Thursday, June 9, 2022

மெய்நிகர் உண்மை _ ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மெய்நிகர் உண்மை

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
எல்லோரும் எல்லோருடனும்
நட்பாயிருக்கிறார்கள்.
யார் என்ன சொன்னாலும்
‘லைக்’ இடுகிறார்கள்.
எதிரெதிர் கருத்துடையவர்களோடு
தோளணைத்துப் புன்சிரித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
நேரெதிர் கருத்துடையவர்களை
ஒரே தராசுத்தட்டில் வைத்து
சரிசமாகப் பாராட்டுகிறார்கள்.
சில கொச்சை வார்த்தைகளை
தன்னிசையாயும் திட்டமிட்டரீதியிலும்
தெறிக்கவிட்டு
எதிர்க்கருத்தின் குரல்வளையை
நெறித்துவிடுவாரையும்
அந்த நெறிக்கப்படும் குரல்வளைகளின்
சொந்தக்காரர்களையும்
ஒரேயளவாய்ச் செல்லங்கொண்டாடி
‘லைக்’ குறியிடுகிறார்கள்;
’லவ்’ குறியிடுகிறார்கள்.
தன்வய முன்னிலைப்படுத்தல்களுக்கும்
வன்மம்நிறை அவதூறுகளுக்கும்
குந்துமணியளவு வித்தியாசமும் பாராமல்
புன்னகைக்கும், பொக்கைவாயை விரியத்
திறந்து சிரிக்கும் ‘இமோஜி’க்களைப்
பரிசளிக்கிறார்கள்.
தார்மீகக்கோபமென்பாரையும்
தட்டிக்கொடுக்கிறார்கள்
தரங்கெட்ட சொல்லுதிர்ப்பாரையும்
தோளணைக்கிறார்கள்
பொல்லாங்கு சொல்வார்,
போக்கிரிகள்,
பச்சைப் பொய்யர்கள்
பல்வண்ணக் கதைஞர்கள்
பதாகைகளை ஏந்தியேந்தியே சமூகப்போராளிகளாகிவிடுவோர்
செத்த பாம்பை சுழற்றியடித்து
சுத்த வீரர்களாகிவிடுவோர்
சங்கநாதம் தம் கண்டத்திலிருந்தே
எழும்புவதென்று சாதிப்போர்
தடுக்கிவிழுந்து பட்ட காயத்தின்
தழும்பை
விழுப்புண்ணென இட்டுக்கட்டும்
வழியறிந்தோர்
அழும்போதும் செல்ஃபியெடுக்கத்
தவறாதவர்கள்
அப்பிராணிகளாகக் குறிபார்த்து
அம்பெய்துவோர்
அந்திவேளையழகை யனுபவித்து
சிந்துபாடியபடியே
அவனை யிவளை உந்தித்தள்ள வாகான
மலையுச்சியைத் தேடி
யலைந்துகொண்டிருப்பவர்கள்
எல்லோரும்
எல்லோருடைய நட்புவட்டத்திலும்
நல்லவிதமாய்ப் பொருந்தி
நல்லவிதமாய் ‘லைக்’கிட்டவாறு
அன்பின் வழியது உயிர்நிலை யெனும்
உன்னத இலக்கையெட்டிவிட்டோமா?
அஞ்ஞானம் நீங்கியெல்லோரும் ஆன்ற ஞானநிலையெய்திவிட்டோமா…
சின்னதாய் உதிக்கிறது சொல்ப ஆனந்தம்…
இன்னொரு நாட்டில் போர் ஆரம்பம்.
இரண்டு சின்னஞ்சிறு செய்திகளில்
சிறுநீர் கழிக்கவேண்டுமென்ற இரு
சின்னஞ்சிறுகுழந்தைகள்
நாயடி பேயடி அடிக்கப்பட்டிருப்பது
தெரியவருகிறது.
சின்னஞ்சிறு சிறுமியும் வளரிளம்பெண்ணும்
அறிந்தவர் தெரிந்தவர் உற்றார் உறவினரால்
அடைக்கலம் புகுந்த ஆதரவில்லத்துப்
பாதுகாவலரால்
இரண்டுவருடங்களுக்கு பாலியல் வல்லுறவு
செய்யப்பட்டிருப்பதை இன்றும் நேற்றும்
இரண்டு நாளிதழ்களில் வாசிக்க நேர்கிறது….
இன்னுமின்னுமின்னுமாய்…..
எல்லோரும் எல்லோருடனும் ஒரேயளவாய் நட்பு பாராட்டியவாறே லைக்கிட்டுக்கொண்டிருக்கும்
டைம்லைன்கள்
இன்னுமின்னுமின்னுமாய்…..

No comments:

Post a Comment