Monday, June 7, 2021

ஆழிசூழ் உலகும் ஆயிரமாயிரம் அனர்த்தங்களும் ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 ஆழிசூழ் உலகும்

ஆயிரமாயிரம் அனர்த்தங்களும்

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
’மந்திரமாவது சொல்’ என்றேன்
’மனப்பாடமாகத் தெரியாதே’ என்கிறார்கள்.
’கற்றது கையளவு’ என்றேன்
’சற்றே பெரிதாயிருக்கும் என் புத்தகம்’
என்கிறார்கள்.
’இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்றேன்
’நாளை உனக்கு அறுபத்திநான்கு வயதாகப்போகிறது
– மறந்துவிடாதே’
என்கிறார்கள்.
’வானம் வசப்படும்’ என்றேன்
’வேணாம் விலைபோகாது’
என்கிறார்கள்.
’உடுக்கை இழந்தவன் கைபோல’ என்றேன்
’படுக்கை என்று தொடங்கவேண்டுமல்லவா
அடுத்த வரி’
என்கிறார்கள்.
’மாங்காய் மடையா’ என்றேன்
’இல்லை, மூலைக்கடையில் கிடைக்கும் காய் – இது கூடவா தெரியாது’
என்கிறார்கள்
இதற்குமேல் தாங்காது என்று
வாய்மூடி
வழிசென்றவாறு.
ஆழிசூழ் உலகென்றானபின்
நீரைக்கண்டு பயந்தழுது
ஆவதென்ன? கூறு……

No comments:

Post a Comment