மனிதமும் மனிதர்களும்
அந்த முதியவர் சுருண்டு படுத்திருக்கும் அழுக்குத் தெருவோரத்திற்கு.
அலைபேசியில் பிறர் எடுக்கும் படம் தோதாக அமையவில்லையென்றால்
செல்ஃபி எடுத்துவிடவேண்டும் என்று தீர்மானித்திருந்தார்.....
அதிகம் செலவு வைப்பவராகத் தெரியவில்லை யந்த முதியவர்
நாலு இட்டிலி ஒரு ஜோடி வேட்டி சட்டையில் நல்ல விளம்பரம் கிடைத்துவிடும்....
என்னதான் சமத்துவம் பேசினாலும் தனக்கு வாங்கும் (உயர்) தரத்திலேயே
தர்மம் செய்யவும் வாங்கமுடியுமா என்ன?
ஃபேஸ்புக்கிலும் செய்தித்தாள்களிலும்பளிச்சென்று தெரியும்படி
ஒப்பனை செய்துகொண்டபின் புறப்பட்டவரின்
பரிவாரங்கள் முன்னமே சென்றடைந்திருந்தார்கள்
அந்த சின்னத் தெருவோரத்திற்கு.
ஏழை முதியவருக்குப் பொட்டலங்களை யளிக்கும்போது
தன்னைப் படமெடுத்துவிடும்படி முன்னமே சொல்லிவைத்திருந்தவர்
வந்திருந்ததை உறுதிப்படுத்திக்கொண்ட பின்
அவர் அளித்ததை
நடுங்கும் கைகளோடு வாங்கிக்கொண்ட முதியவர்
நன்றி தெரிவித்தார் கம்மிய குரலில்.
எல்லோரும் போன பின் தன்னிடமிருந்த இட்டிலிகளில் இரண்டை
தன்னோடு சுருண்டு கிடந்த நாய்க்கும்
எதிர்ச்சுவரின் காத்துக்கொண்டிருந்த காக்காய்களுக்கும்
பகிர்ந்தளித்த பின்
மீதியிருந்த இரண்டை உண்ணத்தொடங்கினார்.
அந்தப்புறமாய் வந்த அரசுப்பள்ளி ஐந்தாம் வகுப்பு
'ஆ' பிரிவு மாணவன் அன்புச்சாமி
எப்பொழுதும்போல் கையோடு கொண்டுவந்திருந்த
வாழைப்பழங்கள் இரண்டை யந்தத் தாத்தாவிடம் புன்சிரிப்போடு தந்து
சாப்பிடுங்க தாத்தா, குண்டாயிடுவீங்க!” என்று அவரைப்
பரிவோடு பார்த்தபடி குறும்பாகச் சொல்லி
யவர் பிரியத்தோடு கையசைத்ததற்கு பதில் கையசைத்தவாறே
சற்றுத் தொலைவில் தெரிந்த பள்ளியை நோக்கித்
துள்ளல் நடை நடந்துசென்றான்.