பதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மேகத்தைத்
தழுவு வதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மேகத்தைக் கண்டு நழுவியோடுவதாய்.
சிலருடைய கவிதைகளில் நிலவு உருண்டோடும் பந்தாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு உடையும் நீர்க்குமிழியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு
இரவின் குறியீடாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு
கனவின் அறிகுறியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு நாடோடியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு காத்தாடியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு காலமாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு அகாலமாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மரணமாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மறுபிறப்பாய்
நிஜத்தில் நீ யார் எனக் கேட்டால்
புவியின் ஒரே துணைக்கோள் அறிவியலின்படி
என்று குறுநகையோடொரு விடைகிடைக்கக்கூடும்….
எனில் நிலா முயல் வேண்டுமா வேண்டாமா என்று
நாம்தானே முடிவுசெய்யவேண்டும்!

தாமரையிலைத்தண்ணீர்ப்பற்று - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 தாமரையிலைத்தண்ணீர்ப்பற்று

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

(12 மார்ச் 223 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)

தாமரையிலைத் தண்ணீரை தூலமாக நேரில் பார்த்திருக்கிறேனா, தெரியவில்லை….

அப்படிப் பார்த்தால்
தாகூரைப் பார்த்ததில்லை,
ஷேக்ஸ்பியரைப் பார்த்ததில்லை
லதா மங்கேஷ்கரைப் பார்த்ததில்லை,
மம்முட்டியைப் பார்த்ததில்லை,
இமயமலையைப் பார்த்ததில்லை.
இக்குனூண்டு முளைவிதையைப்
பார்த்ததில்லை
பார்த்தல் என்பதன் நேரில் என்பதன்
அர்த்தார்த்தங்களில்
பார்த்திராதவையே அதிகம் பார்க்கப்பட்டதாய்…..
நான் பார்த்திராத தாமரையிலைத்
தண்ணீர்த்துளிகள்
இருக்குமிடமெங்கும் உருண்டோடியவாறே…
உணர்ந்தும் உணராமலுமா யதன் ஈரம் _
காய சி்றிது நேரமாகும்.
சில நாட்கள் அலைபேசியில் 6 மணிக்கு அலாரம் வைத்து எழுந்துவிட்டால், பின்
அந்த அலாரம் எப்படியோ ஆழ்மனதில்
அடிக்க ஆரம்பித்துவிடுவது போலவே _
பழகிவிட்ட தாமரையிலைத்தண்ணீர்
வாழ்வில்
இலை நீர்த் துளிகள் மேல்
நிலைகொள் மனது _
பற்றுடைத்து என் றொரு சொல்லின்
இருபொருளுணர்த்தி.