Sunday, September 13, 2020

மம்முட்டிக்கு வயதாவதில்லை! - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மம்முட்டிக்கு வயதாவதில்லை!

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


மம்முட்டி

மனதிற்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பின்
முதல்படியிலேற முற்படும் மா கனவு.

மம்முட்டி நடிக்கும் படங்களில் மற்றவர்களின் முகங்களும்
இயக்கங்களும் மங்கலாகவே தெரிவது
இன்றல்ல நேற்றல்ல.

மம்முட்டி காற்றுபோல்;
அவரவருக்கு மட்டும் என்று எண்ணுவதைக் காட்டிலும்
அபத்தம் வேறிருக்க முடியாது.

மம்முட்டி முழுநிலவுபோல்.
மேலேறிச்சென்று தொட்டுணரவேண்டும் என்ற நினைப்புக்கு
மிகு தொலைவில்.

மம்முட்டி யொரு கேட்கத் திகட்டாத
இசைக்கோர்வை.
செவிமடுக்கும் நேரம் அது துயரார்ந்த இசையா
துள்ளல் இசையா என்று பிரித்தறிய முற்பட
மறந்துபோய்விடுகிறது மனம்.

வில்லன் மம்முட்டியும் நல்லவனே
அவன் மம்முட்டியாக இருப்பதால்.

மம்முட்டி யொரு குறியீடு
மனதை நெகிழச்செய்யுமெல்லாவற்றிற்கும்.

மம்முட்டி யொரு கவித்துவ மொழிப்பயன்
ஆன்மாவை தூய்மையாக்கும் அனைத்திற்கும்.

மம்முட்டிக்கு வயதாவதில்லை.

மம்முட்டியைப் பார்க்கும்போதெல்லாம்
வருடங்களால் ஆட்டிப்படைக்கப்படாத
அருவவெளியொன்றை நோக்கி
இன்றின் முழுப்பிரக்ஞையோடு
இன்றிலிருந்து வெளியேறும் நான்…..

No comments:

Post a Comment