Sunday, September 13, 2020

குறையொன்றும் இல்லை! ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 குறையொன்றும் இல்லை!

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அவ்வப்போது இம்மாதிரி ஆதங்க வெளிப்பாடுகள் பதிவுசெய்யப் படுவதைப் பார்க்கிறேன்.


அதாவது, என் இலக்கியப்பணிக்குப் போதுமான அங்கீகாரம் கிடைக்க வில்லை என்பதாக இன்னொரு வர் வெளிப்படுத்தும் ஆதங்கம்.


இம்மாதிரி ஆதங்கங்கள் வெளிப்படுத்தப்படுவதிலும் அரசியல் உண்டு என்பதையும் நான் அறிவேன். வேறொருவரைக் குறை சொல்லவோ, தன் பொருட்டோ, தனக்குப் பிடித்த இலக்கிய வாதியை முன்னிறுத்துவதற்காகவோஅவருக்கு அடை யாளம் கிடைக்கவில்லை, இவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லைஎன்று ஒருவிதபகடைக்காய்நிலையில் ஒரு படைப்பாளியைச் சுட்டுவது.


இதை அக்கறையோடு சொல்பவர்களும் இருக்கிறார்கள்.


ஆனால், இந்த ஆதங்கம் தேவையில்லைமுக்கியமாக, என் பொருட்டு தேவையில்லை என்பதே என் கருத்து.

அது சரி, இலக்கியப் பணி என்று ஏதேனும் இருக்கி றதா என்ன?

ஒரு கவிதையை எழுதும்போது, அது ஒரு வாசிப் போராக என்னால் முதல் தரமான கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும்கூட, எனக்குக் கிடைக்கும் வடிகாலும், வலி நிவாரணமும், பரவசமும் சொல்லுக்கப்பாற்பட்டது.

முழுக்க முழுக்க என் சுயநலத்திற்காகத்தான் எழுது கிறேன்.

பின் ஏன் என் எழுத்தைப் பிறர் பார்க்கப் பதிவு செய்யவேண்டும்? பிரசுரிக்கவேண்டும்?

ஏன் பதிவு செய்யலாகாது, பிரசுரிக்கலாகாதுஎன்பதைத் தாண்டி என்னால் இதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

ஆனால், படைப்பு என்பது பணியல்ல என்பதே என் புரிதல்; நிலைப்பாடு.

குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக ஓர் இலக்கியப் படைப்பு எழுதப்பட்டாலும் கூட அதை எழுதுவதில் சம்பந்தப்பட்ட எழுத்தாளர் அல்லது கவிஞர் உணரும் நிறைவுதான் அதன் நோக்க நிறைவேற் றத்தைவிட மேலோங்கியிருப்பது.

சிற்றிதழ்களில் விரும்பி எழுதுபவர்கள்உலகப் புகழின் மீதோ, அங்கீகாரத்தின் மீதோ அபிமானம் கொண்டா எழுதவருகிறார்கள்? அவர்களுக்கு நிலவரம் தெரியாதா என்ன? பின், ஏன் தொடர்ந்து அதிலேயே எழுதிக்கொண்டிருக்கிறார்கள்? சிற்றிதழ்களின் வாசகராக, படைப்பாளியாக இருக்கப் பிடிக்கிறது. அதனால்தான்.

சிற்றிதழ் எழுத்தாளர் என்பதில் ஒரு 'கெத்து' காட்டிக் கொள்ள முடியும். அதனால்தான்என்று சிலர் சொல் லக் கேட்டிருக்கிறேன். ஆனால், அப்படிச் சொல்பவர் கள் பெரும்பாலும் சிற்றிதழில் எழுதுபவர்களின் தரம் அறிந்து அந்த அளவு தங்களை உயர்த்திக் கொள்ள விரும்பாதவர்களாய், இயலாதவர்களாய் இருப்பார் கள்.


சிற்றிதழ்களில்வெத்துஎழுத்துகள் இலக்கியப் படைப்பாக இடம்பெறுவதில்லையா என்ன?


கண்டிப்பாக இடம்பெறுவதுண்டு. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், சாதாரண எழுத்தை அடர்செறி வான இலக்கியப் படைப்பாக சிற்றிதழ் வாசகர்களை வெகுகாலம் மூளைச்சலவை செய்துகொண்டிருக்கவியலாது.


கவிதை எழுதுபவர் கவிதையைப் பற்றிப் பேசவேண்டியது அவசியமா? சிலருக்கு அது அவசியமாகப் படுகிறது. பேசுகிறார் கள். சிலருக்கு உரையாடல்களில், கலந்துரையாடல்களில் இயல்பாகவே ஆர்வமுண்டு்.


எனக்கு அது அவசியம் என்று தோன்றவில்லை.


ஒரு கவிதையைத் தனியாக அமர்ந்து அதன் ரகசியப் பேழைகளைத் திறந்துபார்ப்ப தற்கும், அரங்கில் வகுப்பெடுப்பதாய், போதிப்பதாய் அந்த ரகசியப் பேழைகளை அத்தனை பேரின் முன்னிலையிலும் கவிழ்த்துக்கொட்டுவதற்கும் மிக அடிப்படை யான வித்தியாசம் இருப்பதாய் உணர்கிறேன்.


ஆனால், ஒரு படைப்பாளி இலக்கியத் திறனாய்வாளராகவும் செயல்படும்போது அவர் அதிகம் அறியப்படுகிறார் என்று தோன்றுகிறது.


அறியப்படுதல், அதிகம் அறியப்படுதல் என்பதற் கெல்லாம் என்ன அளவுகோல்? Exit Poll மாதிரி ஏதேனும் இருக்கிறதா என்ன? Exit Poll நடந்தாலும் அது அறவே அரசியலற்றதாய் அமையும் என்று சொல்லவியலுமா என்ன?


உலகிலுள்ள அத்தனை வாசகர்களாலும் நான் அறியப் பட்டாலும்கூட கைகளால் அற்புதமான தொரு மண் குடுவையை வெகு அநாயாசமாய் உருவாக்கும் மாயக் கைவினைக் கலைஞர்களுக்கு நான் யாரோ தானே? ! கண்களையுருட்டியுருட்டி வெகு இயல்பாய் இட்டுக்கட்டி கதைசொல்லும் குழந்தைகளுக்கு நான் யாரோதானே!


இத்தனை ஆண்டுகாலம் இலக்கியப்பணி(?) செய்துள்ள இவரைப் பற்றி யாருமே பேசுவதில்லையேஎன்று என் பொருட்டு ஆதங்கத்தோடு எழுதுபவர்களுக்கு:


இத்தனை ஆண்டுகாலம் இலக்கியப்பணி(?) செய்துள்ள எத்தனை பேரைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன்?


நான் மொழிபெயர்த்துள்ள தரமான கவிஞர்களைக் காட்டிலும் நான் மொழிபெயர்க்காத தரமான கவிஞர் களின் எண்ணிக்கை அதிகமல்லவா?


இதில் யாரை யார் குறை சொல்வது?


குறை சொல்ல என்ன அவசியம்?


I COULD BE BOUNDED IN A NUTSHELL என்று விரியும் ஹாம்லெட்டின் வாசகம் நினைவுக்கு வருகிறது.


ஹாம்லெட்டை அலைக்கழிக்கும் கொடுங்கனவு களும் எனக்கில்லை.


நான் எழுதிய கவிதைகளில், சிறுகதைகளில் நிறை வானவை எவை, அரைகுறையானவை எவை என்று ஒரு வாசகராக எனக்குத் தெரியும். எழுதும்போது கிடைக்கும் நிறைவு, நிவாரணம் மனதைச் சுத்திகரிக்கும்.


வேறென்னவேண்டும்?

 

 

 

No comments:

Post a Comment