Thursday, June 9, 2022

அடிவானப்பறவை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடிவானப்பறவை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தினமொரு சிறகிழையை மட்டுமாவது
எனக்காக உயரத்திலிருந்து மிதக்கவிடு என்று
பறவையைக் கேட்பது
பைத்தியக்காரத்தனம்…..
உயரத்தே ஒரு புள்ளியாகச் செல்லும் பறவை
யெலாம் தனதாய்க் கருதி
ஒரு சிறு சிறகுதிர்த்துச் செல்லாதாவென
சதா அண்ணாந்து பார்த்திருந்து
கழுத்துவலிக்கு அமிர்தாஞ்சனைத்
தடவிக்கொண்ட இடத்தில்
சுளீரென எரிவதில்
இரட்டிப்பாகும் இழப்புணர்வு.
இறங்கிவாராப் பறவையின் காலில்
அதற்கேயானதொரு மடலைக்
கட்டியனுப்பவும் இயலாது.
பறவைக்குப் படிக்கத் தெரிந்த மொழி
யெது?
மொழியே மனிதத்துயரின் மூலம் என்றால்
வழிமொழியுமோ பறவை?
பறவையின் அழகில் மனதைப் பறிகொடுத்ததோடு
அது எனக்கேயெனக்காய் பேசுமோ என்ற
எதிர்பார்ப்பும் சேர _
சிறகடித்துக்கொண்டிருக்கும் பறவையின்
ஆகாயமோ
விரிந்துகொண்டே போகிறது.
ஒருபோது சற்றே யப் பறவை தாழப்பறந்துவர
பேரதிர்வில் மனம் பிளக்க
’பச்’சென்று எச்சமிட்டுச் சென்றது பறவை
உச்சிமண்டையில்.
பச் எச் உச் மட்டுமே நிச்சயமான
மிச்சமாக….
அலகில் குச்சிபொறுக்கிச்செல்லக்கூடக்
கீழிறங்கிவராப் பறவையின் இறக்கைகளை
உடைமைகொள்ளும் வழி தெரியாமல்
அழப்பழகும் மனதிற்கு
சிறகிலாப் பறவையை ஒருநாளும்
பார்க்கப் பிடிப்பதில்லை.

No comments:

Post a Comment