Monday, May 31, 2021

கவிதையின் சாவி - ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதையின் சாவி

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
முக்காலத்தையும் ஒரு முடியாச்சமன்பாட்டுக்கணக்கிலான
விகிதாச்சாரத்தில் குழைத்தெடுத்து
காலரைக்கால் கணங்களையும் குமிழுணர்வுகளையும்
கற்களாகத் தலைக்குள் அடுக்கித்
தடுக்கிவிழுந்தெழுந்து தானே சுமந்து எடுத்துவந்து
பின்னப்பட்ட மனதின் துண்டுதுணுக்குகளையும்
மனதின் மிக நைந்து அறுந்து தொங்கும் நூற்பிரிகளையும்
சுவராக்கிக் தரையாக்கிக் கூரையாக்கிக் கட்டும்
கவிதைவீட்டுக்குக்
கதவிருப்பதே அபூர்வமாக,
கருத்தாய் சாவி கேட்கிறாய்
அருவ மேடுபள்ளங்கள் அறைகளாக
மூடியிருக்கும் உன் என் உள்ளங்கைகளில்
பலநூறு திறவுகோல்கள்
உருக்கொண்டவாறிருக்க
முறிந்த சிறகுவிரித்துப் பறந்து உள்ளே புகத்
தத்தளித்துக்கொண்டிருக்கும் கவியின்
வீட்டுக்குள் குவித்துவைத்திருப்பதெல்லாம்
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கனவுகளும்
கரையான் அரித்த நினைவுகளுமேயன்றி
கள்ளப்பணமல்லவே.
உள்ளபடியே
உள்ளம் விரும்பி உள்நுழையும் எவருமே
அழையா விருந்தாளியாகமாட்டார் என்பதைத்தான்
இதுவரை எழுதப்பட்ட கவிதைகளுக்கெல்லாம்
சுயமாய் நியமித்துக்கொண்ட சம்பளமில்லா முகவராய்
உறுதிகூறமுடியுமேயல்லாமல்
திறவுகோலை _
சரியாகச் சொல்வதென்றால் சிறுகாற்றிலும்
பெரும்புயலிலும்
இரண்டறக் கலந்திருக்கும் திறவுகோல்களைக்
கேட்பவருக்கு
என்ன தரமுடியும் என்னால்…..

No comments:

Post a Comment