Sunday, September 13, 2020

கவிதையாதல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விதையாதல்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


ஒரு சொல் என்னைப் பின்தொடர்ந்தவாறே….
அல்லது, நான் அதை விட்டு விலகிச்செல்கிறேனா…?
ஒரே சீரான இடைவெளி பராமரிக்கப்படுகிறது
தண்டவாளங்களிலும்……
அவ்வுலகில் அரைவட்டங்களும் பொருட்படுத்தப் படும்என்று சொல்லிச் சென்ற கவி ராபர்ட் ப்ரவுனிங்கை(என்று ஞாபகம்) நான் முழுதாகப் படித்தேனில்லை....
என்றாலும், அவருக்கு என் நன்றி உரித்தாகிறது.
இத்தனை வார்த்தைகளை இறைத்த பின்னரும்
என்னைப் பின் தொடரும் அந்தச் சொல்லின்
ஒலி வரி வடிவங்கள்
கனவுங்கற்பனையுமாய்.....
இருந்தபோதும் அந்தகாரத்திலிருந்து அதன் கண்கள்
என் மனதின் முதுகை உறுத்திக்கொண்டேயிருக்கின்றன.
சிறு சிறு திருப்பங்களில் அதன் மூச்சுக்காற்றை
என் பின்கழுத்திலும் காதுமடல்களிலும் உணரமுடிகிறது.
சமயங்களில் முதுகைச் சுரீரெனத் துளைத்து
உள்ளிறங்கி இலவம்பஞ்சின் இதமாய் வருடித் தந்து
பிரமிப்பில் நான் திக்குமுக்காடி நிற்கும் நேரத்தில்
சமச்சீராகப் பராமரிக்கப்படும் தொலைவிலிருந்து
Zoom
செய்யப்பட்ட தன் விழிகளைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு
என்னைத் தொடரும் சொல்
வழித்துணையாய்
வாழ்வாய்

 

No comments:

Post a Comment