இருண்மை பாதி - எளிமை பாதி .......
நானாவித தருணங்கள் நிகழ்ந்தும் நிகழாமலுமாக
ஆனபடியால் நான் நானாகியது
உண்மையாக பாவனையாக
ஆகுமாம் பாவனை யுண்மையாகவும் உண்மை பாவனையாகவும்
ஒரு கை தட்டினால் கேட்கும் கேட்காத ஓசை
கைதட்டல் என்பதே ஓருடம்பின் இருகைகளாகத்
தானிருக்கவேண்டுமா வெனுங் கேள்வி
விதண்டாவாதமென்பாரும்
வாழ்வியல் தர்க்கமென்பாரும்
நமக்கு வெளியேயும்
இடையேயும்
ஆக
நான் நீயாக நீ நானாக
அவனாக இவளாக எதுவாகவுமாகத்
தானோ ஏனோ வானம் வசப்படாதொழிய
துளிகணத்தின் தொலைவு எளிமையா
இருண்மையா வென்றொரு
விடையறியாக் கேள்வியெழுதுங் கவிதை
கடைவிரித்துக்காத்திருக்கும் இருண்மையெளிமை
வழியில்
காலாற நடைபழகியவாறிருக்கும் பொழுதெலாம்
கூட வரும் மொழிபுழங்கும் சொற்களெல்லாம்
சொர்க்கமாக
சொப்பனார்த்தங்களாக
தெய்வம் என்ற சொல் எளிமையா இருண்மையா
என்ற கேள்வியென்றும் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்க
உண்டென்பார் பக்தர்
இல்லையென்பார் பகுத்தறிவாளர்
அவ்வாறேயாவார்களா அன்றுமின்றும்
எனக் கேட்டுச் சிரிக்கும் சொல்லும் சொல்லும்
சொல்லாச் சொல்லும்
எல்லாக் காலமும் எளிமையிருண்மை
யிரண்டறக் கலந்ததாய் துள்ளிக்கொண்டிருக்கும்
மனதின் கண்களுக்குக் காட்சிப்பிழைகளும்
காணருந் தரிசனமாக.....
கழிந்தோடிய வருடங்களில் ஒரு நாளின் ஒரு கணத்தில் நான் படிக்கக் கிடைத்த பறவையின் பெயர்
எனக்குப் பழகியதாக
இன்னொருவருக்குப் பிடிபடாததாக
அட, அப்படித்தான் இருக்கட்டுமே
அதனாலென்ன....?
No comments:
Post a Comment