Monday, May 31, 2021

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பிரபஞ்சமே ஒரு கடற்கரையாக
பஞ்சுமணலில் தாவித்தாவி ஓடித்
தன் குட்டிக்கரங்களால்
கைகொள்ளாமல் பொறுக்கிக்கொண்டிருக்கிறாள் சிறுமி
கிளிஞ்சல்களாய் மினுங்கிக்கிடக்கும்
நிலவுகளை
சூரியன்களை
நட்சத்திரங்களை
புதுப்புதுக் கோள்களை....
48 மணிநேரங்களை ஒரு நாளாகக் காட்டும் கடிகாரத்தை
அவள் படுத்திருந்த பாயின் அருகில்
வைத்துவிட்டுச் சென்ற தேவதை
பகலை இரவாக்கவும் இரவைப் பகலாக்கவும்
அவளுக்கு ஒரு மந்திரம் எழுதப்பட்ட தாளையும்
மாயக்கோலையும்
உயரத்திலிருந்து போடவும் செய்தது.
அவள்மீது எக்குத்தப்பாகப் பட்டுவிடாமல்.
அவ்வப்போது அந்தச் சிறுமி ஆகாயத்தில்
தலைகீழாக நடந்துகொண்டிருப்பது
இங்கிருந்து பார்க்க தலைக்கு நேர்மேலாகவும்
தொலைதூர அடிவானத்திலும் தென்படுவதாக
பூமிக்கோளத்திலிருப்பவர்கள் பப்பாதி பயமும் பரிகாசமுமாய்
பேசிக்கொள்கிறார்கள்.
அங்கிருந்து கீழே பார்க்க
அந்தச் சிறுமிக்கு இவர்கள் எப்படித் தெரிகிறார்கள்
என்று கேட்டபோது
சிறுமி தந்த பதில்
அவள் கலகலவென களிபொங்கச் சிரித்ததில்
காதுகளைக் கடந்து குதித்தோடிவிட்டது!

No comments:

Post a Comment