Monday, June 7, 2021

மர்மக்கிளிவாழ்க்கை ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

  மர்மக்கிளிவாழ்க்கை

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
”எத்தனை காலம் என்று தெரியவில்லை
ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருக்கும்
ஒரு குகையில்
சிறைப்பிடிக்கப் பட்டிருந்தேன்.
எப்படியோ தப்பித்துவந்திருக்கிறேன்.
எனக்கு உண்ண கொஞ்சம் தானியம் கொடு –
நான் அவசியம் உயிர்வாழவேண்டும்’
என்றது அந்தப் பச்சைக்கிளி.
ஒரு கிண்ணத்தில் அரிசியும் பருப்பும்
கொண்டுவந்து தந்த பின்பு
’அவசியம்’ என்பதை விளக்கமுடியுமா?’
என்று கேட்டதற்கு
’வசியத்தின் எதிர் அல்ல’ என்று
கீச்சுக்குரலுயர்த்தி விளக்க முற்பட்டு
பின் தன் குட்டி மண்டையை இப்படியு
மப்படியும் ஆட்டி
"உன் வாழ்க்கை உனக்கு அவசியம் போலவே
எனது எனக்கு" என்று
நறுக்கென்று சொல்லிக் கிளம்பி
வேகம் கூட்டி
விர்ரென உயரே பறந்த பறவைக்கு
சிறகுகளிருக்கவில்லை யென்பது
சிறிதுநேரத்திற்குப் பிறகே உறைக்கிறது.....

No comments:

Post a Comment