LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, March 16, 2014

கவிதை
வழக்குரை காதை
_’ரிஷி’

அப்பாவிகளின் பின்மண்டைகளாகப் பார்த்துப் பார்த்து
அம்பெய்து கொய்து பழக்கப்பட்ட கை.
சும்மாயிருக்க முடியவில்லை.
வைராஜாவை என்று சற்றுத் தொலைவில்
பாட்டுச் சத்தம் கேட்டதும்
ஹா, என்னை ஒருமையிலழைத்துவிட்டார்கள்;
ரம்மிப் பயலாக்கிவிட்டார்கள்என்று
விறுவிறுவென்றுவென்று அரசவையைக் கூட்டி வழக்குரைத்தார்
வானொலிப்பெட்டியின் மீது.

மகாராஜாஎன்று கூறாமல் ராஜா என்று குறிப்பிட்டது
முதற்குற்றம் நீதியரசேஎன்று
வாதத்தைத் தொடங்கினார் வழக்குரைஞர்.
ராஜ்யாதிபதி என்று குறிப்பிட்டிருக்கலாம்.
சாம்ராஜ்யாதிபதி வெகு சிறப்பு.
சக்கரவர்த்தியோ சூப்பராயிருக்கு….!
என்று குரலை உயர்த்திக்கொண்டே போனவரைப் பார்த்து
காகாகா…. என்று கரைந்தது வானொலிப்பெட்டி.

என்னைத் தான் எளக்காரம் செய்கிறது; என்ன திமிர்’
என்று எழுந்து நின்று முழங்கினார் மன்னர்பிரான்.
….மாமா, மாமா, மக்கு மாமா
என்று பாடிக்கொண்டே போயிற்று வானொலிப்பெட்டி.
காணொளிக்காட்சிகள் ஆயிரம் வந்தாலுமே
வானொளிப்பெட்டியோர் அருவரமே.
அது புரியாமல்_
’திரும்பத் திரும்ப வேண்டுமென்றே என் காதருகில்
விளிக்கிறதுமாமாஎன்று.
கூடவேமக்கு’_
போடு இன்னொரு வழக்கு’.

உழக்கு அளவு இருக்கிறது _
கிழக்கு மேற்கெங்கும் அதிர அதிர
என்னமாய் ஒலிக்கிறது….
கழுத்தைத் திருகிப்போட வேண்டும்.
பழுக்கக் காய்ச்சிய கம்பியால் இழுக்கலாமென்றால்
வழுவழுப்பான அடிவயிறு எங்கே?
அட வலிக்காதே வானொலிப்பெட்டிக்கு…’
அது பாட்டுக்குப் பாடத் தொடங்கியது:
”சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா…”

மன்னர்க்கெல்லாம் மன்னன் நான் _
என்னையா சொன்னாய் சின்னப்பயலென்று?
உன்னை என்ன செய்கிறென் பார்
_வன்மம் தாக்கிய நெஞ்சோடு
வானொலிப்பெட்டியைத் தூக்கினார்
வீசியெறிய.
போடா போடா புண்ணாக்கு என்று பாடியபடியே
வானொலிப்பெட்டி பறந்தேகிவிட்டது விண்ணி லோர்
எண்ணப்பறவையாய்!








கவிதை
நெஞ்சு பொறுக்குதில்லையே…..

_’ரிஷி’


சிவராத்திரிக்குச் சில நாட்கள் முன்பாய் கண்டெடுக்கப்பட்டது
உமா மகேசுவரியின் சடலம்.
யாருமற்ற வனாந்திர இரவொன்றில் வேரோடு பொசுக்கப்பட்ட
பெண்ணுடலின் அணுக்கள்
அந்தரவெளியெங்கும் பரவியிருக்கின்றன.
வெளியே கேட்டதோ கேட்கவில்லையோ அவளுடைய அலறல்கள்
என் அடிவயிற்றில் வீறிட்ட வண்ணம்….
ஐயோ தாங்க முடியவில்லையே…..


உலகெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் எண்ணிறந்த இசைப்பிரியாக்களின் வலியோலங்கள்.
நிலைகுலையவைத்தபடி.
ஐயோ தாங்க முடியவில்லையே……


நிர்பயா,
உன் அவசர சிகிச்சைப் பிரிவுப் படுக்கையின் மரணாவஸ்தையிலிருந்தே
இன்னும் என்னால் எழுந்திருக்க இயலவில்லை.
அதற்குள் இன்னுமின்னுமாய் எத்தனை வன்புணர்ச்சிகள் இங்கே.
பயங்கரம், அதி பயங்கரம், அதீத பயங்கரம் _
ஐயோ, தாங்க முடியவில்லையே…..


அந்த ஏழை நெசவாளியின் சின்ன மகள்
கதவில்லா வீட்டில் படுத்துறங்கியது அவள் பிழையா?
மறுநாள் விடிந்ததும்
பிறப்புறுப்பெங்கும் ரணகாயத்தோடு மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த
அவளுடைய அம்மண உடல்
திரும்பத்திரும்ப என் கண்களைக் குத்திக்கிழித்தபடி
தன் வலியை எனக்குள் என்றைக்குமாய் இடம்பெயர்த்துக்கொண்டிருக்கிறது
ஐயோ, தாங்க முடியவில்லையே……


படிக்கக்கூடாதா பெண்? பணிக்குச் செல்லலாகாதா?
பொறுக்கிகளின் திரைப்படங்கள், கணிப்பொறி நிறையும் நீலப்படங்கள்
எந்த ஆணுடலும் பெண்ணுக்கு ஆனந்தத்தை வரவாக்கி அருள்பாலிப்பதாய்
உருவேற்றிக்கொண்டிருக்க,
காலை பதினோறு மணி முதல் மாலை நான்கு மணிவரையே
பெண் ‘பரோலில்’ வெளிவரலாம் என்று சமூகக் காவலர்கள் வகுத்துரைத்துக்கொண்டிருக்க,
யோனியைக் கிழித்தால் தானே பலாத்காரம்? தொட்டதற்கே சிறைவாசமா?
என்று அறிவுசாலிகள் சிலர் பிரதிவாதம் செய்துகொண்டிருக்க,
நான்கு வயதுச் சிறுமி வன்புணரப்பட்டாலும் அதற்கு
அவள் ஆடையையே காரணமாக்கும் அறிஞர்கள் நிறைந்திருக்க
வன்புணர்ச்சியாளர்களின் உளவியலைப் பேச சிலர்…….
உரிமைகளைப் பேச சிலர்…..


தாயே உமாமகேசுவரி………
கன்னியாகுமரி………
ஜோதிப் பிரவாகி.........
காற்றெங்கும் உறைந்திருக்கும் உங்கள் சொப்பனங்களின் சுமையில்
சுவாசம் திணறுகிறது.
சுக்குநூறாகிக்கொண்டிருக்கிறது உயிர்.

பாதியுயிர் போனதில்
செயலிழந்த சிவனாகும் உலகம்.


அதிரும் மனம் அதிர
ஊழிப் பிரளயமாய் பெருகியோடிக்கொண்டிருக்கிறது பெண் உதிரம்.   





0

அனுபவச் சுவடுகள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்

அனுபவச் சுவடுகள் 
கவிதா வெளியீடுமுதல் பதிப்பு : அக்டோபர் 2013. பக்கங்கள் 192.விலை: 125
[*திண்ணை இணைய இதழில் வெளியானது]



[முன்னாள் இயக்குநர்ஆசிய வளர்ச்சி வங்கி



ஒருவர் தன்னுடைய வாழ்க்கை சார்ந்து முக்கிய நிகழ்வுகளை, அனுபவங்களைக் கட்டுரைக ளாக்கும்போது பிரக்ஞாபூர்வமாகவோ அல்லது தன்னையுமறியாமலோ தன்னைப் பற்றிய ஒருவித கதாநாயகத்தனமான, மிகைப்படுத்தப்பட்ட, Tragic Hero பாவந் தாங்கிய பிம்பத் தைத் துருத்திக்கொண்டு நிற்கச் செய்வது பெரும்பாலான நேரங்களில் நேர்ந்து விடுகிறது. இந்த மிகைப்படுத்தல் பேசப்படும் நிகழ்வு அல்லது அனுபவத்திலும் தாக்கம் ஏற்படுத்து கிறது. எனில், எந்தவொரு எழுத்தாக்கமும் வாசிப்போரிடத்தில் பரிவதிர்வை ஏற்படுத்தும் போது மட்டுமே, வாசிப்போர் மனங்களில் ஒரு Catharsis உணர்வை ஏற்படுத்தும் போது மட்டுமே அது வாசிப்பனுபவத்தைத் தருவதாகிறது. இந்த அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புறந்தள்ளிவிட்டு, நான் காலையில் எழுந்தேன், காப்பி குடித்தேன், பம்பரம் விட்டேன், பபுள்கம் சாப்பிட்டேன் என்று கைபோன போக்கில் தன்வரலாற்றுக் கட்டுரைகளை உப்புச்சப்பில்லாமல் உன்னத எழுத்துகள் என்ற பாவனையில் எழுதித்தள்ளி அலுப்பூட்டிக்கொண்டிருப்பவர்கள் அனேகம். இத்தகைய கட்டுரைகளில் மெய்யெனப் பொழி யும் பொய்களுக்கு அளவேயில்லாமல் போய்விடுவதும் உண்டு. சிலர் இத்தகைய தன்வர லாற்றுக் கட்டுரைகள் எழுதுதலை சக-மனிதர்களை மட்டந்தட்டி மதிப்பழிக்கப் பயன்படுத்திக் கொள்வார்கள். உதாரணத்திற்கு, ஒரு இலக்கிய சர்ச்சையில் மற்றவர்களின் வலுவான எதிர் வினைகளை மூடிமறைத்து தானே வென்றதாய் தன்னு டைய எதிர்வினைகளையே இறுதிக் கருத்தாய்ப் பிரசுரித்து இறும்பூதடையும் தகிடுதித்தக்காரர்கள் இங்கு நிறையவே உண்டு! இந்த நடப்புண்மைகளைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது சமீபத்தில் கவிதா பதிப்பகவெளியீடாகப் பிரசுரமாகியுள்ளடாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியத்தின் 17கட்டுரைகள் இடம்பெறும் அனுபவச் சுவடுகள் என்ற தலைப்பிட்ட நூல் கவனத்திற்குரியதாகிறது.
 டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் தமிழிலக்கியப் படைப்புகளை தமிழிலிருந்து ஆங்கிலத் திற்கு மொழியாக்கம் செய்யும் குறிப்பிடத்தக்க வெகு சில மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். சம கால தமிழ் இலக்கிய உலகிற்கு நன்கு அறிமுகமானவரே.  எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆத்மார்த்தமான நண்பர் என்ற அளவில் அவருடைய பல நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள திரு.கே.எஸ்.சுப்பிரமணியன் அசோகமித்திரன், திலகவதி, சிற்பி பாலசுப்ரமணியன் போன்ற படைப்பாளிகளின் நாவல், கவிதை போன்ற எழுத்தாக் கங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய மொழிபெயர்ப்புப் பணியில் முக்கிய மைல்கற்கள் தமிழின் சமகாலக் கவிதையுலகைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க கவிஞர் களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது. கதா வெளியீடாக ஒரு தொகுப்பும், உலகத் தமிழாராய்ச்சி மையத்தின் சார்பில் ஒன்றும்[ அல்லது இரண்டு?] வெளியாகியுள் ளன. பொதுவாக, ஒருவருடைய கவிதையை ஆங்கிலத்தில் மொழிபயர்ப்பதே அந்தக் கவிஞ ருக்குச் செய்யும் சலுகையாகக் கொள்ளப்படும் சூழலில் ஒவ்வொரு கவிஞரையும் தொலை பேசியில் அழைத்து அல்லது கடிதம் மூலம் தொடர்புகொண்டு, அவருடைய கவிதையை மொழிபெயர்ப்பதற்கான அனுமதி பெற்று, தன்னுடைய மொழிபெயர்ப்பை கவிஞருக்கு வாசித்துக்காட்டி திரு. கே.எஸ்.சுப்பிரமணியம் அந்த மொழிபெயர்ப்பு முயற்சிகளை மேற் கொண்ட பாங்கு முன்னுதாரணமான பண்பு.
ஏறத்தாழ நாற்பது நூல்கள் [அல்லது அதற்கும் அதிகமாய்] தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் இவர் இலக்கியம் சமூகம் சார்ந்து எழுதிய கட்டுரைகளும் நூல் வரிவில் வெளியாகியுள்ளன.
அனுபவச் சுவடுகளில் இடம்பெறும் பதினேழு கட்டுரைகளில் வெளிப்படும் கே.எஸ்.சுப்பிர மணியன் என்ற மனிதர் சகமனிதர்களை மதிக்கத் தெரிந்த, அவர்களுடைய தரப்பிலிருந்து விஷயங்களைப் பார்க்க முடிந்தவராக வெளிப்படுகிறார்., சிறு வயதிலேயே தந்தையின் இழப்பும், வறுமையும், ராமகிருஷ்ண இல்ல வாழ்க்கையும் சரி, பின், பெரிய பதவியில் மணிலாவிலும், பிறவேறு நாடுகளிலும் வளமாக வாழ்ந்தபோதும் சரி, வெறுப்பையும் வன்மத்தையும் மனதில் சுமக்காத, சக மனிதர்களை நேசிக்கத் தெரிந்த, விழுமியங் களையும் வாழ்வுமதிப்புகளையும் உறுதியாகக் கடைப்பிடிக்கின்ற, போற்றலுக்கும் தூற்றலுக் கும் அப்பாற்பட்ட மனிதராக அவர் திகழ்வதை இந்தக் கட்டுரைகளின் வழி காண முடிகிறது. கழிவிரக்கமோ சுய புலம்பலோ தன்னைப் பீடித்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்வதை ஒரு கொள்கையாகவே கொண்டிருக்கிறார் அவர் என்பது அவருடைய கட்டுரைகளிலிருந்து தெளிவாகிறது. நேர்ப்படும் ஒவ்வொரு நாளிலும், நிகழ்விலும் வாழ்வின் பிரம்மாண்டத்தையும், மகத்து வத்தையும் தரிசிப்பவராகவும், அவற்றின் இரண்ட றக் கலந்த அணுவாகத் தன்னைத்தானே விலகிநின்று தரிசித்துக்கொள்பவராகவும் திகழ்கி றார் திரு.கே.எஸ்.சுப்பிரமணியன்.
பத்துநாட்கள் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு அதையே பக்கம்பக்கமாக எழுதித் தள்ளுவோர் அனேகம் பேர். அப்படியில்லாமல் இருபது முப்பது வருடங்கள் வெளிநாடு களில் இருந்து அங்குள்ள மக்களோடு பழகி, எல்லாவற்றிலிருந்தும் சாரத்தை மட்டும் எடுத் துக்கொண்டு அவற்றை அடிக்கோடிட்டுக்காட்டும் திரு.கே.எஸ்.சுப்பிரமணியத்தின் வெளி நாட்டு அனுபவக் கட்டுரைகள் அடர்செறிவானவை. சுற்றுச்சூழல் சில வெளிச்சங்கள், என்ற கட்டுரை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. மற்றும், பிலிப்பின்ஸ் என்ற ஓர் உலகம், பிலிப்பின்ஸ் நாட்டு மக்கள் சக்திப் புரட்சி.
இந்தப் பதினேழு கட்டுரைகளிலும் இடம்பெறும் பொதுவான அம்சங்கள் திரு.கே.எஸ். சுப்பிரமணியத்தின் மனிதநேயம், தன்னைத் துருத்திக்காட்டாத பாங்கு, செய்யும் காரியத்தில் வாசகன் என்ற அளவிலும், மனிதன் என்ற அளவிலும்முழு அர்ப்பணிப்போடு தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பண்பு, எதிலும் மேலான அம்சங்களையே கவனப்படுத்திக்கொள்ள முற்படும் மனோபாவம். முன்பொரு முறை நேர்ப்பேச்சில் ”‘பிடிக்காத புத்தகத்தைத் திட்டித் தீர்த்து விமர்சிப்பது வீண் நேரவிரயம்; அதைத் தவிர்த்து விடுவேன் நான். நிறைவைத் தரும்விஷயங்களில் நேரம் செலுத்தவே, அவற்றை முன்னி லைப்படுத்தவே விரும்புவேன். அதுவே என்னையும் மற்றவர்களையும் மேம்படுத்தும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறியதுண்டு. இந்த நூலிலுள்ள கட்டுரைகளிலும் அவ்வாறே தன் மனதில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்திய நிகழ்வுகளையும் மனிதர்களையும் முன்னிலைப்படுத்தியுள்ளார்; நெகிழ்வோடும் நன்றியோடும் நினைவுகூர்ந்துள்ளார் அவர். இன்னொரு விதத்தில் பார்க்க, தனக்கு நேரும் மனிதர்கள் நிகழ்வுகள் எல்லாவற்றிலிருந்தும் நேர்மறையான தாக்கங் களைப் பெறக்கூடிய பண்புநலன் இவரிடம் பொருந்தியமைந்திருக் கிறது என்றும் கூற முடியும்.
எளிமையான, எனில், உயிர்ப்பான நடையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மனிதம் ஒரு நிறப்பிரிகையாக, மொழிபெயர்ப்பு ஒரு சுவையான மல்லாட்டம் என சில கட்டுரைகளின் தலைப்புகளே கூட இவருடைய மொழியாளுமைக்கு சான்றுபகர்கின்றன! இந்த நூலைப் பற்றி ரத்தினச்சுருக்கமாக எடுத்துரைப்பதாய் அமைந்துள்ள எழுத்தாளர் பாவண்ணனின் கடிதவரிகள் நூலின் பின்னட்டையில் தரப்பட்டுள்ளன.
இந்த நூலை கவிதா பதிப்பகத்தார் நேர்த்தியாக வெளியிட்டுள்ளார்கள். அச்சுப்பிழைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் வெகு குறைவாகவே உள்ளன. அதே சமயம், காலங் காலமாக வாழ்பவை நூல்கள், பின்வரும் எத்தனையோ தலைமுறைகளால் வாசிக்கப் படுபவை என்ற அளவில், நூலாசிரியர் குறித்த சிறு விவரக்குறிப்பு எந்தவொரு நூலிலும் இடம்பெற வேண்டியது இன்றியமையாதது. அப்படி ஒரு குறிப்பு இந்த நூலில் இடம்பெற வில்லை என்பது ஒரு குறையாகவே படுகிறது. அடுத்த பதிப்பிலாவது இந்தக் குறை அவசியம் நிவர்த்திசெய்யப்பட வேண்டும்.