Sunday, September 13, 2020

ஒரு கதையின் கனபரிமாணங்கள் ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 ஒரு கதையின் கனபரிமாணங்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

சீக்கிரம் தூக்கம்வந்துவிடும்போலிருக்கிறது
சின்னதாக ஒரு கதை சொல்லேன்”, என்று கேட்ட பிள்ளைக்கு
என்ன கதை சொல்ல என்று
கணநேரம் குழம்பினாள் தாய்.

சீக்கிரம் வந்துவிடப்போகும் தூக்கத்தில் சிக்கிக்கொண்டிருந்தது அந்தச் சின்னது.

குழந்தையை மட்டுமா சமீபித்துக்கொண்டிருந்தது தூக்கம்?
அவளையும்தான்.

இருவரையும் நெருங்கிவந்துகொண்டிருக்கும தூக்கங்கள்
ஒன்றையொன்று குறுக்குவெட்டிக்கொள்ளும் புள்ளியில்
முடிந்துவிடவில்லையென்றால் பின்
அதிலிருந்து கிளைபிரிந்து எதிரெதிர்த் திசைகளில் போய்க்கொண்டிருக்கும்
தூக்கங்களிலும் சிக்கிக்கொண்டிருப்பது அதே கதையின் நீட்சிதான்
என்று எப்படிச் சொல்ல முடியும்?

பாதி மூடிய பிள்ளையின் கண்களையே பார்த்தபடி
இரண்டு பூக்கள் மலர ஆரம்பித்ததாகக் கதை சொல்ல ஆரம்பித்த அம்மா
ஒன்று சின்னது இன்னொன்று பெரியது என்று சொன்னதைக் கேட்டு _

இரண்டுமே அழகு,
இரண்டுமே ரொம்ப வாசனை
என்று நாக்குழறக் கூறி கதையை நிறைவுசெய்து
உறங்க ஆரம்பித்தது பிள்ளை.

No comments:

Post a Comment