LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, July 18, 2010

ஒற்றுமை, கணக்கு, ஆதிக்கவாதியும் அரண்மனைகளும் மற்றும் சில ரிஷியின் கவிதைகள் - வழியும் மொழியும், இன்மை, சொல்லின் ஆன்மா, அவரவர் மனைவியர்...

இம்மை

 ஒற்றுமை

சற்றுமுன்வரை
வெட்டுப்பழி குத்துப்பழி
என்றிருந்தவர்கள்
சடாரெனக் கரங்கோர்த்துப்
பாய்ந்தார்கள்
தன் பாட்டில் போய்க்கொண்டிருந்தவனை
பொது எதிரியாக்கி.

கணக்கு


அவர் ஒன்றைச் செய்தால்
அவர் மட்டுமே
அந்த ஒன்றை மட்டுமே
செய்கிறார்.
இரண்டைச் செய்தால்
இவர் மட்டுமே
அந்த இரண்டை மட்டுமே
செய்கிறார்.
ஆனால் இன்னொரு இவர் அல்லது
இன்னொரு அவர்
செய்யும் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே
பலவாக பலராகப் பல்கிப் பெருகியவாறு....
அறிந்தே செய்யும் கணக்குப்பிழையில்
அழிப்பானுக்கு ஏது வேலை?

ஆதிக்கவாதியும் அரண்மனைகளும்

நாலாவது தலைமுறையாக நடுத்தரவர்க்கத்தில் பிறப்பு ;
.நேற்றும் நாளையும் அரசுக்கல்லூரியில் தான் படிப்பு.
ஆனாலும் அடித்திழுத்துக்கொண்டுபோய்
நடுச்சந்தியில் நிறுத்தி, ஆதிக்கவாதி என்று
ஊர் கேட்க, உலகு கேட்க, சொல்லிசொல்லிசொல்லி
சவுக்கடி தந்தவாறே சென்று சேர்கிறார் சிலர் -
அப்பாவி உயிர்களை பலிகொடுத்து அமைத்த அடித்தளத்தின் மீது
ஆரோகணித்திருக்கும் தம் அரண்மனைகளுக்கு.

நாம் சக பயணியர் என்றே நம்பியிருந்தேன்

நாம் சக பயணியர் என்றே
இத்தனை காலமும் நம்பியிருந்தேன்

எனக்கும் உனக்கும் காலணிகள் இருக்கின்றன ;
சுடுவெயிலைச் சமாளிக்க.
ஆங்காங்கே மரநிழல்களில்
இருக்கைகளும் போடப்பட்டிருக்கும்...
நான் ராமேசுவரத்தைக்கூடப் பார்த்தது கிடையாது.
உனக்கோ நியூஜிலாந்து மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து
மாம்பலத்திற்குச் செல்வதுபோல்....
என்றாலும்,
நாம் சக பயணியர் என்றே
இத்தனை காலமும் நம்பியிருந்தேன்.

நம்மோடு வழியேகும் நாலாயிர லட்சம் பேருக்கு
கொதிக்கக்கொதிக்க வெறுங்கால் நடைப்பயணம்
காலமெல்லாம்.
குற்றவுணர்வோடு கண்களில் நீர்மல்க
“கூட்டுக்களவாணிகள் நாம்”, என்று கூறியவாறு
ஏறிட்டுப்பார்த்தால், நொடியில்
உனக்குரிய குற்றச்சுமையையும், தண்டனைச்சுமையையும்
என் தலையில் இறக்கிவிட்டு
ஆணியடித்து அசையாமலிருக்கச் செய்து
ஒரு சொடுக்கில் தரையிறங்கிய தனிவிமானத்தில்
ஏறிச்சென்றுவிடுகிறாய்

பளு தாங்க முடியாமல்
அடுத்த அடி எடுத்துவைக்க ஆதரவுக் கையின்றித்
திகைத்து நின்றுகொண்டிருக்கும் என்னருகே
நீ குறிபார்த்துச் சுழற்றியெறியும் கையெறிகுண்டில்
எத்தனைக்கெத்தனை நான் ரத்தக்கூழாவேனோ
அத்தனைக்கத்தனை எளிதாய்
சமூகசீர்திருத்தவாதியாகிவிடுகிறாய் நீ!

நாம் சக பயணியர் என்றே இத்தனை காலமும்
நம்பிக்கொண்டிருந்தேன்...


 சொல்லின் ஆன்மா

ஒரு மயிலிறகைப்போல்
அத்தனை மிருதுவான சொல் அது!
விரல்களால் வருடினால் வலிக்குமோவென
உயிரால் நீவித்தரப்பட்டு
பார்த்துப்பார்த்து இடம்பொருத்தப்பட்டு
காலத்திற்குமாய் பத்திரப்படுத்திவைக்கப்பட்டது கவிதையில்.
ஒற்றை மயிலிறகு ஓராயிரம்கண் தோகைவிரித்து
சுற்றிச் சுழன்றாடிய ஆட்டத்தில்
சொக்கி நின்றதென்ன ! சொர்க்கமானதென்ன ! !
சொல்லாட பொருளாட
மயிலாட மழையாட
கானாட கவியாட

தத்தரிகிட தித்தோம் !
தளாங்குதக தித்தோம் ! !

மழைபொழிய மனம்வழிய
அலையும், காற்றும் வீச
ஆலோலக்கனவு பேச _

தத்தரிகிட தித்தோம் !
தளாங்குதக தித்தோம் ! !

கண்ணீரில் மனம் வெளுக்கக்
காற்றானதென்ன ! ஊற்றானதென்ன!.
காலமே தானாகிய மாயம்தான் என்ன!!

தத்தரிகிட தித்தோம் !
தளாங்குதக தித்தோம் ! !

_”கழிசடையே, காலொடித்துவிடுவேன் ஆடினால்”,
எனக் கூவியபடி
கம்பும், கத்தியுமாய் வந்து வழிமறித்துக்
கிழித்தெறிந்தார்கள்,
காறித்துப்பினார்கள்,
தப்பித்தவறியும் பேசிவிடலாகாது எனக்
குரல்வளையைத் திருகி நெறித்தார்கள்,
காலால் மிதித்தார்கள்,
கொளுத்திப் போட்டார்கள்....

என்றும் பழகாத பகை கண்டு
திகைத்து நின்ற கவியை
கைதொட்டு அழைத்துக்
கண்சிமிட்டியது
கவிதையின் ஆன்மாவாகிய
சொல்லின் சொல்!.

வாக்குகளின் வலிமை

இருபதாண்டுகளுக்கு முன்னர் கசிந்த விஷவாயு இன்னமும்
தீராத்தாகத்தோடு உறிஞ்சித்தீர்த்துக்கொண்டிருக்கிறது-
குறிப்பாக ஏழைகளின் உயிர்களை
இன்றைய மரபணுமாற்றப் பயிர்களும்.

வாக்குகளின் வலிமையில் சில குடும்பங்களுக்கு இமயமலைகள்
உடைமையாகிவிடுகின்றன.

ஒருவேளை பறவைகளின் இறக்கைகளும்கூட

ஊசிப்போன மருந்திலும் ஊசியிலும்
ஊசலாடிக்கொண்டிருக்கும் மனித உயிர்களின் மீட்பராக
கூவிக்கூவிக் கடைவிரித்திருப்போரிலும் கலந்திருப்பார்
கொள்ளை லாபமே குறியாய் சிலர்.

விற்பனைப்பையின்றியே அரண்மனைகளில்
அமர்ந்தது அமர்ந்தபடி ஆள்சேர்த்துக்கொண்டிருக்கும்
விளம்பரப்பிரதிநிதிகளிடம்
(அன்னாடங்காய்ச்சிகளுக்கென்று சிலர் ; அம்பானிகளுக்கென்று சிலர்)
ஆயிரக்கணக்கில் வந்து ஆயிரக்கணக்கில் தந்து
பெற்றுச் செல்கின்றனர்
கத்தரித்து ஒட்டப்பட்ட சிறு பொட்டலங்களில்
உள்ளுறை ஆன்மாவை.

அவரவருக்கான குற்றவுணர்வுகளிலிருந்தெல்லாம் விடுபட
அதி எளிய வழி
அடுத்தவரை குற்றங்களின் கட்டாயக்
 குத்தகைக்காரர்களாக்கிவிடுவது.

ஒரு சொல்லின் இன்மையில் உயரும் மனிதகுலம் என்பது உண்மையானால்
உலகின் அதி உன்னத அற்புதம் அதுவாகத்தான் இருக்கமுடியும்
என்று ஏங்கிச் சோரும் நெஞ்சில் உருள்கிறது
கொஞ்சமே கொஞ்சம் படித்த ’போர்ஹே’யின் ’அலெஃப்’.

பெண்
சிலருக்குக் கண், சிலருக்கு மண்
இவருக்கு மயிர், அவருக்கு பயிர்
இன்று வரம், நாளை மரம்
சொல்லுக்கு மைல்கல், செயலுக்கு மண்ணாங்கட்டி
ஒரு கணம் பத்தரைமாற்றுத் தங்கம், மறுகணம்
பித்தளைக்கும் மங்கலாகும்....

மண்ணும் வீணல்ல, மயிரும் வீணல்ல.
மரத்தின் பெருமை ஊரறியும், உலகறியும்.
பித்தளைப் பாத்திரங்களில் தான் பெருமளவு தயாராகிவருகிறது
வயிற்றுக்குச் சோறு.
மைல்கல்லோ, மண்ணாங்கட்டியோ -
மண்ணிலும் கல்லிலுமே நிலவளம் நிரூபணம்.
சொல்லித் தீராதிருக்கும் இன்னும் பிறவேறும்.
எதுகைமோனைக்குள் அடங்கிடாது இகவுலகும் அகவுலகும்.
வரிகளுக்குள் ஊடுருவினால் தானே புரியும் உயிரின் மகத்துவம்!