Thursday, June 9, 2022

உறக்க அரசியல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உறக்க அரசியல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தூக்கத்தில்தான் எத்தனையெத்தனை
வகைகள்!
குட்டித் தூக்கம்
கோழித்தூக்கம்
கும்பகர்ணத் தூக்கம்….
அப்பிய ஒப்பனைகளோடு
வெளுப்புப்பெண்களே கதாநாயகிகளாய் _
கதாநாயகிகளின் தங்கைகளாய்
தோழிகளாய்
திடீரென பூங்காவில் தட்டாமாலை சுற்றும்
கல்லூரி மாணவிகளாய்_
கண்கொத்திப் பாம்பாய் கதாநாயகனைக்
கவ்விச்செல்லக் காத்திருக்கும்
வில்லியாய்_
காபரே நாட்டியக்காரியாய்_
கணநேரமே கூட்டத்தில் முகங்காட்டும்
கைங்கரியக்காரியாய் என _
கட்டங்கட்டிக் காட்டும்போதெல்லாம்_
பார்த்துப்பார்த்து அண்டை அயல்
மாநிலங்களிலிருந்து
அறிமுகஞ்செய்யும்போதெல்லாம் _
அக்கடா வென்று பார்த்துக்
கொண்டிருந்தவர்கள்
இத்தனை ஆண்டுகளாக
எக்கேடோ கெட்டுப்போகட்டும்
என்றிருந்தவர்கள்
இன்று
இயல்பான தேன்கருநிறப் பெண்கள்
தமிழ்ப்படக் கதாநாயகிகளாகாதது ஏன்
என்று
துடித்தெழுந்து கேட்கும் கேள்வியின்
வரியிடை வரிகளாய்
படரும்
காரியார்த்தமான
பொய்த்தூக்கமும்
பொய்விழிப்பும்
போல் வேறும்.........

No comments:

Post a Comment