பயணக்குறிப்புகள்
_ ரிஷி
1ஒருவர் ஒன்றை மொழிந்ததுதான் தாமதம்
அந்த இன்னொருவரின் கை
வழக்கம்போல் வீறிட்டெழுந்துவிடும்!
வெறிகொண்ட பரவசத்தில் அவர் உடல் துடித்தெழ
கூறப்பட்டதை தனக்குரிய விதத்தில்
பொருள்பெயர்த்துத் தந்துவிடும்
அவர் வாய்
பல வண்ணங்களில்
பிறழ்வாய்
பிறவாய்.
சகபயணிகளில் இது ஒரு வகை.
பரவலாய் காணக்கிடைப்பதுதான்.
ஒரு கேள்வியை இடைமறித்து
கச்சிதமாய் தவறான விடையளிக்கும்
பரிதாபத்திற்குரிய மே[ல்]தாவித்தனம்.
தம்மைக் கதிரோனாய்
காவ்யாசானாய்
கருதிக்கொள்வதும் காட்டிக்கொள்வதுமாய்
இரவல் வெளிச்சங்கள் நம்மை வழிநடத்தப் பார்க்கும்.
விழிப்போடிருக்கவேண்டும்.
2
உன்னுடைய எண்ணங்களை கைபோன போக்கில் வெட்டி
கண்ணுக்குப் புலனாகாத தட்டொன்றில் பரப்பி
நீட்டுகிறாய் என்னிடம்.
ஆப்பிள்துண்டுகளாகவோ ஆரஞ்சுச்சுளைகளாகவோ
ஆர்வம்பொங்க அவற்றை நான்
அள்ளியெடுத்துக்கொள்ளவேண்டும்,
அதற்காய் காலத்திற்கும் நன்றியோடிருக்கவேண்டும்
என்பது உன் எதிர்பார்ப்பு.
எனக்குத் தெரியும்தான்.
அவ்விதம் செய்யாவிடில்
என்னையோர் எதிர்மறை கிளர்ச்சியாளராய் குற்றஞ்சாட்டி
நடுவீதியில் நாயாய் கல்லடி படச்செய்வாய்.
அதுவும் தெரியும்தான்.
என்றாலும்
மாற்றுச் சிந்தனைகள் தரும்
காற்றும் ஒளியும் ஊற்றும்
என்னுள்ளே
முகிழ்த்து மலர்ந்து மணம்வீசிக்கொண்டிருக்க
உன்னை மறுத்து முன்னேகுவதே
`என் னுயிரின் உயிர்ப்பாய்.
3
அவருடைய கால்களில் அவர் நடந்துகொண்டிருந்தார்.
தேடிச் சென்று இடைமறித்த வித்தகர்
முன்னவரின் கால்களைப் போலவே தனக்கும்
பாதங்கள் இரண்டும் பத்துவிரல்களும்தான் என்றாலும்
அவர் போகும் தொலைவும்
தான் போகும் தொலைவும் ஒன்றல்ல என்றார்.
”கண்டிப்பாக. பயண இலக்குகளுக்கேற்ப வேறுபடும் தொலைவும்; மேலும்
தொலைவின் தொலைவு கிலோமீட்டர்களில் அடங்காதது”, என்று
முன்னவர் மொழிய
’விவரம் தெரிந்த ஆசாமிதான் போலும்’ என்று
வழிவிலகிச் சென்று விட்டார் பின்னவர்
பின்னங்கால் பிடரியில் பட ஓட்டமாய் ஓடி!
4
குருவி தென்படாத இயற்கைச்சூழலினூடாய்
பயணித்துக்குக்கொண்டிருக்கும்போதும்
கவண்கல்லைக் கையிலெடுத்துக் குறிபார்த்துச் சென்றால்
கல் இடறி காலில் காயம்படத்தான் செய்யும்.
சுயநலம் கருதியேனும்
சகவுயிர்களை நல்லவிதமாக நடத்தப் பழகு.
’சகோதரத்துவம் மனிதரிடமே வராத போது
மிருகங்களிடம் எப்படி வரும்’ என்று எதிர்க்கேள்வி கேட்கிறயா?
பதில்சொல்லக் காத்திருக்கின்றன வழியெங்கும்_
புதைகுழிகளும் பேரழிவுகளும்.
5
கவியும் இருளில் சில சமயங்களில்
நிலாவாகிவிடுகிறேன் நான்!
இரு இரு –
கனிந்து மெழுகென உருகும் என்னிடம்
சந்திரனை இரவல் ஒளியாக உண்மையுரைத்து
எந்தப் புண்ணியமுமில்லை; புரிந்துகொள்.
ஒரு தண்ணணைப்பு அருள்பாலிக்க
பறக்கத் தொடங்குகிறேன்!
பரிகசிப்பதை சற்றே நிறுத்தி
முயன்று பார்.
மயிலாகிவிடக்கூடும் நீயும்!
6
நடக்கும் கால்களின் தாளகதியும்
ஓடும் கால்களின் தாளகதியும்
ஒருபோலல்ல.
புரிந்துகொள்ள
நீ நடந்திருக்கவும் ஓடியிருக்கவும் வேண்டும்.
அல்லது, நடப்பவரை ஓடுபவரை பார்த்திருக்கவேண்டும்.
எதையுமே செய்யாமல் இயந்திரகதியில்
பரபரபர பப்பரவெனப் பயணமாகும் உனக்கு
பிடிபடுமோ இசையும் நடனமும்?
7
முன்னேகியவாறு இருப்பது மட்டுமே பயணம் என்று
சொன்னது யார்?
கைதவறிக் கீழே விழுந்துவிட்ட கைக்குட்டையைக் குனிந்து எடுக்க,
யதேச்சையாக அந்தக் குளத்தின் நடுவே தட்டுப்பட்ட
கண்கொள்ளாப் பூவை விழிவழியே போய் தீண்டிப் பரவசமாக,
என்றைக்குமாய் பிரிந்துசெல்பவர் முதுகை
இறுதியாய் இன்னொரு தடவை
இதயத்தில் பெருகும் வலியோடு பார்க்க,
தூர்த்துப்போய்விட்ட நீர்நிலையில்
வெள்ளம் பெருகிய நாளில்
மீண்டும் கால்நனைக்க,
அன்றொரு நாளின் ஆறாக்காதல் அரவணைப்பை
திரும்பவும்
அனுபவங்கொள்ள....
பின்னேகுவதும் பயணத்தின் ஓர் அம்சமாய்
ஊசலாடும் காலத்தின் ’பெண்டுலம்’ அசைந்தவாறு.
8
கும்மிருட்டு.
குறுகலான பாதை.
இருமருங்கும் நெருஞ்சிமுட்ப்புதர்கள்.
கைவிளக்கைக் கொண்டுவராமல் போய்விட்டோமே
என்று கலங்கி நிற்கையில்
எங்கிருந்தோ வந்த மின்மினி
கண்ணிமைப்போதில்
சன்னமாய் ஆறின் பரிமாணங்களை
அளந்துகாட்டிவிடுகிறது!
சில நேரங்களில் நெருப்புக்கோழியும் கூட!!
9
வலப்புறம் பிரம்மாண்டமான கோட்டையிருந்தது.
இடப்புறம் நீண்டு நெளிந்து சுழித்தோடிக்கொண்டிருந்தது ஆறு.
’எல்லா நீரும் ஒருபோல; எனில்,
ஒவ்வொரு கோட்டையும் தனித்தன்மையானது.
எனவே, கோட்டைக்குப் போய் பார்த்துவிட்டு வரலாம் என்றார் ‘இவர்’.
‘பாரபட்ச சமூகத்தைப் பறைசாற்றுவதைத் தவிர
வேறென்ன உண்டு கோட்டையில்?
எனில், பிரதிபலன் எதிர்பாரா ஆறு
தியாகத்தின் மறு உருவம்; நிரந்தரத்தின் நிதர்சனம்!
இயற்கை நமக்களித்திருக்கும் மகோன்னத ஆடி!
இன்னும் என்னென்னவோ...
ஆற்றங்கரையில் அமர்ந்தாலே போதும்- வாழ்க்கை
பொருளுடைத்தாகும்’
என்றார் ‘அவர்’.
பயணத்தையே வண்ணமயமாக்கிக்கொண்டிருக்கின்றன
கலைடாஸ்கோப் கோலங்கள்!
10
மலையிலும் சுவர்களிலும்
மின்சார ரயிலின் உட்புறங்களிலும்
கீறப்பட்ட பெயர்களை
சிரிப்பும் குறுகுறுப்புமாய் வாசித்தவாறு
போய்க்கொண்டிருந்தனர் பயணியர்.
கவனமும் அக்கறையுமாய் தேடும் கண்களுக்கு
தட்டுப்படக்கூடும்
காற்றில் செதுக்கப்பட்டவையும்!
தென்றலும் புயலும் பேச்சும் மூச்சுமாய்
என் உன் வாழ்வெல்லாம்
காற்று வெளியிடை கண்ணம்மா....!
[நன்றி: திண்ணை]