Monday, June 7, 2021

ராகவிகாரங்கள் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ராகவிகாரங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒவ்வொரு கணமும் அருள்பாலிக்கப்பட்டதாக
பாவிக்கும் மனதில்
மோதி மோதி அறைகிறது
தன்னை வாழ்வின் பலிகடாவாகவே பார்க்கும்
சக உயிரொன்றின் பிலாக்கணம்.
அதன் கொழுத்த பணப்பையின் முன்
என் சுருக்குப்பையின் கால் அரையணாக்கள்
ஒன்றுமேயில்லை.
ஆனாலும் அவை எனக்குச் செய்துகாட்டும்
செப்பிடுவித்தைகளை
ஆனானப்பட்ட கோடீஸ்வரர்களாலும்
ஈடுசெய்யவியலாது.
காற்றூதும் புல்லாங்குழலில் வாழ்வின்
ஊற்றுக்கண் திறக்க
சொக்கிநிற்கும்போது
தென்றலில் நழுவித் தன் தலைமீதொரு
சின்னஞ்சிறு இலை விழுந்ததற்காய்
என்றைக்குமாய் அங்கலாய்த்துக்கொள்ளுமவளின்
தன்னிரக்கம் அச்சுறுத்துகிறது.
தனக்குத் தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளாலும்
அந்த இலையை அவள் தூற்றித் தீர்த்தும்
அவள் அழுகை குறையவில்லை.
மரத்திற்குத் தன்னைக் கண்டால் இளக்காரம் என்கிறாள்;
மரத்திற்குத் தன் மீது மிகவும் வெறுப்பு என்கிறாள்.
மரத்தை சிரத்சேதம் செய்வதுதான் சரி என்கிறாள்.
அவளே தொலைக்காட்சி சீரியலில் மரம்
வெட்டப்படக்கண்டு அழும் கதாநாயகியோடு சேர்ந்து தானும் கண்கலங்குகிறாள்.
மறந்தும் தெருவோரம் இரந்திரந்து
இறந்து கொண்டிருக்கும்
மனிதர்களைப் பற்றி ஒரு வார்த்தையும்
பேசுவதில்லை.
பேசவில்லை என்பதால் நினைக்கவில்லை என்று
சொல்லமுடியுமா என்ன? என்று
தன் போக்கில் கேட்கும் மனதைத்
தூக்கிச் சுமப்பது பெரும்பாடுதான்.
சதா எதையாவது சுயபரிதாபத்தோடு பேசிக்கொண்டேயிருக்குமவள்
மௌனித்திருக்க நேரும் சமயம்
மிகத் தனியாய் உணர்வாளோ?
இன்னொருவரோடு பேசும்போதெல்லாம்
என்னிடம் பேசும் வாய்ப்பை நான் இழக்கிறேன் என்கிறேன்.
இது என்ன இழவு என்று அவள்
புருவஞ்சுருங்குவதைப் பார்க்க
எரிச்சலாகவுமிருக்கிறது;
வருத்தமாகவுமிருக்கிறது.
ஒலிப்பது தம்பூராவின் ஆதாரசுருதியா
அல்லது
ரம்பக்கழுத்தறுப்பா என்று
எதைவைத்து நிர்ணயிப்பது?
ஒரு குரலைத் திரும்பத்திரும்பக் கேட்டாகவேண்டிய
அவசியமில்லாதவரை
பரணில் போட்டுவைக்கலாகும் இந்தக் கேள்வி
எதிர்பாராத் தருணங்களில் உருண்டிறங்கி உச்சிமண்டையில் தாக்கி
நிலைகுலையச்செய்துவிடுகிறது.

No comments:

Post a Comment