LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, January 1, 2023

மனசாட்சி ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மனசாட்சி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவரிவரெல்லாம் வானளாவப் புகழ்ந்துகொண்டிருந்தபோது
இவருக்குத் தன்னைவிட அந்தப் பாராட்டுகளுக்கெல்லாம் அதிகத் தகுதியானவர் நினைவுக்கு வந்தார்.

அவர் அத்துவானக்காட்டில் பாடிக்கொண்டிருப்பவர்.

ஆனால் அவருக்கு சுருதி சுத்தம்
அநாயாசமாக வரும் கல்பனா சங்கீதம்.

அண்ணாந்திருக்கும் அவர் கண்களுக்குள்
ஆகாயக்கடல் அலையடிக்கும்……

அரங்கிலிருந்த இவருக்கு அந்த ஊரிலேயே
பெரிய பிரமுகர்
மாலையணிவித்து மரியாதை செய்வித்துப்
பொன்னாடை போர்த்தி மார்போடணைத்துப் புளகாங்கிதமடைந்து
வாராது போல வந்த மாமணியைத்
தோற்போமோ என்று
மனப்பாடம் செய்துவந்த வரிகளை மறக்காமல்
சரியாகச் சொன்னபோது
தொலைந்துவிட்ட மாமணிகள் இவர் நினைவில்
தவிர்க்கமுடியாமல் வந்துதொலைத்தனர்.

வலையிலகப்பட்ட மீன்களில் இதுவே
மிக அதிக நீளம் என்று
மனிதரை மீனாக்கி மகாப் பேச்சாளரொருவர்
இவர் சிரசில் மகுடம் சூடியபோது
இவருக்கு சமுத்திரத்தின் ஆழத்தில் இருக்கும்
அதி நீள மீன்கள் நினைவில் அலைமோதின.

’ஓய்வற்ற அலைகளைக் கொண்ட எழுத்துக்கடல்
இவர்’ என்றொருவர் முழங்க
அரங்கம் கரவொலிகளால் அதிர்ந்தபோது
நடுக்கடலின் நிச்சலனமாயிருப்பவரை இவரால்
நினைக்காதிருக்க முடியவில்லை.

நல்லதே நடக்கும்போதும் இது என்ன
இப்படி அல்லாடவைக்கிறது
என்று சின்னதாய் பின் மண்டையில் அடித்துக்கொண்டார்.

அருகே அமர்ந்திருந்தவர் திரும்பிப்பார்த்தபோது
ஒன்றுமில்லை சின்னப் பூச்சி கடித்துவிட்டது என்றார்

INSIGHT OCTOBER 2022 (A BILINGUAL BLOGSPOT FOR CONTEMPORARY TAMIL POETRY)

 

INSIGHT 

 OCTOBER 2022

(A BILINGUAL BLOGSPOT FOR CONTEMPORARY TAMIL POETRY)

2019insight.blogspot.com 

POETS IN THIS ISSUE

1.T.K.KALAPRIYA

2. RIYAS QURANA

3. RAMESH PREDAN

4. VEL KANNAN

5. SATHIYARAJ RAMAKRISHNAN

6. VELANAIYOOR THAS

7. THENMOZHI DAS

8. SUBRA VE.SUBRAMANIAN

9. JEYADEVAN

10. NESAMITRAN

11. IYYAPPA MADHAVAN

12. KANIAMUDHU AMUTHAMOZHI

13. MAANASEEGAN

14. VASANTHAN

15. MULUMATHY MURTHALA

16. ANDRILAN

17. KAYAL.S.

18. ANBIL PIRIYAN

19. NESAMIGHU RAJAKUMARAN

20. YAZHINI MUNUSAMY

21. SEENU RAMASAMY

22. ABDUL JAMEEL

23. MARIMUTHU SIVAKUMAR

24. MAFAZ

25. REVA PAKKANGAL

26. PALAIVANA LANTHER

 

எது கவிதை? - லதா ராமகிருஷ்ணன் (ஓர் எளிய எதிர்வினை)

  எது கவிதை? 

லதா ராமகிருஷ்ணன்

(ஓர் எளிய எதிர்வினை)

INSIGHT இருமொழி வலைப்பூவில் இப்போது பதிவேற்றப்பட்டுள்ள கவிதைகள் குறித்து கீழ்க்காணும் கருத்து ‘கமெண்ட்’ பகுதியில் இடம்பெற்றிருக்கிறது.

..............................................................................................................................
//நான் இதில் உள்ள கவிதைகளை (தமிழ்) படித்தேன். அவ்வள வாக ஈர்க்கவில்லை. ஒரு வகையான புகை மூட்டத்துக்குள் இவர்கள் இருப்பது போல் தெரிகிறது. இவர்கள் வெளிப்படுத் துவதாய் நினைக்கும் வாழ்க்கை எதார்த்தத்தில் இல்லை. இவர்களின் "தேடல்" குருட்டுப் பூனை ஒன்று இருட்டில் தேடும் "தேடல்?"போல் உள்ளது.//
........................................................................................................................................
பொதுவெளியில் எழுத்தாக்கங்கள் வந்துவிட்டால் பின் அவற் றைப் பற்றி கருத்துரைக்கும் உரிமை வாசகர்க ளுக்கு உண்டு. அதுபோலவே அதற்கு பதிலளிக்கும் உரிமையும் படைப்பாளிக ளுக்கு உண்டு என்று எண்ணு கிறேன். பதிலளிப்பதும் அளிக் காததும் அவரவர் விருப்பம்.

அந்தக் கவிதைகளைத் தேர்வு செய்தவள் என்ற அளவில் அதற்கான எதிர்வினையாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கிருப் பதாகத் தோன்றியது. சுருக்கமாக பதிலளித்திருக்கிறேன். அதை யும் இங்கே தந்திருக்கிறேன்:_
................................................................................................................................
//உங்களுக்கு என்னவகையான கவிதைகள் பிடிக்கு மென்று தெரியவில்லை. அவற்றைத் தேடி நீங்கள் படித்துக்கொள்ள லாம்.
’குருட்டுப்பூனை ஒன்று இருட்டில் தேடும் "தேடல்?’ என்று நீங் கள் எள்ளலாகக் கூறியிருந்தாலும் உண்மையில் அதுதானே வாழ்க்கையின் சாராம்சம்.

நேற்று ஒரு தெருநாயைப் பார்த்தேன். ஒற்றைக்கால் முழுவது மாக இல்லை. அதுவும் அங்கேயிங்கே எதையோ ஆர்வமாகத் தேடிக்கொண்டிருந்தது.

அதன் தேடலையும் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து தனதாக்கிக் கொள்வதே கவிமனம்.

இந்த வகைக் கவிதைகளைத்தான் படிக்க வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப் படுத்த முடியாது.

அதே போல் இந்தவகைக் கவிதைகளைத்தான் எழுத வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

கவிஞர்கள் எழுதுவதைத் தராசிலிட்டு நியாயத்தீர்ப்பு அளிப்ப வராக உங்களை நீங்களே பீடமேற்றிக் கொள்ள எந்த அவசிய முமில்லை என்றே நினைக்கிறேன்.

எண்ணிறந்த வாசகர்களில் நீங்களும் ஒருவர்.
அவ்வளவே.

கண்ணும் கருத்தும் கருப்புப்பூனையும்……. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கண்ணும் கருத்தும் கருப்புப்பூனையும்…….

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(* 1.1.2023 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)
ஒரு பூனையின் கண்களுடைய பார்வையை
பின் தொடர முடியாதவர்கள்
அது எலியை மட்டுமே தேடுகிறது என்று
துண்டு போட்டுத் தாண்டாத குறையாய்
திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாள் முழுவதும் அந்தப் பூனை எங்கெல்லாம் திரிந்தலைகிறது
எதற்காகச் சுற்றிச்சுற்றி வருகிறது என்று
எதுவுமே தெரிந்துகொள்ள முயலாதவர்கள்
அது யார் வீட்டிலோ பால்பாத்திரத்தை
உருட்டித்தள்ளி உறிஞ்சிக்குடிக்க
ஓடிக்கொண்டிருப்பதாக பதவுரை எழுதித்தள்ளுகிறார்கள்.

மூடிய என் வீட்டு வாசல் காலையில் திறக்கும்வரை வெளியே மோனத்தவமியற்றிக்கொண்டிருக்கும்
கருப்புப்பூனைக்கு black commando என்று செல்லப்பெயரிட்டிருந்தது அதற்குத் தெரியுமோ தெரியவில்லை.

வீட்டில் புகுந்து ரகளை செய்கிறது என்று குடியிருப்புவாசிகளில் ஒருவர் சொன்னபோது
அத்தனை பொறுமையாக வாசலுக்கு அப்பால் காத்திருந்து
’தாழ் திறவாய்’ என்று சன்னமாக மியாவ் இசைக்கும் அந்த அன்புப்பூனையையா களவாணியென்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.

அன்பும் மரியாதையும் செய்யாத அதிகாரவர்க்கத்தினருக்கு எதிராக பூனையும் கிளர்ந்தெழுந்து
புரட்சி செய்வது இயல்புதானே?

பரஸ்பர மரியாதையும் அபிமானமும்
பூனைக்கு மட்டும் பிடிக்காமலா போகும்?

உள்ளும் வெளியும்
ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கப்பால்
எல்லாப் பார்வைகளும் பார்க்கமுடியாதவையே.
மரத்தின் அடியில் நின்றுகொண்டு உச்சிக்கிளையை அண்ணாந்துபார்க்கும் பூனைப்பார்வையின் தொலைநோக்குக்கருவி
மனிதப்பார்வையின் விரிந்தகன்ற கண்களின் வலையகப்படாது.

அதோ அந்தக் குடிசையில் வாழும் முதியவரை அன்றாடம் தெருவோரப் பொதுக்கழிப்பறைக்கு வழிநடத்திச்செல்லும்
குறுவால் சாம்பல் நிறப் பூனைக்கு
இருநூறு கண்கள் என்று
பெருமையோடு சொல்லிக்கொள்வார் பெரியவர்.

போன வருடப் புயலில்
வேரறுந்த மரங்களின் நுண்வடிவமாய்
கால்பரப்பி இறந்துகிடந்தது
இன்னொரு கருப்புப்பூனை.
பிரம்மாண்ட கார்கள் அணிவகுத்துநிற்கும்
அடுக்குமாடிக் குடியிருப்பில்
இல்லாத லிஃப்ட்டுக்குள் நுழைந்தபடி
மூன்றாம் மாடி தாண்டியிருக்கும் மொட்டைமாடிக்கு
ஏறியேறி யிறங்கியிறங்கியவாறு
மழையிலும் வெயிலிலும் நாளொன்றில்
பனிரெண்டு மணிநேரம் பார்க்கும் செக்யூரிட்டி
ஆறாயிரத்தியைந்நூறு ரூபாய் சம்பளம்
போதாதென்று கூறி
சிறிது உயர்த்தித் தரும்படி கோரியதால்
வேலைத்திறன் போதாதென்று வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

கிடைக்கும் பற்றாக்குறை ஊதியத்தில்
சிறிய மாலையொன்று வாங்கி
வீதியோரப் புதரில் வாகாய் குழிவெட்டி
புயலில் பலியான பூனைக்கு
இறுதிச்சடங்கு செய்தவர் அவரே.

அழுந்த மூடியிருந்தாலும் அவ்வமயம்
அந்தப் பூனையின் கண்கள் நிச்சயமாக
ஒரு கணம் திறந்து
அவரை அன்பும் நன்றியுமாகப் பார்த்திருக்குமென்றே தோன்றுகிறது.

இனி black commando பூனை திரும்பவும்
வருமோ தெரியாது.....

ஆனால் எங்கிருந்தாலும் நானிருக்கும்
திசைநோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் என்பது
என் நம்பிக்கை.

நானும் தெரியாத அதன் இருப்புநோக்கி
என் அகக் கண்களை என்றும்
திறந்துவைத்திருப்பேன் என்பதும்......

பூனைமனம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

பூனைமனம்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

(* 1.1.2023 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)
வாழ்வோட்டத்தின் ஏதோவொரு புள்ளியில்
நானும் black commando என்று என்னால் பெயரிடப்பட்ட கருப்புப்பூனையும் அறிமுகமானோம்.
நட்புறவு தட்டுப்படுவதற்கும் கெட்டிப்படுவதற்குமான காலதேசவர்த்தமானங்களைத் துல்லியமாக power point
வரைகோடுகளில் விளக்கிவிட முடியுமா என்ன?
அது ஆணா பெண்ணா தெரியாது.
அதற்கு எத்தனை வயது - தெரியாது.
அது எங்கிருந்து வருகிறது – தெரியாது.
அதற்கான நீள்வட்டப்பாதையின் ஆரம், விட்டம் –
சுற்றளவு
- எதுவுமே தெரியாது.
விளங்கவியலாச் சீட்டுக்குலுக்கலனைய வாழ்வியக்கத்தில்
குறைகாலம் கூட்டுச்சேர்ந்தது போலவே
கையாட்டி விடைபெறாமல் காணாமல் போனது.
தாறுமாறாய்ச் சீறிப்பாயும் இரண்டு, மூன்று,
நான்கு சக்கர வாகனங்களில் அறைபட்டிருக்குமோ
என்ற நினைப்பில்
அடிவயிறு கலங்குகிறது.
நான் தரும் தண்ணீர் பால்சோறைவிட மேலான
அறுசுவை சைவ அசைவப் பதார்த்தங்கள்
அதற்கென்றே ஓர் அழகிய தட்டில் வைத்துத்
தரப்படும்
புதிதாய்த் திறக்கப்பட்டிருக்கும் உணவு விடுதியின் பக்கமாய்
நிழலடர்ந்த மரத்தடியில் குடிபெயர்ந்திருக்கிறது
என்று எனக்கு நானே தெரிவித்துக்கொள்கிறேன்.
'மனதின் பாரத்தை இறக்கிவைக்க
கண்ணில் படும் மதில்மேல் ஏறிக்கொள்ளப் பழகவேண்டும்
கற்பனையில் கிடைத்த பூனைக்கால்களோடு'
என்று
என்றேனும் நாங்கள் மீண்டும் சந்திக்க நேர்ந்தால்
என்னிடம் சொல்லக்கூடும்
என்னருமை black commando.
*** ***