LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, September 2, 2018

காட்சி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


காட்சி

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



வீதியெங்கும் கண்ணன் விளையாடிக்கொண்டிருந்தான்.

மரவண்ண ப்ளாஸ்டிக் தொட்டிலில் அமர்ந்தபடி அவனளவு இருந்த ஒரு பானைக்குள் கையைவிட்டு வெண்ணெயை எடுத்துக்கொண்டிருந்தான்.

பொம்மையென்றாலுங்கூட அருகில் சென்று அந்தக் குட்டிவாயைத் திறந்து
அகில உருண்டையைக் காணவேண்டுமாய் எழுந்த ஆவலைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

மயிற்பீலி சூடிக்கொண்டு புல்லாங்குழல் இசைத்துக்கொண்டிருந்தான்.
மௌனமாய் அதிலிருந்து பெருகிய இசையை உள்வாங்கியவாறு நகர்ந்தபோது
எதிர்ப்பட்ட பெண்களெல்லாம் ராதைகளாகத் தென்பட்டார்கள்.

அவர்களிடையே நானும் கோலாட்டமாட
அழுகையா உவகையா என்று பிரித்துணரவியலா
அனர்த்தம் வாழ்வென்ற ஞானம் அரைக்கணம் கைகூடியது.

அங்கே விற்கப்பட்டுக்கொண்டிருந்த மயிற்தோகையை விலைகேட்டேன்.
மயிற்பீலியின் தனித்தனி இழைகள் நிஜமோ நெகிழியாலானதோ….

ஒவ்வொரு தனியிழையும் ஒரு மயிலைக் கூட்டிவந்து
என் சின்னவீட்டின் பின்கட்டிலொரு நந்தவனம் கட்டி யதில் எத்தனையெத்தனையோ
மயில்களை தோகைவிரித்தாடச் செய்யும்போது
தெருவின் இந்த முனையில் ஒற்றைப் பீலியிழை இருபது ரூபாய்க்கும்
அந்த முனையில் பத்துரூபாய்க்கும் விற்கப்படுவதை யறிந்தும்
பேரம் பேச எப்படி மனம் வரும்?

பீலிவிற்கும் பெண்ணொருத்தி தோளில் சுமையோடு
தன் சிறுபிள்ளையைத் தரதரவென்று இழுத்துச்சென்றுகொண்டிருந்தாள்.

அவள் காலில் செருப்பிருந்தது;
பையன் வெறுங்காலில்.

குட்டிக் கிருஷ்ணன் காலை வெயிலின் வெந்தனல் சுட்டுப்பொசுக்குமா?
பொசுக்கத்தான் விடலாமா?

கையிலிருந்த காசில் குத்துமதிப்பான அளவுகளில் இரண்டு ஜோடி செருப்புகள் வாங்கிக்கொண்டு
திரும்பினால் _

கண்ணனைக் காணவில்லை.

எத்தனை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

என்னோடு எடுத்துக்கொண்டுவந்துவிட்ட காலணிகளை
மாட்டிக்கொள்ள
ஊரெங்குமுண்டு நீலவண்ணக்கண்ணன்கள்.

என்னிடமிருப்பதோ நான்கு செருப்புகள் மட்டுமே.





Saturday, September 1, 2018

கணக்கு ’ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்)

கணக்கு

’ரிஷி’ 
(லதா ராமகிருஷ்ணன்)

என்னை ஏமாற்றுவதும் 
உன்னை ஏமாற்றுவதும்
தன்னை ஏமாற்றுவதுமாய்
பொழுது போய்க்கொண்டிருக்கிறது
ஒருசிலருக்கு அல்லது சிலபலருக்கு.

நான்கும் ஒன்றும்? ஐந்து
மூன்றும் இரண்டும்? ஐந்து
10
இலிருந்து 5ஐக் கழிக்க ? ஐந்து
50
இலிருந்து 45ஐக் கழிக்க ? ஐந்து
ஐந்தை ஒன்றால் பெருக்க ? ஐந்து
ஐம்பதைப் பத்தால் வகுக்க ? ஐந்து

ஒரு விடைக்கேற்ப பல கேள்விகளை
உருவாக்கியும்
வரும் பதில் ஒன்றேயாகும்படி
உருவேற்றியும்
குழந்தையைக் கணிதமேதையாக்கும்
பெற்றோரும் உண்டு;
மற்றோரும் உண்டு.

முட்டாளாக மறுப்பவர்களும்
கட்டாயம் இருப்பார்கள்.

Ø  


ஒருசிலர் – சிலபலர் – படைப்பாளிகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

ஒருசிலர்சிலபலர்படைப்பாளிகள்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


படைப்பாளிகளே போட்டது போட்டபடி ஓடிவாருங்கள்
நீங்கள் படைப்பாளி தானா என்று உரசிப் பார்க்க
(
தேவைப்பட்டால் முலாம் பூச, பட்டை தீட்ட)
புறப்பட்டிருக்கிறார்கள் ஒருசிலர் அல்லது சிலபலர்.
.


நீங்கள் படைப்பாளியாக அறியப்பட
பெரிதாக ஒன்றும் செய்யவேண்டியதில்லை
அந்த ஒரு சிலர் அல்லது சிலபலர்
கைதட்டச் சொன்னால் கைதட்டவேண்டும்;
குட்டிக்கரணம் போடச் சொன்னால்
எட்டுமுறை செய்துகாண்பிக்கவேண்டும்.
மொட்டைத்தலையைச் சுட்டிக் காட்டி
முடி எத்தனை நீளம் என்றால்
அடடா ஆமாமாம் என்று அடித்துச்சொல்லவேண்டும்;
அப்படியில்லை என்று அழிச்சாட்டியம் செய்யக்கூடாது.


பத்திருபது புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்களா?
பசி வயிற்றைத் தின்றபோதும்
நல்ல கவிதையை ரசித்துப் பாராட்டியிருக்கிறீர்களா
அதெல்லாம் யாருக்கு வேண்டும்?
அந்த ஒருசிலர் அல்லது சிலபலர் சொல்வதை
அப்படியே வழிமொழிந்தா லொழிய
நீங்கள் எப்படி படைப்பாளியாகப் புழங்க முடியும்?


யார் என்ன எழுதுகிறார்களென்றே தெரியாத
ஒருசிலர் அல்லது சிலபலர்
பேர்பேராய் படைப்பாளியைப் பழித்துக்கொண்டிருக்கிறார்கள்
அதைசெல்ஃபியெடுத்துக் காட்டிக்காட்டியே
தம் அரைவேக்காட்டுப் படைப்பை அமரத்துவம் வாய்ந்ததாகப்
ஃபிலிம்போட்டுக் கொண்டிருப்போர் இருக்க
அவர்கள் மத்தியில் உங்களுக்கென்றிருக்கும்
சொந்தக் கருத்தைச் சொன்னால்
என்னாகுமென்றுகூட தெரியாததத்திகளா நீங்கள்?


திக்கெட்டும் நீங்கள் படைப்பாளியாக அறியப்பட
ஆமாம்சாமியாகத் தலையை
சரியான இடத்தில் சரியான நேரத்தில்
சரிசரியான அசைவுகளில்
இப்படியுமப்படியும் ஆட்டத்தெரியவேண்டும்.


மாட்டேனென்றால் பின் உங்களை
ஊர் சொல்லி பேர் சொல்லி
சாதி சொல்லி மீதி சொல்லி
பேதுறச்செய்வதொன்றும் பெரிய விஷயமில்லை
யந்த ஒருசிலருக்கு அல்லது சிலபலருக்கு.


ஏதும் சொல்லாமல் மௌனமாயிருந்தால்
நாதாரி கோழை, நபும்சகர் நச்சுப்புதர் என்பார்கள்;
வாயைத் திறந்து எதிர்க்கருத்துரைத்தாலோ
நாயென்பார் பேயென்பார்பேசுவதோடு நிற்கமாட்டார்.


எழுதுவதாலெல்லாம் நீங்கள் படைப்பாளியாகிவிடமுடியாது
அந்த ஒருசிலர் அல்லது சிலபலர் அங்கீகரிக்கவேண்டும்.
அந்த ஒருசிலர் அல்லது சிலபலரின் அங்கீகாரத்தைப் பெற
மண்டியிட்டுத் தெண்டனிடவேண்டும் அவர்கள் முன்;


அந்த ஒருசிலர் அல்லது சிலபலரின் அபத்தக் கருத்துகளுக்கும்
வாழ்க வாழ்கவும் போற்றி போற்றியும்
வந்துகொண்டேயிருக்கவேண்டும் உங்களிடமிருந்து.
இல்லை, கசையடிதான்; கழுவேற்றம்தான்.


அதிகாரம் என்பது அரசர்கையில் மட்டுமல்ல.
அரசதிகாரத்தில் இருப்பவர்களின் ஏகபோக உரிமையில்லை
தண்டனை தருவது.


கருத்துரிமையெல்லாம் ஒரு சிலருக்கு மட்டுமே என்பதை
இனியேனும் சரிவரப் புரிந்துகொண்டால் நல்லது.


Ø