உயிர் அறிய....
_அநாமிகா
ஆற்றுக்கு மேலாக நீண்டுபோகும் அந்த ரயில்வண்டித் தண்டவாளங்களில் வழக்கம்போல் அன்றாடம் ஊற்றெனச் சுரந்தவாறிருக்கும் எண்ணங்களின் துணையோடு நடந்துகொண்டி ருந்தான். தன்னந் தனியாக மேலே ஆகாயமும், கீழே சுழித்தோடும் ஆறுமாக நடந்துபோகும்போது மனதிற்குள் தளும்பும் எண்ணங்கள், அவை எத்தனை சாதாரண விஷயங் களைப் பற்றியதாக இருந்தாலும், ஒருவித உன்னதத் தன்மை கொண்டு விளங்கும்.
“உன்னதம் என்பதே ஒரு கற்பிதம்தான்’ என்பான் அருமை நண்பன். நம் வாழ்க்கையில் மீள முடியாத இயந்திரத்தனத்தால் மீட்சியற்று அமிழ்ந்து போய் விடாமலிருப்பதற்காக நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட ஒரு கற்பனை தான் உன்னதம்.”
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு குழந்தை சிரிப்பதைப் பார்க்கும் போது ஏற்படும் பரவசநிலை, மழைச்சாரல் மேலே படும்போது, அருமையான இசையைக் கேட்கும்போது, ஒரு அரிய வகைப் பூவைப் பார்க்கும்போது, ஏன், சிட்டுக்குருவியை, குட்டி முயலைப் பார்க்கும் போதுகூட மனதில் பொங்கும் ஒருவித மகிழ்வும், நெகிழ்வும் உன்னதநிலை தான். மொழியிலும், உள்ளடக்கத்திலும் தேர்ந்த ஒரு கவிதையைப் படிக்கும்போது அதன் வரியிடை வரிகளில் அமிழும்போது நமக்குள் ஏற்படும் உணர்வுகூட உன்னதம்தான்...
“இதையெல்லாம் நான் ஏற்கவில்லை’ என்பது போல் நண்பன் மெதுவாகச் சிரிப்பான். ஆனால், ஒரு போதும் விவாதத்தை, எதிர்க் கருத்தை அதன் ஆரோக்கியமான நிலையிலிருந்து வாய்ச் சண்டை யாக, கருத்துச் சுதந்திர மறுப்பாகக் குறுக்கிவிட மாட்டான், கொச்சைப்படுத்திவிட மாட்டான். ‘நாம் மாறுபடுகிறோம் என்பதை மனதார ஏற்கிறோம்’ என்று மென்முறுவல் பூத்தவாறு சொல்லி வேறு விஷயத்தைப்பற்றிப் பேச ஆரம்பித்து விடுவான்.
எத்தனையோ விஷயங்களில் மாறுபட்ட கருத்து உடையவர்களாக இருந்தும் எப்படி இருவரும் இத்தனை வருடங்கள் ஒருவருக்கொருவர் அன்பும், மரியாதையும் தந்தவண்ணமிருக்கும் நட்பினராக இருக்கிறோம் என்று இவனுக்கு சமயங்களில் ஆச்சரியமாக இருக்கும். யோசித்துப் பார்த்தால் எந்தவொரு விஷயத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்கள், பார்வைகள் இருக்க வழியுண்டு என்ற அடிப்படையான புரிதல் தங்களிடம் இருந்தது தான் தங்களுக்கிடையேயான நட்பு நீடித்து வருவதற்குக் காரணம் என்பது விளங்கும். இந்த அடிப்படை விஷயம் குறித்துக்கூட அவர்கள் காரசாரமாக விவாதிப்பது உண்டு.
“எந்தவொரு விஷயத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பார்வைகள், கோணங்கள், அர்த்தச் சாத்தியப்பாடுகள் உண்டு என்பது உண்மைதான். எனக்கு நியாயமாகத் தெரிவது இன்னொருவருக்கு அநியாயமாகக்கூடத் தெரியலாம். அதே சமயம் அடிப்படையான நியாயம், நீதி, நேர்மை என்பது ஆளுக்கு ஆள் மாறுபடவியலாதது. மாறுபடலாகாதது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று ஒரு தீவிரதொனியில் கூறுவான் நண்பன்.
வேலை நிமித்தம் இரண்டு வருடங்களுக்கு முன்பு வடநாட்டின் வடகோடிக்கோ, தென்கோடிக்கோ ரயிலேறிச் சென்றவன். சமவயதினர் என்பதால் மட்டும் ஒருவரோடு சிநேகமாகிவிட முடிகிறதா என்ன? நண்பன் இடம் அவனால் மட்டுமே இட்டு நிரப்பப் படக் கூடியதாய், அவனுடைய மின்னஞ்சல்களாலும், கைபேசிக் குறுஞ்செய்திகளாலும், சமயங்களில் அவனுடைய மௌனங்களாலும்கூட இட்டு நிரப்பப் பட்டுக் கொண்டிருந்தது.
இன்றோ, நாளையோ ஒரு வாரம் விடுமுறையில் ஊருக்கு வருவதால் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் காலையில். குறுஞ்செய்தியைப் படித்தது முதல் மன திற்குள் ஒரு பரபரப்பும், தழுதழுப்பும் நெகிழ்வாகி யிருந்தது. அத்தகைய அரிய மனநிலை உருவாகும் போதெல்லாம் அவன் இந்த ஆற்றுப் பாலத்தின் மீது நடக்க ஆரம்பித்துவிடுவான். அவ்வேளையில் இதுவும் ஒரு உன்னத உணர்வுதான். அப்படி நடக்கும் போது சில சமயங்களில் ரயில் வரும் ஓசை கேட்கும். உடனே பாலத்தில் பக்கவாட்டுப் பகுதிகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் இருக்கக்கூடிய சதுரவடிவ, மூன்று பக்கங்களிலும் கம்பிக் கிராதியிட்ட மேடையில் ஏறி நின்றுகொண்டு விடுவான். அண்மையேகி வரும் ரயில் தன்னைக் கடந்து போகும்போது அடி முதல் முடி வரை அதிரும். பாதுகாப்பாய் நின்று கொண்டிருக்கிறோம் என்ற தெளிவில் அந்த அதிர்வு கூட அச்சத்தைத் தராமல் ஆனந்தமாக இருக்கும்.
இப்பொழுதுகூட ரயில் வரும் நேரம்தான். ஆற்றுப் பாலத்தைக் கடந்து போனால் சிறிது தொலைவில் வரக்கூடிய ரயில் நிறுத்தத்தில் ஐந்து நிமிடங்கள் நின்றுவிட்டுச் செல்லும் அந்த வண்டியில்தான் நண்பன் வரக்கூடும். ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டிலுள்ள சதுர வடிவ மேடையில் மேலே ஆகாயமும், கீழே ஆறுமாக தான் நின்று கொண்டிருக்க தன்னைக் கடந்து போகும் ரயிலிலிருந்து நண்பன் எட்டிப் பார்த்து ஆச்சரியத்தில் கூவியவாறு தலையசைப்பதாய்க் கற்பனை செய்து கொண்டான். புன்னகையோடு சதுரவடிவ மேடைக் காய்த் திரும்பிய போது தான் சுரீரென உறைத்தது.
இருப்புப் பாதையின் பக்கவாட்டுப் பகுதிகளில் அந்தச் சதுரவடிவ மேடைகள் எங்கேயும் இல்லை. சே, காலையில் தான் ஊரெங்கும் ஒலி பெருக்கியில் அறிவித்துவிட்டுச் சென்றார்கள். ‘ஆற்றின் மேலுள்ள இருப்புப்பாதை வழியாக யாரும் போக வேண்டாம். பலவீனப்பட்டுப் போயுள்ள சதுரவடிவ மேடைகள் அகற்றப்பட்டுள்ளன. நாளை அல்லது மறுநாள் புதிய, உறுதியான மேடைகள் பொருத்தப்பட்டுவிடும். அதுவரை சுற்றுவழிச் சாலையைப் பயன்படுத்தவும். ஒத்துழைப்பைத் தரவும்.’
இப்பொழுது அந்த வாசகங்கள் அத்தனை தெளிவாக, அட்சர சுத்தமாக உட்செவியில் கேட்டது. உடலெங்கும் வியர்க்க ஆரம்பித்தது. உதறலெடுக்க ஆரம்பித்தது. ‘சே, இதை எப்படி மறந்து போனோம். திரும்பிவிடலாமா என்று பின்னால் திரும்பிப் பார்த்தான். பாதிவழி வந்தாயிற்று. எந்நேரமும் ரயில் வந்துவிடும். திரும்பிச் சென்றாலும் ஆபத்து, முன்னேறிச் சென்றாலும் ஆபத்து. என்ன செய்வது...
கால்கள் நடுங்க ஆரம்பித்ததில் நடை தடுக்கியது. பக்கவாட்டு மேடை இருக்கும் பாதுகாப்புணர்வு தரும் தெம்பில் இருப்புப் பாதையின் இடையிடையே அமைந்துள்ள சிறு இடைவெளிகளை அநாயாசமாகக் கடக்க முடியும். இப்பொழுது அந்த இடைவெளி களினூடாய்த் தெரிந்த ஆறு ஏதோ ஒரு பயங்கர காந்த சக்தியோடு அவனுடைய பாதங்களைக் கீழிழுப் பதிலேயே குறியாக இருந்தது. வளைவில் ரயில் வந்து விட்டால் பின் இவனிருக்குமிடம் வர இரண்டு நிமிடங்கள்தான். வளைவில் அதன் இரும்பு முகம் எந்த நிமிடத்திலும் தெரியும்.
என்ன செய்வது... அப்படியே கட்டையாக இருப்புப் பாதையின் நடுவில் கண்களை இறுக மூடிப் படுத்துக் கொண்டு விட்டால்... திரைப்படங்களில் காண்பிப்பது போல் தப்பித்துவிட முடியுமா...? அல்லது, நடுவிலுள்ள கட்டையை அடிப்புறத்திலிருந்து இறுகப் பற்றியவாறு தொங்கினால்...? கையும், விரல்களும் தாங்குமா... மடமடவென்று கயிறு கட்டித் தொங்கினால்...? இடுப்பில் அரைஞாண்கயிறுகூட இல்லை. என்ன செய்வது... கைபேசியை எடுத்து யாருக்கேனும் விவரம் தெரிவிக்கலாமா... என்னவென்று தெரிவிப்பது... கைபேசி காற்சட்டைப் பையில் இருக்கிறதா, இல்லையா...
யோசிக்க நேரமில்லை. இந்தத் தருணத்தை நடந்து தான் கடக்க வேண்டும். பறக்க வழியில்லை. ஆற்றில் குதித்தால்... நீந்தவும் தெரியாது... ஆற்றில் பாறைகள் நிறையவுண்டு எனவும் கேள்விப்பட்டிருக்கிறான்...
உடல் வேகமாக உதறலெடுக்கத் தொடங்கியதில் ஓரெட்டு எடுத்து வைப்பதே பிரயத்தனமாகிவிட்டது. என்ன செய்வது... ‘யோசனையில் நிற்கலாகாது... நடந்து தான் கடக்க வேண்டும் இந்த இக்கட்டான தருணத்தை... கடப்பேனோ... காவு கொள்ளப்படுவேனோ... கடவுளே...! நான் யாருக்காவது, ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடு. எனக்காகவும், மற்றவர்களுக் காகவும் நான் வாழ எனக்கிருக்கும் நாட்கள் இல்லா மலாகிவிடக் கூடாது...
“உயிர் வெல்லம்’ என்பான் நண்பன். உயிர் அதைவிட மேல்... ‘உயிர் அனைய’ என்பார்கள். எல்லாமே உயிர் அறியத்தான்... நான் வாழ வேண்டும். என் மனவீச்சில் ஏதோ காரணத்தால் அந்த ரயில் தாமதமாகி விடலாகாதா... நான் வாழ வேண்டும்... நான் வாழ வேண்டும்...
ஒரு அரைமயக்க நிலையில் ஆற்றின் மேலிருந்த இருப்புப் பாதையைக் கடந்து கீழிறங்கி அதீதக் களைப்பை மனமும், உடலும் துல்லியமாக உணர வீடு நோக்கி நடக்க ஆரம்பித்து, வீட்டின் வாசலை அடையும் போதுதான் அவன் அறிவு மீண்டும் இயங்கத் தொடங்கியது. “ஏன், அந்த ரயில் வர வில்லை... எதனாலோ தாமதமாகியிருக்கிறது. நான் தப்பித்தேன்... உயிர் அறிய நான் பிழைத்திருக்கிறேன்... வாழப் போகிறேன்.”
வீட்டினுள் நுழையும்போது கூடத்திலிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் தென்னிந்திய ரயில் வண்டி ஒன்றில் வெடிகுண்டு வெடித்து ரணகளமாகி விட்டதாகச் செய்தி அலற ஆரம்பித்தது.
[*19 மே 2011 10:43, தேதியிட்ட உங்கள் நூலகம் இதழில் வெளியான சிறுகதை]